இந்தியாவிற்கு துறைமுக நிலங்களை வழங்கும் இரகசிய முயற்சிக்கு எதிராக போராட்டம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேம் என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்துள்ளார்.

மேலும் திருகோணமலை துறைமுகத்திற்கு சொந்தமான  100 ஏக்கர் நிலப்பரப்பினை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் இரகசியமான முறையில்  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்துடன் கூட்டினைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்த போது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

துறைமுக அபிவிருத்தி பணியில் இந்திய நிறுவனங்களை  பங்குதாரராக இணைத்துக் கொள்ள  அரசாங்கம் குறிப்பிட்ட காரணத்தை தற்போது மேற்கு முனைய அபிவிருத்தி விவகாரத்திலும் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையின் துறைமுகங்களில் இந்திய நிறுவனங்களை பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளாவிட்டால் அவர்களுடன் கூட்டிணைந்த துறைமுக சேவைகள் நிறுத்தப்படும் என்று குறிப்பிடுவது பொய்யான வாதமாகும்.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 82.1 சதவீதமான மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் 66 சதவீதமான மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள் இந்தியாவுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனாலேயே இந்தியா கிழக்கு முனையத்தை கைப்பற்ற அதிக அக்கறை காட்டியது. அரசாங்கமும் அவர்களுக்கு ஏற்றால்போல்  செயற்பட்டது.

தேசிய வளங்களை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம்  கொள்ளைக்கு முரணாக செயற்படுகின்றது.

மேலும் திருகோணமலை துறைமுகத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலப்பரப்பை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்க இரகசியமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எனவே இதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என்றார்.