நீதிக்கான பேரணி கிளிநொச்சியை வந்தடைந்தது – இன்று யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசம்

கிளிநொச்சியை நேற்றிரவு வந்தடைந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான பேரணி இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கவுள்ளது. இதில் பங்கேற்கப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தயாராகியுள்ளனர்.

தமிழ்பேசும் மக்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் சர்வதேசத்திடம் நீதி கோரியும் முன்னெடுக்கப்படும் மாபெரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தின் நான்காம் நாளான நேற்று வவுனியாவில் இருந்து காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி ஹொறவப்பொத்தானை வீதி ஊடாக மன்னார் நோக்கிப்பயணித்தது.

நண்பகல் 12 மணியளவில் மன்னார் மடுச் சந்தியை அடைந்த பேரணி அங்கிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நகர்நோக்கிச் சென்றது. இதன்போது, பிரதான வீதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி குறித்த பேரணி மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகரைச் சென்றடைந்தது.

மன்னார் பிரதான பாலத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையையும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறியப்படுத்தினர். அத்துடன், பேரணியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களின் இலக்கங்களையும் பொலிஸார் பதிவுசெய்த பின்னர் மன்னார் நகரப் பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். மன்னார், பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகரப் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடி வரை குறித்த பேரணி சென்றது.

வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர். மேலும், வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களுடன் பெரும் எண்ணிக்கையான முஸ்ஸிம் மக்களும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டனர்.

குறித்த பேரணி பெருமளவு மக்கள் வெள்ளத்துடன் மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகருக்குநேற்று மாலை சென்றது. அங்கிருந்து மாங்குளம், திருமுறிகண்டி, இரணை மடுச் சந்தி ஊடாகச் சென்ற பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியை நேற்றிரவு 8 மணியளவில் வந்தடைந்தது. இறுதி நாளான இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கிப் பேரணி வருகின்றது.

இந்தப் பேரெழுச்சிப் பேரணியில் பங்கேற்றுள்ள தமிழ்பேசும் மக்கள் அரசுக்கு எதிராகவும் இராணுவத்துக்கு எதிராகவும் விண்ணதிரக் கோஷங்களை எழுப்புவதுடன் சர்வதேசத்திடம் நீதி கோரி வேண்டுகோள்களையும் விடுத்து வருகின்றனர்.