அமைச்சர் ரிஷாட்டை ஆதரிக்க கூட்டமைப்பிற்கு 5 பில்லியன் நிதி

நாடாளுமன்றில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து அமைச்சருக்கு ஆதரவளிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 5 பில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் விசேட இணைப்பாளர் சமிந்த வாசல தெரிவித்துள்ளார்.

நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அவரது காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண பனை அபிவிருத்திக்கு என 5 பில்லியன் ரூபா நிதியினை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையில் 2.5 பில்லியன் நிதி தற்சமயம் வழங்கப்பட்டுள்ளதுடன் மிகுதி பணமும் வழங்கப்படும்.

ஆனால் வடமாகாண குடிநீர் வசதிகளுக்கு வெறும் 5 மில்லியன் ரூபா பணத்தையே ஒதுக்கியுள்ளார். வடமாகாணத்தில் பாரிய ஓர் பிரச்சினை மக்களின் குடிநீர் பிரச்சினையே. இதற்கு வெறும் 5 மில்லியன் பணம் போதுமாக இருக்குமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதியானது எதிர்வரும் தினங்களில் நாடாளுமன்றில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்த்து அமைச்சருக்கு ஆதரவ ளிப்பதற்காகவே வழங்கப்பட்டுள்ளது.