கண்ணுக்கு தெரியாத மகுட நுண்ணியும், கலங்கி நிற்கும் மனித மனங்களும் -விக்கிரமன்

91
105 Views

இருபதாம்  நூற்றாண்டின் பெரும் சவாலாக இன்றுவரை மனித குலத்தை கலங்க வைத்துக் கொண்டிருக்கும் மகுட நுண்ணி தொற்று நோய்-19 (கோவிட் -19), மனித ஆற்றல் மீது மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காண வைத்துள்ளது என்றால் மிகையாகாது. மனித குல வரலாற்றில் பல்வேறு தொற்று நோய்கள் பல கோடி உயிரிழப்புகளை ஏற்படுத்தியமைக்கான தடயங்கள் இருந்த போதும் தற்போதைய உலகளாவிய தொற்று பற்றிய தகவல்கள் ஒப்பீட்டளவில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வருவதும், பகிரப்பட்டு வருவதும் நவீன தொடர்பாடல் உலகில் நோய் தொற்றை தவிர்ப்பதற்கு பதிலாக பீதியை ஏற்படுத்துவதாகவும், எதிர்மறை விளைவுகளை தோற்றுவிப்பதாகவும் இருப்பது கவலைக்குரியதே.

இதற்கு காரணம் சாதாரண குடிமகனும் தன் புரிதலுக்கேற்ப கருத்துக்களை உலகெங்கும் எடுத்து செல்ல கூடிய நவீன தகவல் தொழில்நுட்ப வசதியென்றால் மிகையாகாது. இன்று பல்வேறு தரப்பினரும் தம் மனதில் படும் கற்பனைவாத கருத்துக்களை விஞ்ஞானத்தின் பெயரால் வெளியிட்டு வரும் வியாபார போட்டியும், அரசியல் தலையீடுகளும்  இதற்கு காரணம் என்பதும் மறுக்க முடியாதது. இன்று நாம் பேய் கதைகளை கேட்டு மிரளும் சிறு பிள்ளைகளை போல் எது சரி? எது பிழை? எப்படி இந்த பேயிடம் இருந்து தப்பலாம் என எண்ணும் குழந்தை மனப்பாங்கில் சுருண்டு கிடக்கிறோம். இந்த நிலைமையில் இருந்து வெளிவருவதற்கு நாம் சில விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களை சீர் தூக்கி பார்க்க வேண்டும்.

ஆக்கவும் அழிக்கவும் கூடிய நவீன விஞ்ஞான தொழில் நுட்பம்

நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்கள் நுண்ணுயிர்களையும் (micro-organisms) அதாவது தம்மை தாமே பெருக்க கூடிய உயிர் கலங்களையும்,  அதனிலும் சிறிய நுண்ணிகளையும் அல்லது வைரசுக்களையும் (தம்மை தாமே பெருக்க முடியாதவை) அவற்றினுள்ளான நுண் கூறுகளையும் பகுத்து ஆயும் அதியுயர் திறன் கொண்டவையாக உள்ளன. இத்திறனை ஆக்கவும் அழிக்கவும் பயன்படுத்த முடியும் என்பதும் இங்கு கவனிக்க வேண்டியது. இது மனிதாபிமானமற்ற மனித குல வேற்றுமை உணர்வுகளால் பிளவு பட்ட வல்லரசு மேலாதிக்க போட்டிகளை கொண்ட அரசுகளின் செயற்பாடுகளுடன் இணைத்து பார்க்கும் சாதாரண மனிதர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. எனினும் கோடிக் கணக்கானவர்கள் உலகெங்கும் கொல்லப்படும் போது அதே விஞ்ஞானம் ஆக்கத்திறன் மீது தன் வல்லமையை பிரயோகிக்க தவறாது என்பதும் மறுக்க முடியாதது.

அந்த வகையிலேயே உலகின் முன்னணி மருத்துவ விஞ்ஞானிகளின் விரைவான அதியுயர் தொழில்நுட்ப முன்னெடுப்புகள் காரணமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சிகள் தொடர்கின்றன. இவற்றுள் ஆறு தொழில்நுட்ப வகைகளை சார்ந்த இருபத்தொரு தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளன. அவற்றுள் பத்து வகையான தடுப்பூசிகள் பல நாடுகளாலும் நாடுகளின் கூட்டமைப்புகளாலும் அவசர கால அனுமதி வழங்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ளன. எனினும் உலக சுகாதார நிறுவனம் இதுவரை பைசர்,  அஸ்ட்ரா செனெகா ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசர பாவனைக்குரிய பட்டியலில் இணைத்துள்ளதுடன்  இந்தியாஇ கொரியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று தடுப்பூசிகள்  இறுதி அனுமதிக்கான ஆய்வு நிலையில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.   இவை தவிர மேலும் பத்து தடுப்பூசிகள் அவசர பாவனை அனுமதி பட்டியல் பரிசீலனையில் உள்ளன.

தடுப்பூசிகளும் அவை தொடர்பான தேவையற்ற பயமும்

தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் பல்வேறு நோய்களில் இருந்தும் மனித குலத்தை பாதுகாத்து வருவது அனைவரும் அறிந்ததே. அதற்காக ஓர் தொற்றை ஏற்படுத்தும் கிருமி செயல் திறன் குறைக்கப்பட்டும், கொல்லப்பட்டும், அல்லது அதற்கான பிற பொருள் எதிரி வடிவிலும், அக்கிருமிகளின் மனித கலங்களை இனங்காணும் மேற்பரப்பு புரதங்களை ஒத்த புரத வடிவிலும், மனிதரில் தாக்கம் ஏற்படுத்தாத கிருமிகளினுள் நோய்க்காரணியின் புரதங்களுக்கான மரபணுக்களை செலுத்தியும்  அல்லது புரதங்களை உருவாக்க கூடிய மரபணு தகவல் கோப்புக்களை செலுத்தியும் தடுப்பூசிகள் உருவாக்க படுகின்றன. இவற்றுள் நோய்க்கிருமியின் மரபணு கையாளப்படும் பொறிமுறைகள் மிக நவீனமானவை என்பதால் நீண்ட காலத்தின் பின் ஏற்பட கூடிய எதிர் விளைவுகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களும் சில ஊடகங்களாலும் தனிப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களாலும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இன்று வரையான ஆராய்ச்சிகள் இத்தடுப்பூசிகள் ஏனைய தடுப்பூசிகள் போலவே பாதுகாப்பானவை என்றும் வீரியமாக செயற்படக்கூடியவை என்றும் உறுதிப்படுத்தியுள்ளன.

பிரதான தடுப்பூசி தயாரிப்பு

 

பெப்ரவரி 2ஆம் திகதி 2021 வரை உலக சுகாதார நிறுவனத்தால் அவசர பாவனைக்கான அனுமதி வழங்கப்பட்ட பைசர் நிறுவன தடுப்பூசி 95% வினைத்திறன் மிக்கதும் நீண்டகால மரபணு மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மையற்றதுமாகும். ஆனால் இத்தடுப்பூசியின் வினைத்திறனை பேண பயன்படும் சில மூலக்கூறுகள் மிகச்சிறிய அளவிலானோருக்கு (0.001%) ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதுடன் மிக மிக சிறிய (0.000001%) எண்ணிக்கையினரில் ஒவ்வாமை அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் என இன்றுவரையான பயன்பாட்டின் பின்னான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பு மருந்து உற்பத்தி செலவு, அதீத குளிர் நிலையில் (70 பாகை செல்சியஸ்) பேணுதல் போன்றவற்றால் ஒருவருக்கான தடுப்பூசியின் செலவு ஆகக்குறைந்தது 40 டொலர் அல்லது இலங்கை பணத்தில் 8000 ரூபாய் வரையாக வரையறுக்கப்பட்டுள்ளமை, பின் தங்கிய நாடுகளில் பொருளாதார சரிவு மற்றும் அதீத குளிரூட்டல் வசதிகளின்மை என்பன இந்த தடுப்பூசி பின்தங்கிய நாட்டு மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை இல்லாது செய்திருக்கிறது.

அதேவேளை உலக சுகாதார நிறுவனத்தால் அவசர பாவனை அனுமதி வழங்கப்பட்டுள்ள அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செயற்றிறன் 70-90% வரை காணப்படுவதாகவும், ஒவ்வாமை பக்கவிளைவுகளும் பைசர் தடுப்பூசியின் அளவை ஒத்ததாகவே உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இத்தடுப்பூசி சாதாரண குளிரூட்டிகளில் பாதுகாக்க படக்கூடியதாக இருப்பதும் ஒரு நபருக்கான செலவு 6 டொலர்கள் வரை இருப்பதும் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசியை வழங்க கூடிய நிலையை தோற்றுவித்துள்ளது. மேலும் உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, யுனிசெப் போன்ற அமைப்புகளால் உருவாக்க பட்டுள்ள கோவாக்ஸ் எனும் அனைவருக்கும் தடுப்பூசி பெற்று வழங்கும் திட்டத்தில் 350 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் கொள்வனவு செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாலும் இத்தடுப்பூசி அநேக வறிய நாடுகளுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமையும்.

இவை தவிர தற்போது அமெரிக்கா, சீனா, ருசியா, இந்தியா ஆகிய நாடுகளில் அனுமதியளிக்கப்பட்டுள்ள ஏனைய தடுப்பூசிகளும் நாடுகளாலும் உலக சுகாதார நிறுவனத்தாலும் அனுமதிக்கப்படும் போது உலகின் சனத்தொகையில் 20% வரையில் இவ்வாண்டின் இறுதியில் மகுட நுண்ணி நோய் -19 இற்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டும் என எதிர் பார்க்கலாம்.

இன்றுவரை உலகெங்கணும் 189 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை மற்றும் தடுப்பூசி சார்ந்த இறப்பு பாதிப்புகள் என்பது மிக சொற்பமே என்பதை கருத்தில் கொண்டும், தடுப்பூசிக்கான கேள்வி அதிகமாதல், நாடுகளில் ஏற்படும் மகுட நுண்ணி நோய்-19  தாக்கம் என்பவற்றை கருத்தில் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே இந்த உலகளாவிய தொற்றில் இருந்து நாம் விரைவில் விடுபடுவதற்கும் எம் அன்றாட வாழ்வை வழமை போல் தொடர்வதற்கும் வழி சமைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here