பொறுப்புக் கூறலுக்காக புதிய வழிகளை ஆராய வேண்டும் – ஆணையாளர் பச்செலெட்

சர்வதேச அளவில் பல்வேறுவகைப்பட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு நான் மனித உரிமை பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்விற்கு விடுத்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறலை முன்னெடுக்க மறுத்ததன் மூலமும் ஜெனீவா தீர்மானத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டதன் மூலமும் ஏனைய நடவடிக்கைகள் மூலமும் தேசிய நடைமுறைகள் மூலம் தண்டனையின் பிடியிலிருந்து விலக்கப்படுதலை முடிவிற்குகொண்டுவருவதற்கான நேர்மையான முன்னேற்றத்திற்கான கதவுகளை அரசாங்கம் அடைத்துவிட்டது.

இந்த காரணத்திற்காக நான் சர்வதேச அளவில் பல்வேறுவகைப்பட்ட பொறுப்புக்கூறலை முன்னோக்கி நகர்த்துவதற்கான புதியவழிவகைகள் குறித்து ஆராயுமாறு நான் மனித உரிமை பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

எதிர்கால பொறுப்புக்கூறலிற்கான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளிற்கு ஆதரவை அளிக்குமாறும் உறுப்புநாடுகளில் பொருத்தமான நீதி நடைமுறைகளிற்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.