சுற்றுலாமையத்தின் சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும்- நகரசபையில் இறுக்கமான தீர்மானம்

வவுனியா குளத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையத்திற்குள் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களும் இடிக்கப்படும் என இன்று இடம்பெற்ற சபை அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று  (18) இடம்பெற்றது.

இதன்போது குறித்த சுற்றுலா மையத்திற்குள் சபையின் அனுமதியின்றி மேலதிக நிர்மானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கட்டடங்களை அகற்றுவதற்கு சபை தீர்மானம் எடுக்கவேண்டும் என்று. உறுப்பினர்கள் தெரிவித்தனர்,

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர்..

காலை 8 மணியிலிருந்து மாலை 8 மணிவரை சுற்றுலா மையம் திறந்திருக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் மீறப்பட்டுள்ளது. ஒரு சிற்றுண்டிச்சாலைக்கே அனுமதி வழங்கியுள்ள நிலையில் அங்கு மூன்று அமைக்கப்பட்டுள்ளது.

எனவே சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஏனைய கட்டடங்களை உடைப்பதற்கு குத்தகையாளருக்கு ஒருவாரம் கால அவகாசம் வழங்குவோம். அதற்குள் அந்த கட்டடங்கள் அகற்றப்படாமல், நகரசபையால் உடைக்கப்பட்டால் அவரது குத்தகை உரிமத்தை ரத்து செய்வோம் என்றார்.

இதற்கு அனைத்து உறுப்பினர்களும் தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். இதன் பிரகாரம் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஏனைய கட்டடங்களை உடைப்பதற்கு குத்தகையாளருக்கு ஒருவாரகாலம் அவகாசம் வழங்குவதென்றும், அதற்குள் அவர் அதனை உடைக்கத்தவறி, நகரசபை தலையிட்டு அவற்றை அகற்றினால் அவரது குத்தகை ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என்று ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அதனை இறுக்கமாக கடைப்பிடிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர் கௌதமன்,

சபையின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் குத்தகையாளர் மீறியிருக்கிறார். இதனால் அதனை உடைப்பதாக சபை உறுப்பினர்களால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். அத்துடன் முன்னர் கமக்கார அமைப்பினால் எமக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பொய்யானது. அதற்கும் இந்த விடயத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது தனிப்பட்ட விளம்பரத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் போடப்பட்ட வழக்கு என்றார்.