‘அன்பினாலும் மனச்சாட்சியினாலும் அமைதிக்கான பண்பாட்டை உருவாக்குங்கள்’ – ஐக்கிய நாடுகள் சபை அழைக்கிறது – சூ.யோ.பற்றிமாகரன்

னைத்துலக மனச்சாட்சித் தினம் – 05.05.2021

(இவ்வழியில் உழைத்த ஈழத்தவர் இருவரின்  நினைவுகள்) 

மார்டின் லூதர்கிங் வழியில் உழைத்த தந்தை செல்வநாயகம்

ஏப்ரல் 4ஆம் திகதி அனைத்துலக கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான அனைத்துலகத் தினங்களைத் தொடங்கும் ஐக்கிய நாடுகள் சபை; ஏப்ரல் 5ஆம் திகதி அனைத்துலக மனச்சாட்சித் தினத்தைக் கொண்டாடுகிறது. அனைத்துல கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்தில் மனிதர்களினதும், உயிரினங்களிதும் வாழ்வினை அழிக்கும் இத்தகைய ஆயுதங்களைச் செய்யாது பாதுகாக்கவும், இப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பங்காளர்களாக உலகினர் வாழவும், இத்தகைய ஆயுதங்களால் பாதிப்புற்றவர்களின் வாழ்வை முன்னேற்றவும் ஐக்கிய நாடுகள் சபை அழைக்கிறது. உண்மையில் ஏப்ரல் 4ஆம் திகதியன்று ஈழத்தமிழர்கள் எல்லோருக்கும் தங்கள் தாயகத்தில் கண்ணிவெடிகளுக்குள் சிக்கி உயிரிழந்தோர் நினைவுகளும் காலிழந்தும் வாழ்வுக்காக நம்பிக்கையோடு போராடிக்கொண்டிருக்கும் போராளிகளினதும், பொது மக்களதும் எண்ணங்களும் அவர்களுடைய மனச்சாட்சியில் எழுவது இயல்பு. உயிரினை அர்ப்பணித்தவர்கள் நோக்கு நிறைவேறவும், காலிழந்து வாழ்பவர் உடல்வலுவற்றவர் என்ற எண்ணமின்றி வாழ்வில் சிறந்து வாழவும் உழைப்பதற்கான திட்டங்களையும், முயற்சிகளையும் நிதியளிப்புக்களையும் செய்ய வேண்டிய பெரும் பொறுப்புள்ளவர்களாக உலகத் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதே வேளை ஏப்ரல் 5ஆம் திகதி அன்று அனைத்துலக மனச்சாட்சித் தினத்தில் மார்ட்டின் லூதர் கிங் (15.01.1929 – 04.04.1968) அவர்கள் அமெரிக்க நிறமக்களின் உரிமைகளுக்காகப் போராடிய உறுதியும், வோசிங்டனில் 28.08.1963இல் 250000 மக்கள் முன்பாக நிகழ்த்திய “நான் ஒரு கனவு காண்கிறேன்” என்னும் அவருடைய உலகப் புகழ்பெற்ற உரையினால் உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு அவர் அளித்த, போராடுவதற்கான சக்தியும் அளப்பரியது. ஈழத்தமிழரின் அரசியல் தலைவராக 1947 முதல் 1976வரை அரும்பணியாற்றிய சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (31.03.1898 – 26.04.1977)  அவர்கள் அவருடைய கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிறு மறைஉரைகளின் பொழுது மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வன்முறை மறுப்பு போராட்டங்களைக் கேட்டறிந்து, அவற்றால் ஈர்க்கப்பட்டு ஈழத்தமிழர்களின் அரசியலில் வன்முறை மறுப்பு அரசியல் போராட்டங்களை முன்னெடுத்ததும் 1956ஆம் ஆண்டு சிங்களம் அரசகரும மொழியாக்கப்பட்டு, தமிழர்களின் வாழ்வியல் உரிமை மொழிவழி மறுக்கப்பட்ட பொழுது காலிமுதகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கப்பட்டது.

அன்று முதல் 1960களில் தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தையே செயற்பட விடாது மூன்று மாதங்கள் தடுத்து நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் சிங்களப் படைகளால் வன்முறையால் முறியடிக்கப்படும் வரை வன்முறையற்ற அரசியல் போராட்டத்தால் ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஈழமக்களுக்கு இருந்தது. ஆயினும் அமெரிக்க அரசியல் கலாச்சாரம் வேறு. சிங்கள பௌத்த பேரினவாத தமிழின அழிப்பு அரசியல் கலாச்சாரம் வேறு என்பதைப் பரிந்து கொள்ளாமையே  தமிழர்களின் அரசியல் பின்னடைவுக்கான வரலாற்றுக் காரணிகள் என இன்று வரை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தந்தை செல்வநாயகம் அவர்களும் இதனை தனது சனநாயகப் போராட்டங்கள் தந்த அனுபவத்தின் வழி உணர்ந்தமை வரலாறு.  இலங்கைத் தமிழர்களின் இறைமையைச் சிங்களவர்களின் இறைமையுடன் சோல்பரி அரசியல் அமைப்பின் 29(2) ஆவது நிபந்தனையின் கீழ் இணைத்து ஒற்றையாட்சிப் பாராளுமன்றதில் ஆட்சி பெற வைத்த நிலையில், அந்த அரசியலமைப்பை வன்முறைப்படுத்தி, 22.05.1972இல் தன்னிச்சையான முறையில் சிங்கள பௌத்த சிறீலங்காக் குடியரசை சிங்கள பௌத்த பேரினவாதிகள் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழர்களை நாடற்ற தேச இனமாக்கினர்.  இதனை எதிர்த்து தந்தை செல்வநாயகம் அவர்கள் தனது காங்கேசன்துறைப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இராஜினமாச் செய்து, சிறீலங்கா குடியரசை இலங்கைத் தமிழர்கள் ஏற்கின்றார்களா என்ற அடையாள குடியொப்பமாக அத்தேர்தலை நடாத்தும்படி சிங்கள அரசுக்குச் சவால் விடுத்தார். இத்தேர்தலில் 16000 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றதை அடுத்து தமிழீழத் தேசத்தை மீளநிறுவுமாறு 07.05.1975இல் மக்களுக்கு பின்வரும் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

“வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து அந்நியராட்சி ஏற்படும்வரை சிங்களவர்களும் தமிழர்களும் இந்த நாட்டின் வேறு வேறான இறைமையுள்ள இரு மக்கள் இனங்களாகவே இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ் மக்கள் சுதந்திரப் போரில் தங்கள் விடுதலையை மீளப்பெறலாம் என்னும் முழு நம்பிக்கையுடனேயே போராடினார்கள் என்பதை நினைவிருத்த விரும்புகிறேன். கடந்த 24 ஆண்டுகளாக சிங்களவர்களுடன் சமத்துவமான முறையில் ஒன்றுபட்ட இலங்கையுள் எங்களுடைய அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எம்மால் இயன்ற ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொண்டோம். துக்கரமான உண்மையென்னவென்றால், சுதந்திரத்தின் மூலம் தங்கள் மேல் பொழியப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாமே எங்களுடைய அடிப்படை உரிமைகளை மறுத்து எங்களை அடிமை மக்கள் என்ற நிலைக்குச் சிறுமைப்படுத்தியுள்ளன. தமிழர்களுடையவும் சிங்களவர்களுடையவும் இறைமை பொதுவாக வைக்கப்பட்டதினாலேயே இந்த அரசாங்கங்கள் இவ்வாறு தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றன. இத்தேர்தல் தீர்ப்பின் அடிப்படையில் நான் எனது மக்களுக்கு தமிழீழ மக்களாகிய அவர்கள் தங்களின் விடுதலையைப் பெற்றேயாக வேண்டும் எனவும், அதற்காகத் தமிழர் கூட்டணி செயற்படும் எனவும் உறுதியளிக்கிறேன்”.

இந்தப் பிரகடனத்தைப் பின்னர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தி பாராளுமன்றத்தில் இருந்து தானும் தன் கட்சியின் பிரதிநிதிகளும் வெளியேறியமை வரலாறு. இதுவே தமிழீழ தேசம் என்னும் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் தமிழர்கள் தங்களின் பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்கள் தேசியத்தைக் காத்து நாளாந்த வாழ்வில் காணப்பட்ட இனங்காணக்கூடிய அச்சத்தை எதிர்த்து, ஆயுத எதிர்ப்பை முன்னிலைப்படுத்திய நடைமுறை அரசை உருவாக்கி முப்பத்தியேழு ஆண்டுகள் நாட்டுக்குள் நாடு என்ற நல்லாட்சியை நடத்தினார்கள். அதற்கான அனைத்துலக அங்கீகாரத்தில் ஏற்படுத்தப்பட்ட காலதாமதமே ஈழத்தமிழினம் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பை அனுபவிக்கும் வரலாற்றுத் துன்பத்தைக் கொடுத்தது.

இன்றும் ஈழத்தமிழினத்தின் வெளியக தன்னாட்சி உரிமை அனைத்துலகத்தால் அங்கீகரிக்கப்படாத நிலை அவர்கள் இனஅழிப்புக்கான ஆபத்தை எதிரிநோக்கிய மக்களாகவே வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பதே நடைமுறை உண்மை.