கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் -செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்  கோரிக்கை  விடுத்துள்ளார்.

மேலும் “தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளராக குருசாமி சுரேன் எமது கட்சியின் தலைமைக் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் இனி கட்சியின் விடயங்களை உத்தியோக பூர்வமாக வெளியிடுவார்” என்றார்.

வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் ஈழ விடுதலைக் இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பேச்சாளர் தேவை என்ற காரணத்தினால் எமது கட்சியின் பேச்சாளராக குருசாமி சுரேன் அவர்கள் செயற்படுவார். அதனை ஏகமனதாக தலைமைக்குழு தெரிவு செய்துள்ளது. அவர் அனைத்து விடயங்களையும் கையாளுகின்ற அதேநேரம், எமது கட்சி எடுக்கின்ற தீர்மானங்களையும், அரசியல் ரீதியாக இங்கு இருக்கின்ற தூதரகங்களை சந்திக்கின்ற செயற்பாடுகளையும் அவர் ஊடாகவே இனி மேற்கொள்ளப்படும்.

தமிழ் கட்சிகள் எல்லோரும் ஒருமித்த கொள்கையின் கீழ் செயற்படக் கூடிய வடிவமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்ள வேண்டும். அதை செய்வதற்கான முழு முயற்சியையும் நாம் செய்ய தயாராக இருக்கின்றோம். ஏனைய கட்சிகள் இணைகின்ற போது தனிப்பட்ட கட்சிகள் தமக்கு அதிகாரங்கரளை கூட்டுகின்ற செயற்பாட்டை மேற்கொள்ள முடியாது.

தேர்தலில் தோற்றவர்களை சேர்க்க கூடாது என நாம் யோசிக்கவில்லை. அது மக்களின் விருப்பம். ஒற்றுமையை கொண்டு வர வேண்டும். அதனை தான் மக்கள் விரும்புகிறார்கள். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி எமது ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் கிடைத்த வெற்றி. இதில் தோற்றவர்கள், வென்றவர்கள் என்று அல்லாமல் எமது மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கான கடமை எமக்கு இருக்கிறது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் நான் தான் சம்மந்தன் ஐயா அவர்களை கூட்டமைப்பின் தலைவராக தெரிவு செய்தேன். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கூட்டமைப்பின் பேச்சாளராக தான் இருக்கவில்லை எனத் தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பெயரை கூறினார். அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வினோ அவர்கள் எனது பெயரை பரிந்துரைத்தார். இதனால் சர்ச்சை உருவானது.

நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனை கொறாடவாக முன்மொழிந்தார்கள். இற்றைவரை பேச்சாளர் விடயம் தீர்வை எட்டவில்லை. எந்தவொரு கட்சியும் எல்லா விடயத்திலும் ஆளுமை செலுத்தும் கட்சியாக கூட்டமைப்பு இருக்க கூடாது.

அந்தவகையில் சின்ன சின்ன விடயங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும். ஜனநாயகம் என்பது அந்த வரம்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செனறவர்கள் இணையும் போது அரவணைப்பு இருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று பேச்சளவில் சொல்லிக்கொண்டு மக்கள் அதனை ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக, எந்தவொரு கட்சியும் தனிமை பாராட்டுகின்ற அல்லது அதிகாரத்தை கையில் எடுக்கின்ற நிலைப்டபாட்டில் இருக்க கூடாது.

மக்களது விருப்பம் முக்கியம். பிரிந்து சென்றவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுகிறது” என்றார்.