நாடாளுமன்ற விவாதத்தில் சிறீலங்கா தொடர்பாக உரத்துக் கேள்வி எழுப்புவேன் – Siobhain McDonagh

ஐ.நா அமர்வு தொடர்பாக, ‘இலக்கு’ தொடுத்த வினாக்களுக்கு  பிரித்தானியாவின் தொழிற்கட்சியைச் சார்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர் ஷிவோண் (Siobhain) அளித்த பதில்கள்

வினா: கோட்டாபய தலைமையிலான தற்போதைய சிறீலங்கா அரசு, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற அமர்வின் போது மேற்கொள்ளப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து தற்போது வெளியேறி விட்டது. அவ்வாறான ஒரு பின்புலத்தில் 2009 இல், சிறீலங்காவில் முடிவுக்கு வந்த இனவழிப்புப் போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் ஜெனீவா மனித உரிமை ஆணையத்தின் 46ஆவது அமர்வுக்குத் தலைமை தாங்கும் என எதிர்பார்க்கப்படும் பிரித்தானிய அரசு கைக்கொள்ளவிருக்கின்ற மூலோபாயம் என்னவென்று விளக்க முடியுமா?

பதில் –

தொழிற்கட்சி சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், ஓர் எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற வகையிலும் பிரித்தானிய அரசு எப்படிப்பட்ட நடவடிக்கையை முன்னெடுக்கப்போகின்றது என என்னால் கூற முடியாது. ஆனால் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் (House of Commons)  சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவேண்டிய நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கட்சிகளுக்கிடையிலான ஒரு விவாதத்தை சபையில் நான் மேற்கொள்ள இருக்கிறேன். இந்த விவாதத்துக்கு அரசைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் பதிலிறுப்பார். எதிர்வரும் மனித உரிமை அமர்வில் பிரித்தானிய அரசு எடுக்கவிருக்கும் நிலைப்பாடு தொடர்பாக அவ்வேளையில் தெளிவு ஏற்படும் என நான் நம்புகிறேன்.

வினா: சிறீலங்காவில் போர்க்குற்றங்கள் இழைத்தார்கள் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவதற்கும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் பலமான மற்றும் காத்திரமான நடவடிக்கைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் எடுப்பது தொடர்பாக இந்த ஆணையத்தின் உறுப்பு நாடுகள் மீது தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழுகின்ற இலங்கைத் தமிழ் மக்கள் எவ்வாறான அழுத்தத்தைப் பிரயோகிக்கலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

பதில் –

தங்களது உள்நாட்டு மற்றும் நாடு சார்ந்த பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு மனித உரிமை ஆணையத்தின் 46ஆவது அமர்வில் எவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்க இருக்கிறார்கள் என்பதை நேரடியாகவே அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது எனக் கருதுகின்றேன்.

வினா: பல முக்கிய குடிசார் பொறுப்புகளுக்கு இராணுவ அதிகாரிகளைத் தற்போதைய சிறீலங்காவின் அதிபர் கோட்டாபய இராஜபக்ச நியமித்து வருகிறார். இவ்வாறான ஒரு கவலை தரும் சூழ்நிலையில், நாடாளுமன்ற சனநாயக மரபில் உயர்ந்து நிற்கும் பிரித்தானியா எவ்வாறு பதிலிறுக்கப் போகிறது?

பதில் –

சிறீலங்காவின் தற்போதைய பிரச்சினைகள் மிகவும் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. போரின் கடைசிக் கட்டத்தில் தமது சொந்த மக்களாகிய ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்படுவதில் தாம் வகித்த பங்கு தொடர்பாக தற்போதைய அதிபரும் அவரது சகோதரரான பிரதம அமைச்சரும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களை இழைத்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். போர்க்குற்றங்களை இழைத்தார்கள் எனக் குற்றஞ்சாட்டப்படும் இராணுவ அதிகாரிகள், ஊழல்கள், வன்முறைகள் மற்றும் பொதுவான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் போன்றவர்கள் உட்பட தங்கள் நெருங்கிய சகாக்கள் பலரை அரசின் உயர் பதவிகளுக்கு அவர்கள் நியமித்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் நடைபெற இருக்கின்ற விவாதத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக நான் உரத்துக் கேள்வி எழுப்புவேன். சிறீலங்காவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராகவும்  சனநாயகம், மனித உரிமைகள், போன்றவற்றை அங்கு நிலைநாட்டவும் சட்டத்தின் ஒழுங்கைப் பேணவும் பிரித்தானியா எடுக்கப் போகும் நடவடிக்கைகளே பன்னாட்டு அரங்கில் நாம் வகிக்கப் போகும் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கப் போகின்றன.