இரணைதீவில் உடல்கள் அடக்கம் – இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி 

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வது குறித்த அரசாங்கத்தின் முடிவு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இஸ்லாமிய அமைப்புகள் இது குறித்து சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளிற்கு கடிதங்களை அனுப்பவுள்ளன.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இது குறித்த கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்லாமிய நிலையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
உடல்களை அடக்கம் செய்வதற்கு கௌரவமான இடமொன்றை ஒதுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என இஸ்லாமிய நிலையம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது.
உலக முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினரான இஸ்லாமிய நிலையம் உலக அமைப்புகளிற்கு இந்த விவகாரம் குறித்த தனது கரிசனையை முன்வைக்கவுள்ளதுடன் ஜெனீவாவில் உள்ள உலக முஸ்லீம் காங்கிரசின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவு குறித்துகடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள முஸ்லீம் அதிகாரிகள் நாட்டின் வேறு பகுதிகளில் பொருத்தமான இடங்களை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.