இந்தியாவின் ஆதரவை கோரும் கோட்டா அரசு – மோடிக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டது

ஜெனிவாவில் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதை இலங்கை குறித்த முதன்மை நாடுகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவைக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவரப்போவதாக முதன்மை நாடுகளின் இராஜதந்திரிகள் தெரிவித்து வந்த போதிலும், அதனை உறுதிப்படுத்தும் வகையிலான அறிக்கை ஒன்று முதன்மை நாடுகளால் நேற்று வெளியிடப்பட்டது. இதனையடுத்தே கொழும்பில் இராஜதந்திர நகர்வுகள் சூடுபிடித்துள்ளன.

பிரித்தானியா தலைமையிலான முன்மை நாடுகள் குழுவில் ஜேர்மனி, கனடா, மசிடோனியா, மொன்டிகறோ, மலாவி ஆகிய ஐந்து நாடுகளும் உள்ளன. இந்த நாடுகளின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் என்பவற்றை மேம்படுத்தும் வகையிலான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முதன்மை நாடுகள் திட்டமிட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்தே மனித உரிமைகள் பேரவையில் இந்திய அரசாங்கத்தின் ஆதரவை இலங்கை கேட்டிருப்பதாக வெளிவிவகாரச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்று அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.