விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேச தடை: சரத் வீரசேகரவின் கருத்துக்கு, தமிழ் தரப்பினர் எதிர்ப்பு

சிறீலங்கா நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது எனக் அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு, தமிழ் தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்த அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,   “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை கொலை செய்யவில்லை.  விடுதலைப் புலிகள் பொது மக்களை கொலை செய்தார்கள் என்பது, ஆதரமற்ற ஒரு போலியான குற்றச்சாட்டு.  இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தின் போது, தமிழர்கள் மீது, இலங்கையின் முப்படைகளே தாக்குதல்களை நடத்தியது. இலங்கை அரச படைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும், அதனை சரத் வீரசேகரவும் எதிர்கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதை தடுப்பதற்கும், தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்குவதற்காகவுமே, சரத் வீரசேகர இவ்வாறான திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றார். இதுவொரு முழுமையாக ஜனநாயக விரோத செயற்பாடு. அவ்வாறான சட்டமூலம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக நாம் செயற்படுவோம். இவ்வாறான செயற்பாடொன்றை இலங்கை அரசாங்கம் செய்யும் பட்சத்தில், சர்வதேசத்திற்கு முன்பாக தொடர்ந்தும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும்” என்றார்.

முன்னதாக சிறீலங்கா நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர

இது குறித்து  பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரிய நாடாளுமன்ற சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாசிசவாதம் தொடர்பிலோ அல்லது ஹிட்லர் தொடர்பிலோ பேச முடியாது. அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு.  அதனால், இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” என்றார்.