தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள்

எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை விட வலிமையற்றது எனவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் சமர்பிக்கவுள்ள தீர்மானத்தின் பூச்சிய இலக்கம் கொண்ட வரைபு இலக்கு ஊடகத்திற்கு கிடைத்துள்ளது.

அதில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தைகள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். அதாவது அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் என்பது பொதுவானது. தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்பது அறிக்கையின் சாராம்சம்.

சிறீலங்காவின் ஒருமைப்பாட்டை தீர்மானம் உறுதிப்படுத்துகின்றது.

சிறீலங்கா அரசு அமைத்த காணாமல்போனோர் அவலுவலகத்தின் செயற்பாட்டை தீர்மானம் பாராட்டியுள்ளது.

முஸ்லீம் மக்களின் இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் அரசின் செயற்பாட்டை கண்டித்துள்ளது.

தீர்மானத்தில் ஒரு இடத்தில் முஸ்லீம் மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்காவில் தமிழ் மக்கள் இருப்பதற்கான அடையாளத்தையே தீர்மானம் மறைத்துள்ளது.

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என கூறும் தீர்மானம், அதனை பொதுவாகவே தெரிவித்துள்ளது.

சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான எந்தவித கோரிக்கைகளும் இல்லை.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. உதாரணமாக பொருளாதாரத் தடை, பயணத்தடைக்கான கோரிக்கைகள்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஆதாரங்களை ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு எதிர்வரும் 49 மற்றும் 51 ஆவது கூட்டத்தொடர்களில் அறிக்கை சமர்ப்பித்து அதனை நாடுகள் விவாதிக்கும் என தீர்மானம் நிறைவு பெறுகின்றது.