இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணை – வலியுறுத்துகிறது கனடிய எதிர்க்கட்சி

69
143 Views

கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்காவில் பாரிய மனித உரிமைக்குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீதான பயணத்தடையை விதிக்குமாறு கனடிய லிபரல் அரசைக் கோரியுள்ளது. கனடாவில் நடைமுறையில் உள்ள மக்கன்சி சட்டவிதிகளின் பிரகாரம் அதனை உடன்செய்யுமாறு அது வலியுறுத்துகிறது. இச்சட்டவிதிகள் சம்மந்தப்பட்டவர்கள் மீதான மேலும் பல நடவடிக்கைகளுக்கும் வலிகோலும் என்பதுவும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

கன்சவேட்டிவ் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான நிழல் அமைச்சர் மைக்கல் சொங்கும், சர்வதேச அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்கான நிழல் அமைச்சர் கார்னட் ஜீனியசும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அவ்வறிக்கையில், தாம் இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதை நினைவுகூர்ந்துள்ள அவர்கள், ரூடோ தலைமையிலான லிபரல் அரசு அது குறித்து அமைதி காப்பது குறித்து தமது விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

2019 இல் இறுதியாக நடைபெற்ற கனடிய பொதுத்தேர்தலுக்கு முன்னர், கனடியப் பாராளுமன்றத்தில், ஜக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தமிழர் இனப்படுகொலை குறித்து சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டும் என, ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற தீர்மானத்தை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி, அது குறித்து மேலதிக நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்தில் ஜெனீவாவில், சிறீலங்கா குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த காலங்களை விட முன்னேற்றகரமாக அமைந்தாலும், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் மீதான சுயாதீன சர்வதேச விசாரணையையோ அல்லது ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்களையோ அது உள்ளடக்கவில்லை, எனவும் கரிசனை வெளியிட்டுள்ளது கனடிய எதிர்கட்சி.

சிறீலங்கா அரசாங்கம் உள்நாட்டில் பொறுப்புக்கூறல் விடயத்தில், எவ்வித முன்னெடுப்புக்களை செய்வதற்கான முறைமைகளையோ, விருப்பையோ, கொண்டிக்கவில்லை என்ற ஆணையாளரின் கூற்றை சுட்டிக்காட்டியுள்ள கனடிய எதிர்க்கட்சி, இந்நிலையில் அவர் கோரிக்கைகளுக்கு அமைய, அடுத்த கட்ட நடவடிக்கைகளை கனடிய அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுளளது.

சிறீலங்கா அரசு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தமிழர்கள் மீது சமீபத்தில் விதித்துள்ள தடைகள் குறித்து தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ள அறிக்கை, மனித உரிமைகளை முன்னேற்ற தொழிற்படும் கனடிய தமிழர் அமைப்புக்களின் நியாயபூர்வமான விமர்சனங்களை, தடைகள் மூலம் எதிர்கொள்வது முறையல்ல எனவும் கடிந்துள்ளது.

சிறீலங்காவில் தற்போது நிலவும் பல நிலைமைகளை தனது அ;றிக்கையில் குறிப்பிட்டு, அவை குறித்து தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ள கனடிய எதிர்கட்சி, அதில் சமீபத்தில் இடித்தொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி விடயத்தையும் நினைவு கூர்ந்து, போரில் கொல்லப்பட்டவர்களுக்கான பொதுமக்கள் நினைவு ஒன்றுகூடல்கள் தடுக்கப்படுவது குறித்த கரிசனையையும் வெளியிட்டுள்ளது.

ஜ.நா தீர்மானத்தை கடந்து கனடா உட்பட சர்வதேச சமூகம், தமது அடுத்த கட்ட நடிவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் என்பதை வலியுறுத்தும் வகையிலான முதல்க் குரலாக கனடிய எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் அறிக்கையை கொள்ளலாம் என்கின்றனர் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள்..

நன்றி: நேரு குணரட்னம்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here