புதியவகை கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு

சிறீலங்காவில் கண்டறியப்பட்ட பரவிவரும் புதியவகை கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சு ஆய்வினை ஆரம்பித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 56 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 66 ஆயிரத்து 984 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 688 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறறுவரும் அதேவேளை 384 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு பொது மக்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பயணங்களை மட்டுப்படுத்தவும், அதிகளவிலான மக்கள் இருக்கும் இடங்களைத் தவிர்க்கவும், முக்கவசம் அணியவும், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர், வைரஸை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், புதியவகை கொரோனா பரவல் குறித்து  சுகாதார அமைச்சு ஆய்வினை ஆரம்பித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய மாறுபாட்டின் பரவல் வீதம் அதிகமாக காணப்படுவதாக ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தற்போது குறித்த தொற்று, கொழும்பு, அவிசாவளை, இங்கிரிய, பியகம, வத்தளை, மத்துகம, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.