குலமகள் தங்கம் தானே வேறென்ன செல்வம் வேண்டும் – மாரீசன்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இக்கவிதை பிரசுரமாகின்றது.

 

 

 

 

 

சட்டங்கள் கற்றுத்தேறிச் சாதிக்கும் திறமைவிஞ்ச

சான்றோரி னருகமர்ந்து சபையினில் வீற்றிருந்து

மட்டிலா வறிவினாற்றல் அனுபவ முதிர்ச்சியாலே

மக்களின் வழக்குக் கேட்டு உண்மைகள் ஆய்ந்து தேர்ந்து

வெட்டெனக் குற்றம் சுற்றம் நீக்கிநுண் மதியினாலே

வெளிப்படை யாகநீதி வழங்கிடும் பெண்ணைக் கொள்ளப்

பட்டொடு பக்கம் வந்து அமர்ந்திடும் காளையர்க்குத்

தட்சணை வைத்துத் தட்டம் ஏந்தியும் நிற்பதாமோ?

 

தலைவனைக் கண்ணிற் காணும் தெய்வமாய்த் தொழுது கொண்டு

தன்னலம் கருதிடாமல் இன்சொலா லீர்த்து நிற்பார்

விலையிலா வன்பால் பண்பால் ஆண்மையு மணுக வைப்பார்

வினைகளிற் கற்றுத் தேர்ந்த திறமைகள் விரியக் காட்டி

மலையெனத் தாக்கவல்ல வறுமையிற் கலக்கம் கொள்ளார்

மனத்தினி லுறுதிபூண்டு மலைத்திடா துழைக்கும் கொள்கை

குலமகள் தங்கம் தானே வேறென்ன செல்வம் வேண்டும்

குவலயம் சிறக்க வைப்பீர் சீதனம் விலக்கிக் கொள்வீர்

 

தந்தையும் தாயுமாவார் தலைவனின் துணையுமாவார்

தார்மீக நெறியில் நின்று ஆன்மீகம் காத்து வாழ்வார்

முந்தையோர் உரைத்த நீதி மூதுரை நெஞ்சில் தாங்கி

முன்னுணர் நுண்மதியால் நுணுக்கமாய்க் கருத்துரைப்பார்

சிந்தையிற் தெளிவுமோங்கும் செயலினிற் திறமை வீங்கும்

செழுமையு மீர்க்குமுள்ளம் கருணையும் சுரக்கும் பண்பில்

சொந்தங்கள் உறவுநாடிச் சோர்விலா துழைக்கும் பெண்ணை

நிந்தமாய்க் கொள்ளுவோர்க்கு வேறென்ன செல்வம் வேண்டும்