இராஜதந்திரிகளை நாம் கண்காணிப்பதில்லை – கனடா தூதுவருக்கு பொலிஸ் பேச்சாளர் பதில்

இலங்கையில் இராஜதந்திரிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனடா தூதுவர் எழுப்பியுள்ள கேள்வி தொடர்பில் பதிலளிக்கையிலேயே அஜித்ரோகண இதனை தெரிவித்தார்.

கனடா தூதுவர் தெரிவித்துள்ளதை நிராகரித்துள்ள அவர் இலங்கையில் இராஜதந்திரிகள் கண்காணிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தன்னை கண்காணிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று காலை கேள்வி எழுப்பியிருந்தார்.

கொழும்பிலுள்ள தனது இல்லத்திற்கு விஜயம் செய்த இருவர் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தே கனடா தூதுவர் இது குறித்து டுவிட்டரில் பதிவில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

தனது தனிப்பட்ட சந்திப்புகள் எவ்வாறு ஊடகங்களிற்கு தெரியவந்தன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் இல்லாததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா தூதுவர் இலங்கையில் உள்ள இரு வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்தமை குறித்து நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனையடுத்தே இராஜதந்திரிகளை தாம் கண்காணிப்பதில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.