தமிழர்கள் தம் தேசத்தைக் காக்க விடுதலை வேட்கை தீயை அணையாமல் பாதுகாப்பது அவசியம் – மட்டு.நகரான்

49
75 Views

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் தேசியம் சார்ந்த கோசங்கள் என்பது எழுந்தமானமாகவோ அல்லது தமிழர் தாயகப் பரப்பில் அரசியல்செய்து புழைப்பு நடாத்துவதற்காக எழுந்த ஒன்று அல்ல. அது தமிழர் தாயகப் பகுதியில் பெரும்பான்மைய சிங்கள பௌத்த மேலாதிக்கம் கொண்டவர்களினால் தமிழர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டபோது எழுந்த தீச்சுவாலையாகும்.

இந்த தீச்சுவாலையானது காலத்திற்கு காலம் மாறுபட்ட சுடராக இருக்கின்றபோதிலும், சுவாலையின் கனதியென்பது குறையாத நிலையிலேயே இருந்து வருகின்றது. அதற்கு சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்சியான நெருக்குவாரங்கள் காரணமாக அமைகின்றன.

ஆயுதப்போராட்டமாக இருக்கலாம், அகிம்சை போராட்டமாக இருக்கலாம் அந்த போராட்டங்கள் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியாகவும் முன்னெடுக்கப்படும்போதே அந்த போராட்டத்தின் வெற்றி என்பது தீர்மானிக்கப்படுகின்றது. வெறுமனே சுயநலனுக்காகவும், சுய தேவைகளுக்காகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமானால் அது தமிழர் நலனுக்கான முன்னெடுக்கும் அனைத்துவித செயற்பாடுகளையும் கேள்விக்குறியாக்கும் நிலையேற்படும்.

நாங்கள் இன்று நிற்கின்ற கால சூழ்நிலையென்பது தமிழ் சமூகத்திற்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாகவும், உக்கிரமான போராட்டத்தின் காலசூழ்நிலைகளைக்கொண்ட காலமாகவுள்ளது. இந்த கால சூழ்நிலையில் எமது போராட்டம் சார்ந்த செயற்பாடுகளை எவ்வாறு முன்நகர்த்தப் போகின்றோம் என்பது தொடர்பில் சிந்திக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கினைப் பொறுத்தவரையில், இன்று இளைஞர்கள் மத்தியில் பல்வேறு வகையான மூளைச்சலவை செய்யப்படுகின்றது. குறிப்பாக அபிவிருத்தி அரசியல், முஸ்லிம்கள் மீதான விமர்சனங்கள் போன்றவற்றினை இனமுரண்பாட்டான வகையில் முன்னெடுத்தல், தனிப்பட்ட தேவைப்பாடுகளை பூர்த்திசெய்தல் என பல்வேறு வகையான செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் தேசிய போராட்டங்களுக்கு எதிரான வகையிலான செயற்பாடுகள் அதற்கு எதிர்ப்பு இருப்பதாக காட்டுவதற்கான முயற்சிகள் தீவிர நிலையடைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையிலேயே தமிழர்கள் அகிம்சை ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழல் அதிகளவில் காணப்படுகின்றது.

குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் இன்று சிங்கள பேரினவாத அரசின் புலனாய்வுத்துறையினர் ஊடுருவி சென்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலையுள்ளது.இன்று தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் அமைப்புகள், அரசியல் கட்சிகளிலும் தமது உளவாளிகளை இலகுவில் அரசாங்கம் புகுத்தியுள்ளது. இதன் காரணமாகவே பெரும்பாலான தமிழ் தேசிய பரப்பிலான போராட்டங்களை முடக்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியத்தினை முன்னிறுத்தி முன்னெடுக்கும் போராட்டங்களை முடக்குவதற்கு தீவிரமான முயற்சிகளை முன்னெடுத்துவருவது தொடராக நடைபெற்று வருகின்றது.

வடக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கும்போது அதனை அனுமதித்து அதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேநேரம் கிழக்கில் போராட்டங்கள் நடைபெறுவதை முற்றாக தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாகவும் இரகசியமான முறையிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் மற்றும் அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆகியவை தொடர்பில் இன்று கிழக்கில் புலனாய்வுத்துறையும் காவல்துறையும் தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையொன்றை முன்வைத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவேண்டி முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின்போது பல்வேறு இடையூறுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், போராட்டங்களை தடுப்பதற்கு சட்ட ரீதியாகவும் சட்ட ரீதியற்ற முறையிலும் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று மட்டக்களப்பில் போராட்டம் நடாத்தப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட கூடாரம் எந்தவித அறிவுறுத்தலும் வழங்காமல் அதிகாலையில் கள்வர்கள்போல் எடுத்துச்செல்லப்பட்டது. அதேபோன்று போராட்டம் நடாத்தப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டிருந்த பதாகைகளும் காவல்துறையினரால் பல தடவைகள் அகற்றப்பட்டிருந்தது. இதேபோன்று நீதிமன்ற கட்டளையினை காட்டி போராட்டத்தினை முடக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் வீடுகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்கள் வெளியேறிச் செல்லமுடியாத நிலையேற்படுத்தப்பட்டதாக போராட்ட காலத்தில் செயற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு அச்சப்படுமளவுக்கு அவர்கள் மீதான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அவர்கள் வெளியில் செல்வதென்றால் தங்களிடம் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும் எனவும், தங்களிடம் விண்ணப்பம் ஒன்று உள்ளதாகவும் அதில் செல்லும் இடங்களை பூர்த்திசெய்து தருமாறும் மிரட்டல்கள் விடப்பட்டன.

இதேபோன்று தமிழ் தேசிய கட்சிகளின் செயற்பாட்டாளர்களாகவுள்ளவர்களையும் தடையுத்தரவுகளைக் கொண்டு முடக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இளைஞர்கள் போராட்டக் களத்திற்கு செல்லமுடியாதளவுக்கு கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவிக்க முடியாதளவில் அழுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறான நிலையிலேயே இன்று தமிழ்தேசிய பரப்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளை தாண்டி அகிம்சை ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய அவசியமும் கட்டாயமும் தமிழ் சமூகத்திற்கு உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியை காரணம் காட்டியும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தும் தமிழ் தேசிய பற்றுடன் உள்ள இளைஞர்களை திசைதிருப்பும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக பரவலாக முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் இளைஞர்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்குக்கான ஆடம்பர செயற்பாடுகள் வழங்கப்பட்டு அவர்களை தமிழ் தேசியம் தொடர்பாகவோ அது தொடர்பான ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலோ சிந்திக்காத வகையிலான செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களை சிங்கள அரசாங்கம் முறையாக செயற்படுத்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய பரப்பில் செயற்படுவோர் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் என தமிழ் தேசியத்திற்கு எதிராக பரந்து விரிந்துள்ள செயற்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சிந்தித்து நகர்வுகளை முன்னெடுப்பது மிகவும் அவசியமாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசிய கட்சிகள் அக்கறையோ அதனை முறியடிப்பதற்கான திட்டமோ மேற்கொள்ளாமல் வெறுமனே தமது வங்குரோத்து அரசியல் செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுத்துவருவது மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.

குறிப்பாக கிழக்கினைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பலமான தமிழ் தேசிய அரசியல் கட்டமைப்பாக உள்ளபோதிலும் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் முன்னெடுக்கப்படும் சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அக்கறையற்ற நிலையிலேயே இருந்து வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இளைஞர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படும் மூளைச்சலவை வேலைத்திட்டங்கள் குறித்து மாற்றுத் திட்டங்களோ அவற்றினை முறியடிப்பதற்கான வேலைத்திட்டங்களோ இல்லை. ஆனால் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சென்று மாலைபோடுவதும் கூட்டங்களுக்கு சென்று கலந்துரையாடுவதுமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் இருந்து வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் செயற்பாடுகள் வலுவிழந்து செல்லும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற நிலைமையினையும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை குழிதோண்டி புதைக்கும் நிலைக்கு இட்டுச்செல்லும்.

இவற்றினையெல்லாம் கடந்து வடகிழக்கு இணைந்த தாயகப்பரப்பில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் நிலையேற்படுத்தப்படும் வரைக்கும் தமிழர்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கவேண்டியது கட்டாயம். அதனை செய்யவேண்டிய கடமை தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் உள்ளது. இந்த கடமையினை உணர்ந்து எதிர்காலத்தில் செயற்படும்போதே இலக்கினை அடையமுடியும்.

இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கமாட்டாது என்பதை சொல்லிக்கொண்டிருப்பதை விட எதிர்காலத்தில் இதன்மூலம் தமிழர்களின் தேவையினை எவ்வாறு நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்குள் இருக்கின்ற வேட்கை தீயை அணையாமல் பாதுகாப்பதும், அதனை எதிர்கால சமூகம் சிறந்த முறையில் பயன்படுத்துவதும் எமது அனைவரது கைகளிலும் ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய கடமையாகும். இதனை அனைவரும் உணர்ந்து செயற்படுத்த முன்வரவேண்டும் என இந்தவேளையில் கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here