30 முதல் 60 வயதுக்கிடைப்பட்ட  அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்- அமைச்சர் சுதர்ஷனி

30 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்ட தொழில் செய்யும் அனைத்து பிரஜைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கொரோனா ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”கோவக்ஸ் திட்டத்தின் மூலம் முதல் தொகுதி தடுப்பூசிகள் பெப்ரவரி இறுதிக்குள் இலங்கையை வந்தடையும்.  மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் 4,000 மத்திய நிலையங்களில் தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் அமைக்கப்படும் ஒவ்வொரு தடுப்பூசி மத்திய நிலையம் ஊடக தினமும் 300 பேருக்கு தடுப்பூசி போடப்படும்” என்றார்.

இந்நிலையில், 09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி அரசாங்கத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும்  பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் 09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி அரசாங்கத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்றும்  அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை இலங்கையில் 69 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் 356 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றால் உலகளவில் 106,755,003 பேர் பாதிக்கப்பட்டும், 2,328,814 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.