ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கம்: மலையக மக்களுக்கு இழைக்கப்படும்  துரோகம் – இராதாகிருஷ்ணன்  

ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு

” இலங்கையில் மத்திய மாகாணத்தில் 522 தமிழ் பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 222 தமிழ் பாடசாலைகளும் உள்ளன. இவ்விரு மாகாணங்களிலும் தமிழ்மொழி மூல கல்வி மேம்பாட்டுக்காக தமிழ் கல்வி அமைச்சுகள் உருவாக்கப்பட்டிருந்தன. 1988 இல்தான் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மலையக மக்களுக்கானதொரு உரிமையாக இவை கிடைக்க பெற்று வந்தன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இன்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு இல்லாது செய்யப்பட்டது. தற்போது ஊவா மாகாணத்திலும் தமிழ்க் கல்வி அமைச்சும் பறிக்கப்பட்டுள்ளது. இது பெருந்தோட்ட மக்களுக்கு செய்யப்படும் அநீதியாயம். மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.

தமிழ்க் கல்வி அமைச்சு இருந்தால் கல்விப்பணிப்பாளர் நியமனம், ஆசிரியர் நியமனம், சிற்றூழியர் நியமனம் பல பல விடயங்களை செய்யலாம். தமிழ்மொழி மூல கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். தற்போது அந்த அமைச்சு இல்லாமல் செய்யப்பட்டமையானது கல்வி வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.” – என்றார்.

அதேவேளை, நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என தோட்ட துரைமார் இன்று வலியுறுத்திவருகின்றனர். பல நெருக்கடிகளை நிர்வாகம் கொடுத்துவருகின்றது. எனவே, ஆயிரம் ரூபாவை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும்.” என்றார்.