இலங்கைக்கு கறுப்பு “பெயிண்ட்” அடிக்கும் பெளத்த தேரர்கள்-மனோ கணேசன் குற்றச்சாட்டு

கறுப்பு ஜூலை புகழ் கொண்ட ஒரு தேரர் உட்பட பெளத்த தேரர்களின் குழு மூன்று பிரேரணைகளை தேசிய அரங்கில் முன் வைத்துள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது  முகநுால் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என பௌத்தமதகுருமார் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.

புதிய அரசமைப்பிற்கான யோசனைகளை சமர்ப்பித்துள்ள பௌத்தமதகுருமார்கள் குழுவொன்று நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பௌத்தமதகுரு ஒருவர் நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிங்களமே உத்தியோகபூர்வ மொழியாக காணப்படவேண்டும், ருகுணு பிஹிட்டி மாயா என்ற அடிப்படையில் பிரதேசங்கள் பிரிக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் தனது முக நுாலில் கருத்து பதிவிட்டுள்ள மனோ கணேசனின்,

“கறுப்பு ஜூலை புகழ் கொண்ட ஒரு தேரர் உட்பட பெளத்த தேரர்களின் குழு மூன்று பிரேரணைகளை தேசிய அரங்கில் முன் வைத்துள்ளது.

1)நாட்டின் பெயரை “சிங்களே” என மாற்றனும்.
2)அதிகார பரவலாக்கம் வேண்டவே வேண்டாம்.
3)சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி.

அதாவது இந்த தேரர்கள் மறைமுகமாக, “உங்களுக்கு இங்கு இடமில்லை. தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள்” என தமிழர்களுக்கும், “அதற்கு உதவுங்கள்” என சர்வதேச சமூகத்துக்கும் கூறுகிறார்கள் என நினைக்கிறேன்.

ஆகவே, இந்த தேரர்கள்தான் இன்று இலங்கையின் பிரதான பிரிவினைவாதிகள். மீண்டும், மீண்டும், இலங்கைக்கு கறுப்பு “பெயிண்ட்” அடிக்கிறார்கள்..! என்று குறிப்பிட்டுள்ளார்.