இந்திய மக்களின் மனதில் இலங்கை பிரதான இடத்தைப் பிடித்துள்ளது -கோபால் பாக்லே 

சர்வதேச தொடர்புகள்தான் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடுவதற்கான சிறந்த வழிமுறை எனத் தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அயல் நாடுகளுக்கு முதலிடம் என்பதே இந்திய பிரதமர் நரேதந்திர மோடியின் கொள்கை என்று கூறியுள்ளார்.

மேலும்  இந்தியாவின் அயல் நாடுகளில் இலங்கையானது இந்திய மக்களின் மனதில் பிரதான இடம்பிடித்துள்ள நாடு என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையில் பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் சிறப்பிடம் உள்ளது.

இந்நிலையில், உலக வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டெழும் நோக்கில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் திட்டம் நிச்சயம் வெற்றியளிக்கும் .

அத்துடன், இந்திய தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விமான நிலையத்திற்குச் சென்றிருந்தமையானது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் உச்ச நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், தடுப்பூசி வழங்குவதன் மூலம் இலங்கை மீண்டும் உலக நாடுகளுடன் தொடர்புகளைப் பேணக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.

காலம் மிக முக்கியமானது என்பதுடன் எவ்வளவு வளங்கள் காணப்பட்டாலும் சுகாதாரம் மற்றும் விஞ்ஞான ரீதியில் முன்னேற்றமடைந்திருந்தாலும் எந்தவொரு நாட்டிற்கும் இந்த வைரசுடன் போராட முடியவில்லை”  என்றார்.