மஹிந்த கொடுத்த வக்குறுதிதான் இப்போது கழுத்தை நெரிக்கிறது – லக்ஷ்மன் கிரியெல்ல

ஜெனீவா மனிதவுரிமைகள் பேரவைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த உறுதிமொழியே தற்பொழுது பாறாங்கல்லை போன்று எம்மடைய கழுத்தை நெரிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அதேவேளை, சர்வதேசம் வரை இந்த விவகாரத்தை கொண்டு சென்றது மஹிந்த தரப்பினர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

“யுத்தம் நிறைவடைந்ததையடுத்து பன்கீன் மூன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அப்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு உடன்பட்டார். அப்பொழுது ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதன் விளைவாக கடந்த 2012, 2013 , 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபை எமது நாட்டிற்கு எதிரான மூன்று யோசனைகளை முன்வைத்திருந்தது.

இதன் அடுத்தக்கட்டமாக 2015 ஆம் ஆண்டில் எமது நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் நிலைமை வர தயாராகவிருந்தது. வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் 2015 இல் வரவிருந்த பொருளாதார தடையை எதிர்கொள்ள முடியாத நிலை யிலேயே மஹிந்த ராஜபக்ஷ தேர்தலுக்கு சென்றார். அதனை தொடர்ந்தே எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

இதன் போது எம்மால் செய்ய முடியுமானவற்றிற்கு மாத்திரமே நாம் உடன்பட்டோம். இதுவே இராஜதந்திர முறைமையாகும். சர்வதேசத்தை பகைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும். யுத்த குற்றம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என கூறினர்.

அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. எமது நாட்டினுள் நீதிமன்றம் அமைத்து இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வோம் என கூறினோம். இதில் எதேனும் பிழை உள்ளதா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.