உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் சவாலாக விளங்கும் சிறீலங்கா

இன்றைய உலகில் சிறீலங்காவின் செயற்பாடுகள் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் நேரடியான சவால்களைத் தோற்றுவித்து வருகிறது. உலக நாடுகளின் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்தினதும், செயற்பாட்டினதும் மிக முக்கியமான நோக்கு முதலாவது, இரண்டாவது உலகப் பெரும்போர்களால் உலக அமைதியும் பாதுகாப்பும் இழக்கப்பட்டது போன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் இவ்வுலகில் ஏற்படாது தடுப்பதாகும்.

சிறீலங்கா ஐக்கிய நாடுகள் சபையின் இந்நோக்கிற்கு எதிராக

  • இந்துமா கடலை ஆதிக்க போட்டிகளின் களமாக்கும் பொருளாதார இராணுவ உடன்படிக்கைகள் மூலமும்,
  • அனைத்துலகச் சட்டங்கள் முறைமைகளுக்கு கட்டுப்படாத வகையில் மனித உரிமை மீறல்களை வெளிப்படையாகவே மீறி, தனது பாராளுமன்றச் சிங்களப் பெரும்பான்மையினைப் பயன்படுத்தி, ஒரு இனம் – ஒரு மதம் – ஒரு நாடென்ற இராணுவ ஆட்சியைப் பாராளுமன்ற கொடுங்கோன்மை ஆட்சியாக நடத்தியும்,

 உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் சவால்களை உருவாக்கி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையகத்தால் மட்டுமே ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கு பாதுகாப்புச்சபையின் ரத்து உரிமையையும் மீறி ஒரு நாட்டின் மீது மனிதஉரிமைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் அல்ல, சாதாரண பெரும்பான்மை வாக்குகள் மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்ள அதிகாரம் உண்டு. இத்தகைய உலகின் மீயுயர் சக்தி படைத்த மனிதஉரிமை ஆணையகத்தின் நெறிப்படுத்தல் ஒழுங்குமுறையான 2015ஆம் ஆண்டின் 30/1 தீர்மானத்திற்கான தனது இணை அனுசரணையைத்தான் கடந்த ஆண்டு இன்றைய சிறீலங்கா அரசு விலத்தியது. அதன் மூலம் உலக நீதிமன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய உலகப் பிரச்சினையாக இந்தப் பிரச்சினையைச் சிறீலங்கா மாற்றிக் கொண்டது.

இந்த உண்மை நிலையை இன்றைய சிறீலங்கா அரச அதிபரின் விசாரணை ஆணைக்குழு அறிவிப்பை, உள்ளூர் விசாரணை என்ற வகையில், இதுவரை நடந்த சம்பவங்களின் அடிப்படையில் ஏற்க முடியாதென்ற ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இவ்வாண்டு அறிக்கை உலகுக்கு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புள்ள உறுப்புரிமை நாடுகள் ஒவ்வொன்றுக்கும் சிறீலங்காவில் மனித உரிமையை நிலைநாட்ட இவ்வாண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் முன்மொழியும் தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டிய கடமை இயல்பாகியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தைப் பலவீனப்படுத்தச் சிறீலங்கா, ‘அரசு’ என்ற முறையில் தனக்கு மற்றைய நாடுகளுடன் உள்ள சந்தை மற்றும் இராணுவ உறவுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவும் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய வல்லாண்மைகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் உறவாட  உரிமை பெற்ற இந்துமா கடலின் கரையோர நாடுகளின் அமைப்பின் தலைமைப் பதவியில் சிறீலங்காவை இந்தியா செயற்பட வைத்தும், இந்தியா தாங்கள் விடுதலைப்புலிகளுடனான யுத்தகாலத்தில் வழங்கியதை விட அதிகமான நவீன ஆயுதங்களை நேரடியாக அளித்தும், பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கியும், சீனாவுடைய இறைமைக்குரிய இடமாக இலங்கைத்தீவு மாறாது பாதுகாக்கவும், பாகிஸ்தானுடன் இராணுவப் பயிற்சியில் சிறீலங்கா நேரடியாகக் கைகுலுக்கத் தொடங்கியுள்ளதை விலக்கவும் படாதபாடுபடுகிறது. இவைகள் சிறீலங்கா ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையத்தின் செயற்பாடுகளில் இருந்து தன்னைப் பாதுகாக்கும் கவசமாக இந்தியாவை முன்னிறுத்தும் என்பதற்கான வெளிப்பாடுகளாகவும் உள்ளது.

இந்நிலையில், ஈழத்தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினை இன்று உள்நாட்டுப் பிரச்சனையல்ல. அனைத்துலகப் பிரச்சினை. அதனாலேயே தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் உறுப்புரிமை நாடுகளுக்கு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றை விசாரணை செய்ய அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த விவகாரம் ஜெனிவாவில் இருந்து நியூயோர்க்கு மாற்றப்பட வேண்டும் என்கிற ஏகோபித்த குரலை எழுப்பியுள்ளன.

ஈழத்தமிழர்களின் இந்தக் குரல், உலக அமைதிக்கான குரல். உலகப் பாதுகாப்புக்கான அழைப்பு. இதனைக் காலம் தாழ்த்தாது உலகெங்கும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களுக்கும், ஊடகங்களுக்கும், அரசாங்கங்களுக்கும் அறிவித்து தெளிவாக்க வேண்டும். அத்துடன் புலத்தில் உள்ள அனைத்து தமிழர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் இலங்கையில் இருந்து விடுக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் கோரிக்கைக்கு பலமும் வளமும் சேர்க்க வேண்டும். இதற்கு உழைக்க புலம்பெயர் தமிழர்களை அழைப்பதே இலக்கின் இவ்வார இலக்காக உள்ளது.