தாய்மொழிக்காக உயிர்நீத்தாரை உலகம் போற்றும் நாள் உலகத்தாய்மொழி நாள் எம்மொழிக்காக உயிர்நீத்தாரை நாமும் போற்றுவோம் – சூ.யோ. பற்றிமாகரன்.

36
42 Views

1952ஆம் ஆண்டில் பெப்ரவரி 21ஆம் நாள் கிழக்கு வங்காளத்தில் (இன்றைய பங்களாதேசத்தில்) தங்கள் தாய்மொழிக்காகப் போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து போற்றும் முகமாக 1999ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை உலகத்தாய்மொழி நாளைக் கொண்டாடி வருகிறது.

அவ்வகையில் ஈழத்தமிழ் மண்ணிலும் தமிழகத்திலும் உலகெங்கும் எங்கள் தாய்மொழியாம் தமிழுக்காக உழைத்தவர்களையும், உருகி மெழுகாகி உயிர்த்தீபங்களாக தமிழுலகில் ஒளிவீசி நிற்பவர்களையும் இந்நாளில் உலகத்தமிழினம் நன்றியுடன் நினைந்து போற்றுகின்றது. அதிலும் சிறப்பாக எங்கள் ஈழமண்ணில் 11.01.1974ஆம் நாள் அன்று நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் பொழுது சிறீலங்கா செய்த பண்பாட்டு இனஅழிப்பின் விளைவாக உயிர்த்தியாகம் செய்த 11பேரையும் நினைந்து எங்கள் தாய்மொழி நாளைக் கொண்டாடத் தொடங்கும் நாம் அன்று தொடங்கிய ஈழத்தமிழர் தேசிய விடுதலை என்னும் புனித பயணத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்தும், சிறீலங்காப் படைகளாலும் இந்திய அமைதி காக்கும் படைகளாலும் உயிரை இழந்தும், எங்கள் தேசத்தின் மொழிக்காவல் ஒளித்தீபங்களாக எந்நாளும் பேரொளி பரப்பி நிற்கும் பல்லாயிரக்கணக்கான இன்தமிழர்களுக்கு இந்நாளில் வீரவணக்கம் செலுத்தி நிற்கின்றோம்.

இன்று உலகில் வழக்கில் உள்ள 6000 மொழிகளில் 43வீதமான மொழிகள் வழக்கு இறந்து இறக்கும் பேரபாயத்தில் உள்ளது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய எச்சரிப்பாக உள்ளது. இதனால் தாய்மொழிக்கல்வி தொட்டில் முதல் பிள்ளைக்கு ஊட்டப்படும் அமுதமாக அமைய வேண்டும் என்பது இன்று ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலகக் கல்வி பண்பாட்டு அறிவியல் மைய அமைப்பின் வேண்டுகோளாக உள்ளது. எனவே பள்ளிக்கல்வி தொடங்கப்பட முன்னமே தாய்மொழியைப் பிள்ளை விளங்கவும் பேசவும், எழுதவும் அறிந்திருக்கச் செய்திடல் முக்கியம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய வேண்டுகோளாக அமைந்துள்ளது.

உலகில் 1.5 மில்லியன் மாணவர்கள் இன்றைய கோவிட்-19 வீரியத் தொற்றால் தனிமைப்படுத்தலால் தாய்மொழிக்கல்வியைப் பெற இயலாத சூழ்நிலையில் உலகில் தவிப்பதையும், உலகெங்கும் பண்பாட்டு விழாக்கள் கொண்டாடப்பட இயலாத சூழ்நிலையைக் கோவிட்-19இன் விரைவுப்பரவல் தோற்றிவித்துள்ள இன்றைய நிலையில் இளையவர்களுக்கு தாய்மொழித்தன்மையை வளர்த்தல் என்பது பெற்றோர்களின் தலையாய கடமையாக மாறியுள்ளது என்பதையும் ஐக்கி நாடுகள் சபை சுட்டிக்காட்டி உள்ளது.

இன்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டும் தாய்மொழியைப் பெற்றோர் வளர்க்க இயலாத மனிதஉரிமை அவலநிலையை 1956ஆம் ஆண்டு ஆனி மாதம் 5ஆம் திகதி சிங்களம் மட்டும் சட்டத்தை ஈழத் தமிழர்கள் மேல்  சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஒரு மொழிக் கொள்கையைத்  திணித்து வரும் சூழலில் தாயகத் தமிழ்க்கல்விக்கு உதவும் உலகத் தமிழர் திட்டங்கள் வேகப்படுத்தப்பட வேண்டும்.

அதே வேளை இவ்வாண்டின் ஐக்கியநாடுகள் சபை இவ்வாண்டில் கல்வியும் சமூகத்திலும் பன்மொழிப்பண்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் சிறீலங்காவில் ஒரு இனம் ஒரு மொழி ஒரு நாடு என்னும் கிட்லரிசம் இந்த 21ஆம் நூற்றாண்டின் கல்வித் திட்டமாகச் சிறீலங்கா தான் செய்த ஈழத்தமிழின அழிப்புக்கான பொறுப்புக்கூறலும் நிலைமாற்று நீதி வழங்கலும் மறந்தும் கூடச் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களால் எக்காலத்திலும் முன்னெடுக்கப்பட்டு விடக் கூடாதென்பதை ஆழப்படுத்தவெனத் திட்டமிட்ட பண்பாட்டு இனஅழிப்பு நோக்குடன் அரச கொள்கையாக முன்நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்குமான அனைத்து முயற்சிகளையும் ஈழத்தமிழர்களுக்குத் தடை செய்து வரும் சிறீலங்காவின் சிங்களப் பெரும்பான்மைப்பாராளுமன்ற ஆட்சியின் ஆதரவுடன் கூடிய சிறீலங்கா அரச அதிபர் சர்வாதிகார ஆட்சியில் இருந்து அவர்களை விடுவிக்கும் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் காலதாமதமின்றி முன்னெடுத்தாலே ஈழத்தில் ஈழத்தமிழர்களின் தாய்மொழியாம் தமிழைச் சிறீலங்கா பண்பாட்டு இனஅழிப்புச் செய்வதில் இருந்து காப்பாற்றி ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர்களுக்கான தாய்மொழிப் பாதுகாப்பை உறுதி செய்ய இயலும் என்பதை உலகத் தமிழர்கள் தெளிவாக உலக நாடுகளுக்கும் உலக அமைப்புக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டிய நேரமிது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here