சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு தமிழர்கள் விளக்கங்கள் அளிக்காததேன்?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் தயாரித்த, சிறீலங்காவில் நல்லிணக்கத்துடன் பொறுப்புக்கூறல்வழியாக மனித உரிமைகளை பேணவைப்பதற்கான மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வுக்கான தீர்மானங்கள் குறித்த வாக்கெடுப்பு பெப்ரவரி 22ஆம் திகதி மாலை இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிப்பில் மனித உரிமைகள் ஆணையகத் தீர்மானங்கள் வெற்றி பெற்றாலும், மனித உரிமைகள் ஆணையகத் தலைவியின் நெறிகாட்டல்கள் மெதுமைப்படுத்தப்பட்ட சான்றாதாரங்களை மேலும் தொகுப்பதற்கான அனைத்துலக பொறிமுறையொன்றையே தீர்மானம் செயலுருவாக்கி கால இழுத்தடிப்பு இடம்பெறும் என்ற அளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கும், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட்ட,  உலகின் முக்கியமான அரசசார்பற்ற மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும், மனித உரிமையை உரிய காலத்தில் பேணல் என்ற செயற்பாட்டு நிலையில் பின்னடைவாகவே அமையும்.

இவ்விடத்தில் இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக உள்ளன.

01.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவியால் ஆணையகத்தின் கடந்த 12 ஆண்டுகால அனுபவத்தில் சிறீலங்காவை குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நெறிப்படுத்தல் யாரால், எதனால் அதனைக் குறித்து எதனையும் பேசாது, மாறாக நடந்த சம்பவங்களுக்கான தரவுகளையும், தகவல்களையும் மேலும் திரட்டுவதற்கான அனைத்துலக பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதாக தீர்மானம் மெதுமைப்படுத்தப்பட்டது என்பது ஒன்று.

  1. கடந்த காலங்களில் 2012இல் 24 நாடுகளும், 2013இல் 25 நாடுகளும் 2014இல் 23 நாடுகளும் சிறீலங்காவின் மனித உரிமைகளின் உண்மைநிலையை உணர்ந்து சிறீலங்காவுடைய விருப்புக்கு மாறாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களை ஆதரித்து வாக்களித்தமை வரலாறு. இம்முறை சிறீலங்காவுக்கு ஆதரவான நாடுகளின் எண்ணிக்கை குறையுமா அல்லது கூடுமா என்ற கேள்வி எழும் நிலையை உலகத்தமிழர்களில் ஈழமக்களின் மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் எப்படி அனுமதித்தனர் என்பது அடுத்தது.

இந்த இரண்டு விடயங்கள் தொடர்பான முறைமையான பக்கசார்பற்ற சிந்தனையே, ஈழமக்கள் உரிமைகளை உரிய முறையில் வென்றெடுக்க உதவும்.

சுருக்கமாகக் கூறுவதனால், முதலாவது நிலைக்கான பதிலாக நாடுகளின் பாதுகாப்பு சந்தைக் கூட்டுறவு நலம் சார்ந்த விடயமாக இது அமைந்தாலும், அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு சந்தை நலன்களுக்கும், ஈழமக்களின் பாதுகாப்பு சந்தை நலன்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் வரலாற்று ரீதியாக இருந்தன. இன்றும் இந்துமா கடலின் புவியியல் நிலை கிழக்கிந்தியாவின் வளநிலைகள் தொடர்பாக உள்ளன. ஆனால் ஈழமக்கள் சுதந்திரமாக உலகப் பொருளாதார முறைமைகளுடனும், உலகப் பாதுகாப்பு முறைமைகளுடனும் இணைந்து பங்களிப்புச் செய்ய முடியாத நாடற்ற தேச இனமாக 22.05.1972 முதல் உள்ளனர்.  இந்த நிலை மாறுபடுகையிலேயே இந்துமா கடல் பகுதி அமைதிக்கடல் பகுதியாகவும், கிழக்கிந்திய வர்த்தகம் அதன் முழுமையான வழங்கல் ஆற்றலுடையதாகவும் திகழும். இதனை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவுபூர்வமான முறையில் சான்றாதாரங்களுடன் விளங்கப்படுத்தக் கூடிய புலம்பெயர் ஈழத் தமிழர்களின் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்புக்கள் வளர்க்கப்படுவதன் மூலமே இனி வருங்காலத்தில் மெதுமைப்படுத்தல்கள் நடைபெறுவதைத் தவிர்க்கலாம்.

இரண்டாவது நிலைக்கான பதிலாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் வாக்களிப்பு உரிமை ஆசிய ஆபிரிக்க நாடுகளைச் சார்ந்த 13 நாடுகளுக்கும், இலத்தீன் கரீபிய நாடுகளைச் சார்ந்த 8 நாடுகளுக்கும், மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பிய 7 நாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய 6 நாடுகளுக்கும் உண்டு. ஆனால் ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் ஆகக் குறைந்தது ஆசிய ஆபிரிக்க நாடுகளின் 13 உறுப்பு நாடுகளிலும் எத்தனை நாடுகளுடன் தங்கள் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சித்தனர் என்பதே சிந்தனைக்குரிய விடயம். இனியாவது இதற்கான ஈழ – ஆசியப் பண்பாட்டு ஒருங்கமைப்புக் கட்டமைப்பு ஒன்றையும் அதனைத் தொடர்ந்து ஈழ – ஆபிரிக்கப் பண்பாட்டு ஒருங்கமைப்புக் கட்டமைப்பு ஒன்றையும் உருவாக்குவதற்கான முயற்சிகளுக்குள் வராவிட்டால், உலக மக்களின் ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு அனுதாப ரீதியில் இருந்தாலும், அதனை நாடுகளின் ஆதரவாக மாற்ற முடியாத கையாலாகாத நிலையிலேயே உலகத் தமிழர் அமைப்புக்கள் இருக்கும். இதுவே சிறீலங்கா அரசாங்கத்துக்கு வழங்கப்படும், அது நாடுகளின் ஆதரவைத் தேடுவதற்கான, கையெழுத்திட்ட வெற்றுக் காசோலையாகவும் தொடரும்.

இரண்டாவது நிலைக்கான பதிலின் நடைமுறைப்படுத்தலிலேயே முதலாவது நிலைக்கான செயற்பாடுகள் நடைமுறைச் சாத்தியமாகும். ஈழமக்களின் உரிமைகள் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சாசனத்தின் வரைபுகளுக்கு உட்பட்ட, அவர்களின் பிரிக்கப்பட முடியாத மனித உரிமைகள். இதனைப் பெறுவது என்பது மனித உரிமைக்கான சனநாயகப் போராட்டமே தவிர கெஞ்சிப் பெறவும் முடியாது – கொஞ்சிப் பெறவும் முடியாது என்பதே நடைமுறை எதார்த்தம்.