இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை ரத்து – சபாநாயகருக்கு இதுவரையில் தகவல் இல்லை

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது சிறிலங்கா நாடாளுமன்ற உரையின் போது காஸ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்பது குறித்து சிறிலங்கா அரசாங்க மட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டதாக விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்துஸ்தான்டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாக்கிஸ்தான் பிரதமரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பது என்பது குறித்து நன்கு ஆராயப்பட்ட முடிவு போல தென்படவில்லை என தெரிவித்துள்ள ஒருவர், பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது நாடாளுமன்ற உரையின் போது காஸ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்பது இலங்கை அரசாங்கமட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

காஸ்மீர் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கருத்து தெரிவித்தால் அதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளை கருத்தில்கொண்டே சிறிலங்கா தரப்பு நாடாளுமன்ற உரையை இரத்துச்செய்வதே பொருத்தமானது என தீர்மானித்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் இம்ரான்கானின் நாடாளுமன்ற உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறித்து வெளிவிவகார அமைச்சினால் தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.