சிறீலங்காவுக்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  சிறீலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று  இடம்பெறவுள்ளது.

சிறீலங்காவின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு சிறீலங்கா அரசாங்கம்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜெனீவா நேரப்படி இன்று முற்பகல் 9 மணிக்கு பிரேரணை குறித்து விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

குறித்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நேற்று இடம்பெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் பிரேரணையை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட நேர சிக்கல் காரணமாக இன்று வரை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

இதேவேளை, 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிறீலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென சிறீலங்கா நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி,  இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை சிறீலங்காவுக்கு கோரியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த விடயம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், சிறீலங்காவுக்கு ஆதரவளிக்க சீனா  வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என்றதன் அடிப்படையில் சிறீலங்காவை சீனா ஆதரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேபோன்று பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.