‘சிங்கள தேசமாகும் தமிழர் தாயகம்’ – நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது… – மட்டு.நகரான்

வடகிழக்கு தமிழர்களின் பகுதிகள் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், தமிழர்களின் தாயகத்தினை பாதுகாக்க நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பதை அனைவரும் ஒருதரம் சிந்திக்கவேண்டிய காலத்தில் நிற்கின்றோம்.

 

நாங்கள் வடகிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கின்றோம், போராடுகின்றோம். ஆனால் இருக்கும் காணிகளை பாதுகாப்பதற்கு அல்லது அதனை தக்க வைப்பத்தற்கு எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்றால், எதுவும் இல்லையென்பதே உண்மையாகும்.

வடகிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும்போது அதற்கு எதிராக மக்கள் போராடுகின்றனர். அந்த சமயங்களில் அரசியல்வாதிகள் வெறும் நாடகத்தினை மட்டும் காட்டுகின்றார்களே தவிர உண்மையில் காணிகளை பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலையே இருக்கின்றது.

குறிப்பாக கிழக்கில் சிங்கள பெரும்பான்மையினத்தவர்கள் தங்களது இனத்தினை விரிவுபடுத்தி தமது பெரும்பான்மையினை அதிகரிப்பதற்கும், இனவிகிதாசாரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கும் மிகவும் திட்டமிட்ட வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் வடகிழக்கில் தமிழர்களின் காணிகளை பாதுகாப்பதற்கு எந்தவிதமான திட்டங்களும் இல்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை மாற்று இனங்கள் அபகரிப்பதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பதும் இந்த திட்டமிடல் இல்லாத நிலையே ஆகும்.

images 11 'சிங்கள தேசமாகும் தமிழர் தாயகம்' - நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது... -	மட்டு.நகரான்

நாங்கள் மேய்ச்சல் தரைப்பிரச்சினைகளைப் பற்றி கதைக்கின்றோமே தவிர, யுத்தம் நிறைவுற்ற இத்தனை வருடத்திற்கு அந்த மேய்ச்சல் தரைக்காணிகளை அடையாளப்படுத்தி அவற்றினை எல்லையிட்டு அவற்றினை அரசாங்கத்தின் ஊடாக வர்த்தமானி அறிவிப்பிற்கு உட்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கைகளும் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான நிலப்பரப்பினை தமிழர் தேசம் கொண்டுள்ளது. அனைத்து வளங்களையும் கொண்ட இந்த நிலப்பரப்புகளை தமிழர்கள் பயன்படுத்தாத காரணத்தினால் அவற்றினை மோப்பம் பிடித்தும், எமக்கு மத்தியில் உள்ள சில புல்லுருவிகள் மூலமும் அடையாளப்படுத்தி அவற்றினை முதலீடுகள், சுற்றுலாத்துறை, சேனைப்பயிர்ச்செய்கை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டன.

மறுபுறத்தில் எல்லைப்புறப்பகுதிகளில் உள்ள வளம்கொண்ட பகுதிகளை பல்வேறு காரணங்கள் கொண்டு அபகரிக்கப்படுகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக காணிகள் அபகரிக்கப்படுகின்றபோதிலும் நாங்கள் எமது வளத்தினைப் பாதுகாப்பதற்கு இன்றுவரையில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழர்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழ்த் தேசிய பிரச்சினைகளுக்கு அப்பால் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் அனைத்து வழங்களும் உள்ள நிலையில், இன்றும் தமிழர்கள் மூன்றாம் நிலையிலேயே உள்ளனர்.

தொழில் இல்லாப் பிரச்சினை, வறுமை நிலை போன்ற பல்வேறு காரணிகளினால் தமிழர்களின் நிலையென்பது கீழ் நிலையிலேயே காணப்படுகின்றது. அனைத்து வளத்தினையும் கொண்ட தமிழர் பகுதிகளில் இந்த நிலை காணப்படுவதற்கு என்ன காரணம் என்பதை நாங்கள் ஆராயவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

குறுகிய நிலப்பரப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள சிங்கள, முஸ்லிம்கள் அதில் தமது இருப்பினை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உட்பட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

இதேபோன்று தமிழர்களின் பகுதிகளில் உள்ள காணிகளையும் திட்டமிட்ட வகையில் அபகரித்து தமது தேவையினை பூர்த்தி செய்வதற்காக அவற்றினை பயன்படுத்துகின்றனர். ஆனால் தமிழர்கள் தமது வழங்களை எந்தளவுக்கு பயன்படுத்தியுள்ளனர். குறைந்தது தமிழர்களின் பகுதிகளில் உள்ள வளங்கள் தொடர்பிலான எந்த ஆய்வினையும் யாரும் முன்னெடுக்காத நிலையில் மாற்று சமூகம் அவற்றினை முன்னெடுத்துவருகின்றது.

இன்று மேய்ச்சல் தரை காணிகள் அபகரிக்கப்பட்டு, மேய்ச்சல் தரைப்பகுதியென்பது அடையாளப்படுத்த முடியாதளவுக்கு அங்கு சேனைப்பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள்பவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் அல்ல. பொலநறுவை, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள். ஆனால் அப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர்களுக்குள் தமிழர்களினால் எந்த சேனைப்பயிர்ச் செய்கையும் முன்னெடுக்கப்படவில்லை. வளங்கள் இருக்கின்றது. யாரும் அதனை பயன்படுத்தவில்லை.

கடந்த 30வருடகால யுத்தம்; அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இன்றும் எமது மக்களை மாற்றானிடம் கையேந்தும் நிலையினையே ஏற்படுத்தியுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால், 25வீதமான பகுதி நீர் நிலைகள் சூழ்ந்ததாக காணப்படுகின்றன. இங்கு நன்னீர், உவர்நீர் ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன. இதேபோன்று நூற்றுக்கணக்கான சிறிய குளங்கள் காணப்படுகின்றன. கடல் வளம் காணப்படுகின்றது, இலங்கையில் மிகவும் நீண்ட வாவியும் காணப்படுகின்றது. ஆனால் இங்கிருந்து மீன் ஏற்றுமதி மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் பிடிக்கப்படும் மீன்கள் முஸ்லிம் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. கடல் வளங்களையும் அதிகளவில் சிங்கள – முஸ்லிம்களே பயன்படுத்துகின்றனர். தமிழர்களின் பகுதிகளில் மிகவும் குறைவான நிலையிலேயே மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றினை அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களும், அரசியல்வாதிகளும் அவர்களை ஊக்குவிக்கும் நிலையும் காணப்படுகின்றது.

ஆனால் தமிழர்கள் பகுதிகளில் அதிகளவான கடல் பகுதி காணப்படுகின்ற போதிலும், மீன்பிடியில் ஒரு சிலரே ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் அன்றாட குடும்ப வருமானத்தினை மட்டுமே பெறும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மீன் உற்பத்திகளை செய்து அதனை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து வழங்களும் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வறுமை நிலையினை நீக்கவும், தமிழர்கள் மத்தியில் காணப்படும் தொழில் இல்லா பிரச்சினையை ஓரளவு தீர்க்கவும் இந்த மீன் உற்பத்திகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதன் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.

கைவிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான குளங்களை புனரமைத்து, அவற்றில் மீன் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும். நீர்நிலைகளில் உவர் மற்றும் நன்னீர் மீன்பிடிகளை மேற்கொள்ளமுடியும். மீன் வளர்ப்பினை மேற்கொண்டு, அவற்றினை ஏற்றுமதி செய்வதற்கான ஏது நிலைகள் குறித்து எதிர்காலத்தில் சிந்திக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

எமது எல்லைப்புறப் பகுதிகளிலும் இவ்வாறான மீன் வளர்ப்பு மற்றும் பல்வேறு வியாபார துறைசார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் எமது எல்லைகளை பாதுகாக்க முடிவதுடன், தமிழர்களின் பொருளாதாரத்தினையும் உயர்த்திக்கொள்ள முடியும்.

வெறுமனே வெற்றுக்கோசங்களை மட்டும் எழுப்பிக்கொண்டிருக்காமல், எமது பகுதியை பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய அவசியம் காணப்படுவதுடன், அதனை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் எல்லைப்பகுதிகள் மற்றும் ஏனைய பகுதிகளில் காணப்படும் வளங்கள் தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் யாழ். பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆய்வுகளை முன்னெடுத்து, அதனை ஒரு கட்டமைப்பாக மாற்றி செயற்பாடுகள் ரீதியான முன்னெடுக்கும்போது கிழக்கு மாகாணத்தினை தமிழர்கள் ஓரளவு பாதுகாப்பதற்கான நிலையுள்ளது. இதனை உணர்ந்து எதிர்கால நடவடிக்கைகளை அரசியல்வாதிகளும், சிவில் சமூக அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும்.