மௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்

இனப் படுகொலை புரிந்த சிறீலங்கா அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி அம்பிகை செல்வகுமாரினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்றுடன் 6ம் நாளை எட்டியுள்ளது. பிரித்தானியாவிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதியாக அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள  நிலையிலும்  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய நாளினை தொடர்ந்துள்ளார்.

PHOTO 2021 03 04 18 09 15 மௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்

1. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் வேறு பொருத்தமான மற்றும் பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் வழிமுறைகளை பரிசீலிக்கவும் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களை எடுத்துக் கொள்ள ஐ.நா.பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைத்தல்.

2. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மிகக் கடுமையான சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களின் சான்றுகளை சேகரிப்பதற்கும் குற்றவியல் வழக்குகளுக்கு கோப்புகளைத் தயாரிப்பதற்கும் ஏதுவாக மியான்மருக்காக அல்லது சிரியாவிற்காக நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச, சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை நிறுவுதல். ஒரு அர்த்தமுள்ள சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையானது இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து சான்றுகளை சேகரிக்க வேண்டியதுடன், செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு ழுஐளுடு இன் அறிக்கையில் உள்ள தகவல்களையும் ஆதாரங்களையும் பயன்படுத்த வேண்டும். அத்துடன் இவற்றிற்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் இருக்க வேண்டும்

3. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மீறல்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கள இருப்பினை நாட்டில் வைத்திருப்பதற்கு ஏதுவாகவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் விசேட பிரதிநிதியை நியமித்தல்

4. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்கு உரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்மானிக்க ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைத்தல்.

ஆகிய தனது நான்கு கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகழுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அதில் தனது நான்கு அம்சக்கோரிக்கைகள் உள்ளடக்கிய மின்னஞ்சலினை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளிற்கும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நேற்றைய 5 ஆம் நாள் மெய்நிகர் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் நேற்றைய 5 ஆம் நாள் மெய்நிகர் (Zoom) நிகழ்வில்  அருட்தந்தை ம.சக்திவேல் (அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர்) ஆகிய மதத்தலைவர்களின் ஆசீர்வாத உரைகளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் சிறப்பு வாழ்த்துரையும் இடம்பெற்றதுடன் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் வசந்தகுமாரி சந்திரபாலன் மற்றும் முன்னாள் போராளியான சந்திரிக்கா ஆகியோரது உரைகளும் இடம்பெற்றிருந்தன.

இதில் தமிழகத்திலிருந்து அம்பிகைக்கு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்த சீமான் அம்பிகையின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட குறித்த போராட்டத்தை உலக அரங்கி இணைய ஊடகங்கள் மூலம் மிக விரைவாக பரப்புதல் செய்யுமாறு உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களிடம் கோரிக்கையினையும் விடுத்திருந்தார்.

இந்நிலையில்  6 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்) மற்றும் கிறிஸ்தவர் இஸ்லாமிய மதத்தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் மற்றும் ஆர்த்தி, குருபரன் ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெறவுள்ளன.

அதேவேளை உடல் சோர்வுற்ற நிலையிலும் திருமதி அம்பிகை செல்வகுமார் மக்களிற்கான தனது கோரிக்கை தொடர்பில் விசேட உரை நிழ்த்தவுள்ளார்.

மேற்படி மெய்நிகர் (zoom) நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09
ID: 861 5306 3444
Password: 041066