யாழ்.தீவக மின்திட்ட விவகாரம் – சர்வதேச ஏல விதிகளை சிறீலங்கா பின்பற்ற வேண்டும்

வடமாகாணத்தின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறியளவிலான  மின்னுற்பத்தி செயற்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 3ம் தரப்பினாரால் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று கூறியிருக்கும் சினோசோர் ஹைபிரிட் ( பீஜீங்) டெக்னோலொஜி லிமிட்டெ நிறுவனம், அதன் உண்மைத்தன்மை தொடர்பிலும் விளக்கமளித்திருக்கிறது.

இது குறித்து சினோசோர் ஹைபிரிட் (பீஜிங்) டெக்னோலொஜி  லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

“அண்மையில் இலங்கையின் வடபகுதியிலுள்ள 3 தீவுகளில் சிறியளவிலான மின்னுற்பத்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கிலான ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

எனினும் அமைச்சரவையின் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக பொய்யான கருத்துக்களைக் கூறி, 3ம் தரப்பொன்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதாக அறியமுடிகின்றது.

இது ஒப்பந்தம் மீதான நன்மதிப்பை சீர்குலைப்பதாக இருக்கின்றது. அதுமாத்திரமின்றி சிறீலங்கா அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு அது வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே இது குறித்து தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது.

வடக்கில் அனலைதீவு,நயினாதீவு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் நோக்கிலும் மேற்படி மின்னுற்பத்தித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவொன்று கடந்த 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்  சமர்ப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கக்கூடிய சக்தி வளங்களை  மிகவும் குறைந்து செலவில், சூழலை மாசுபடுத்ததாக வகையில் உற்பத்தி செய்து, மின்சாரத்தை நிலையாக வழங்குவதே இத்திட்டத்தின்  பிரதான நோக்கமாகும். அதன்படி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கடனுதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு ஆண்டிலிருந்து  சிறீலங்கா மின்சார சபை இதனை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது” என்று  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.