சிறீலங்கா மக்கள் நாளுக்கு ஒரு தடவை சாப்பிடும் நிலை வரும் – ரணில்

தற்போதைய நிலை தொடர்ந்தால் சிறீலங்கா மக்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் உணவை உட்கொண்டு வாழவேண்டிய நிலை ஏற்படும் என சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

பொரளை பகுதியில் இன்று (7) இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவின் பொருளாதாரம் மீண்டும் முன்னைய நிலையை அடைவதற்கு 10 வருடங்கள் எடுக்கும். வர்த்தக நிலையங்கள் இழப்புக்களை சந்திக்கும் போது பெருமளவான தொழிலாளர்கள் பணியை இழப்பார்கள். இந்த நிலை 2022 ஆம் ஆண்டு வரையில் தொடரும்.

சிறீலங்காவின் வெளிநாட்டு கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதன் வருடாந்த கடன் மீள் செலுத்தும் தொகையும் 4.5 பில்லியன் டொலர்களே.

முதலீட்டாளர்கள் சிறீலங்காவில் இருந்து வெளியேறி வருகின்றனர். எனக்கு தெரிந்த வரையில் ஒரு முதலீட்டாளர் கிழக்கு ஆபிரிக்க நாடு ஒன்றிற்கும், மற்றுமொருவர் பங்களாதேசத்திற்கும் சென்றுள்ளார். அவர்கள் சிறீலங்காவை நம்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.