காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை  கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) – திருமதி. கோகிலறமணி

திருமலைதிருமதி. கோகிலறமணி இலக்கு மின்னிதழுக்கு  வழங்கிய  சிறப்பு நேர்காணல்

தமிழினத்தின் அடையாளங்களை அழிப்பதே பேரினவாதத்தின் பிரதான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகும். தமிழினம் தாயகத்தின் பாரம்பரியத்தினைக் கொண்ட இனம் என்ற வரலாற்று உண்மைகள், தடையங்களை அழிப்பதோடு பேரினவாத அடையாளமாக முன்னிறுத்துவதும் சிங்கள, பௌத்த மாற்று அடையாளங்களை இலங்கை தீவு எங்கும் நிறுவுதைக் கொண்ட நிகழ்ச்சி நிரலே போர் நிறைவடைந்து தற்போது பத்தாண்டுகளாகின்ற நிலையில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றது.

பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலில் கடந்த பத்து வருடங்களில் திருமலையில் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமாக பாழடைந்துவரும் மிக நீண்ட வரலாற்று ஆதாரமான கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து தடுக்கப்பட்டே வந்திருந்தன. தற்போது ஒருபடி மேலே சென்று கடந்த 21ஆம் திகதி அப்பிள்ளையார் ஆலயப்பகுதியை கிண்டிக்கிளறி கிணற்றில் போட்டு மூடுமளவிற்கு நிலைமைகள் சென்றுள்ளன.IMG 20190523 WA0003 காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை  கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) - திருமதி. கோகிலறமணி

முன்னதாக, தற்பேதைய வில்கம் விகாரை காணப்படுகின்ற பிரதேசம் மன்னராட்சிக் காலத்து சிவன் கோவில் என்பதும் தேரர்களின் தந்திரத்தினால் காலப்போக்கில் அது வில்கம் விகாரையாக மாற்றப்பட்டதாகவும் திருக்கோணமலை மூத்த தமிழர்களால் கூறப்படும் வாய்மொழிக்கதையொன்றும் இல்லாமில்லை.

அப்படியிருக்க, வில்கம் விகாரதிபதிகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் பலமாதங்களுக்கு முன்னரே மெதுவாக ஆரம்பித்தாகிவிட்டது. கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைப்பதற்காக நிதி சேகரிப்பு நிலையம் ஒன்றை வில்கம் விகாரை பௌத்த பிக்கு ஒருவர் நடாத்த ஆரம்பித்திருந்தார்.

அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியின் பின்பக்கத்தில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து பார்க்கின்றபோது கன்னியா பிள்ளையார் கோவிலை அகற்றி அந்த வரலாற்றுப்பகுதியை கையகப்படுத்துவதற்கு வர்த்தமானி அறிவிப்பினையும் விடுத்து சிறீலங்கா அரசாங்கமும் துணைபோயிருக்கின்றது என்பது வெளிப்படையாகின்றது.

இந்நிலையில் கன்னியா மடத்தடி முத்துமாரி ஆலயத்தின் அறங்காவலரும், பிள்ளையார் கோவில் அமைந்திருக்கும் கன்னியா காணி உரிமையாளருமான திருமதி,க.கோகிலறமணி அம்மா அவர்களை நேரடியாக சந்தித்து நிைலமைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம். அப்போது இலக்கு மின்னிதழுக்கு அவர் வழங்கிய  சிறப்பு பேட்டிff 1 காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை  கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) - திருமதி. கோகிலறமணி

கேள்வி:- பிள்ளையார் கோவில் மற்றும் காணி உரிமம் பற்றி கூறுங்கள்?

பதில்:- கன்னியா காணியானது எனது பேரனான செல்லையா மணியம் அவர்களுக்கு ஆங்கிலேயர்களால் பரிசாக வழங்கப்பட்டது. 1833ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் இதற்கான உறுதியும் வழங்கப்பட்டள்ளது. எனது பேரன் 1964ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதுவரையில் அவரே இதனை பராமரித்து வந்திருந்தார். அதன் பின்னர் எமது குடும்பத்தினரே பரம்பரைபரம்பரையாக பராமரித்து வருகின்றோம். கன்னியா காணியானது 8ஏக்கரும் 22பேர்ச்சஸ் பரப்பினைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்தக்காணியின் பின்பகுதியில் வெந்நீர் ஊற்று உள்ளது. அங்கு உள்ளுர், வெளியூர் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். பௌத்த தேரர்கள் முதலில் அதனையே ஆக்கிரமித்தனர். பின்னர், எனக்குச் சொந்தமான இந்த பகுதியில் எமது இந்து மக்கள் 31ஆம் நாள் உள்ளிட்ட அந்தியேட்டி கிரியைகளை செய்து வந்தனர்.

இப்படியிருக்க 2002ஆம் ஆண்டு இக்காணியில் இருந்த பிள்ளையார் கோயிலின் ஒருபகுதியை இடித்து பௌத்த விகாரையை அமைப்பதற்கு முனைந்தார்கள். அச்சமயத்தில் நான் போராட்டங்களை நடத்தி அதனை தடுத்திருந்தேன்.

எனினும் அக்காலப்பகுதியில் பாரம்பரிய வரலாற்று இடத்தினை டோசர் மூலம் உடைத்து விட்டதாக பொய்யான குற்றம் சாட்டப்பட்டு உப்புவெளி காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆதரவுனும், தேரர்களின் பின்னணியுடனும் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் எனது தாயாரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினார்கள். அவர் பத்தாயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதோடு குறித்த வழக்கு நான்கு வருடங்களாக நடைபெற்றது. எனினும் வில்கம் விகாரதிபதி இந்த வழக்கின் நேரடி சாட்சியமாக இருந்தபோதும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததன் காரணமாக பொய்வழக்கு எனக்கூறப்பட்டு ஆலய அறங்காவலராக இருந்த எனது தாயார் விடுவிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கேள்வி:- தொல்பொருள் திணைக்களம் இந்த இடத்தினை எப்படி பொறுப் பேற்றது?

பதில்:- அவர்கள் பொறுப்பேற்றகவில்லை. வழக்கு தள்ளுபடியாகியவுடன் அடுத்த கட்டமாக இந்தக்காணியை கைப்பற்றுவதற்கு திட்டமொன்று இட்டார்கள். நாங்கள் ஒருநாள் காணியைப் பார்க்க வருகின்றபோது காணியில் தொல்பொருள் பகுதி என்று அறிவித்தல் விடுக்கும் பலகையொன்று நாட்டப்பட்டிருந்தது. தொல்பொருள் திணைக்களம் இதனை கையகப்படுத்தவதாக இருந்தால் எமக்கு அறிவித்திருக்க வேண்டும். உத்தியோக பூர்வமான ஆவணங்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் எதனையும் வழங்காது ஆட்சியாளர்களின் துணையுடன் வர்த்தமானியில் பிரசுரித்துவிட்டு அறிவித்தல் பலகையை மட்டுமே இட்டிருந்தார்கள். இவ்வாறு அவர்களால் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை கையகப்படுத்த முடியாது. இருப்பினும் அவர்கள் அவ்வாறு செய்யாது, பிள்ளையார் கோவில் இருந்த வரலாற்று மேடைப்பகுதியை அண்மித்த இடங்களில் எல்லாம் ஆய்வு என்ற பெயரில் தோண்ட ஆரம்பித்தார்கள். அதனை தனியாக எல்லையிடவும் செய்தார்கள். இதற்கு பின்னணியில் வில்கம் விகாரையின் விகாரதிபதியே காரணமாக இருக்கின்றார்.

கேள்வி:- நீங்கள் விகாரதிபதியுடன் பேச்சுக்களை நடத்தினீர்களா?

பதில்:- ஆம், அவர் பலதடவைகள் என்னை வந்து சந்தித்துள்ளார். அவருக்கு என்னிடம் உள்ளஆதாரங்களை முன்வைத்து விடயங்களை புரிய வைத்துள்ளேன். எனினும், அவர் இந்த பகுதியை தமக்கு விற்பனை செய்யுமாறே வலியுறுத்தினார். அதுமட்டுமன்றி சில அரசியல்வாதிகள் கூட பல கோடிகளை வழங்குகின்றோம். அந்த பகுதியை விட்டுவிடுங்கள் என்று கோரினார்கள். அவர்களின் பெயர்களை நான் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசியல்வாதிகளே இப்படி இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றபோது கவலையாக உள்ளது. மேலும் 1985ஆம் ஆண்டு பிள்ளையார் ஆலயம் பதிவு செய்ததற்கான ஆதராங்களும் உள்ளன.

கேள்வி:- அடுத்து என்ன செய்வதாக உள்ளீர்கள்?

பதில்:- நான் ஒரு இந்து சமயத்தினை பின்பற்றும் நபர். எனது ஆகமத்தின் வரலாற்றுத் தொன்மம் வாய்ந்த பகுதியை பணத்திற்காக விற்பனை செய்வதற்கு தயாரில்லை. எத்தனை கோடிகளை வழங்கினாலும் அதனை விற்பனை செய்யப்போவதில்லை. பிள்ளையார் கோவிலை கிளறி பிள்ளையாரை அரசமரத்தின் கீழ் தற்போது வைத்துள்ளார்கள். நான் நீதிமன்றத்தினை நாடுவேன். எனது ஆதாரங்களை மன்றில் சமர்ப்பிப்பேன். விகாரதிபதி முடிந்தால் நீதிமன்றில் முன்னிலையாகி பதிலளிக்கலாம். நீதி கிடைக்கும் வரையில் போராடுவேன். எனக்கு பலம் சேர்த்து என்னுடன் கைகோர்த் திருக்கும் ஏனைய மத, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். சத்தியம் ஒருநாள் வெல்லும். பௌத்தத்தினை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதனை திணிப்பதையும் அதன் பெயரால் எமது இந்து பாரம்பரியத்தினை கையகப்படுத்த முயற்சிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். எனது மூச்சு இருக்கும் வரையில் போராடுவேன்.

கேள்வி:- தமிழ்த்தலைமையும் இந்த மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்ப டுத்துவதாக இருக்கின்ற நிலையில் அவருடன் பேச்சுக்களை நடத்தினீர்களா? இந்து கலாசார அமைச்சர் மனோகணேசனின்  சந்திப்பு எப்படி இருந்தது?

பதில்:- இந்த விடயம் சம்பந்தமாக நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த விடயத்தினை மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றேன். ஆனால் அதில் அவர்களின் அக்கறை அதிகமாக இருந்திருக்கவில்லை. தற்போதைய சம்பவத்தின் பின்னர் அமைச்சர் மனோக ணேசனை சந்தித்திருந்தேன். அவரிடத்தில் இந்த பகுதியின் பாரம்பரியத்தினை கூறி மீண்டும் பிள்ளையார் ஆலயத்தினை அமைப்பதற்கு உதவியளிக்குமாறும், பௌத்த ஆக்கிரமிப்பையும், தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பையும் உடன் நிறுத்து மாறும் கோரியுள்ளேன்.