இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் யாழிலும், வவுனியாவிலும் போராட்டம்

39
93 Views

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், மதிய உணவு இடைவேளை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்று ஆளுநருக்கான மகஜரினை கையளித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கமைய வங்கி ஊழியர்களின் பயிற்சிக் காலத்தை 2 வருடங்களுக்கு மட்டுப்படுத்துக ,
அதிகாரிகளே பயிற்சிக் காலத்தினை நீடித்து வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக ,

அதிகாரிகளே வங்கி ஊழியர்கள் உயிர் வாழ்வதற்கேற்ற ஓய்வூதியக் கொடுப்பனவை உடனே நிறுத்துக மற்றும் பிரதமரின் உத்தரவிற்கமைய இலங்கை வங்கியின் பயிலுநர் ஊழியர்களை 2 வருடங்களில் நிரந்தரமாக்குக என வாசகங்கள்  எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வங்கி ஊழியர்களிற்கான ஓய்வுதியத்திட்டம் தொடர்பான பிரச்சனை, வங்கி ஊழியர்களின் பயிற்சிகாலத்தினை  இரண்டு வருடங்களாக மட்டுப்படுத்துதல், மற்றும் இலங்கை மர்ச்சன்ட் வங்கியின் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
”குறித்த விடயங்களை தீர்ப்பதற்கு மிகவும் தெளிவான முறையில் பிரதமரால் தீர்வுகள் முன்வைக்கப்பட்ட நிலையிலும் அதுசெயற்ப்படுத்தப்படவில்லை,
இவற்றை வலியுறுத்தி நாம் அந்தந்த வங்கிகளின் நிர்வாகத்தரப்புகளுடன் பலசுற்று கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தாலும், பிரதமரால் வழங்கப்பட்ட தீர்வுகளை செயற்படுத்துவதற்கு பதிலாக பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டு காலங்கடத்தப்பட்டு வருகின்றமையால், ஊழியர்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. எனவே குறித்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்” என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பிரதமர் உறுதியளித்து எட்டுமாதங்கள் ஆகியும் ஓய்வூதியம் எங்கே, இணக்கம் தெரிவிக்கப்பட்ட 96 இன் பின்னரான ஓய்வூதிய திருத்தங்களை உடனே செயற்படுத்துக, பயிற்சிக்காலத்தை இரண்டு வருடங்களிற்கு மட்டுப்படுத்துக, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here