அதிபராகப் பதவியேற்றவுடன் பைடன் ஒப்பமிட்ட பதினேழு (17) நிறைவேற்றுக் கட்டளைகள் – தமிழில் ஜெயந்திரன்

141
285 Views

னது அங்குரார்ப்பண நிகழ்வு நிறைவுபெற்ற சில மணித்தியாலங்களுக்குள்ளேயே, தான் ஒப்பமிட்ட 17 நிறைவேற்றுக் கட்டளைகள், மகஜர்கள், பிரகடனங்கள் என்பவற்றின் மூலம் நாட்டுக்கு மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியவை என அவரது உதவியாளர்கள் கருதிய ட்ரம்ப் காலத்து நிர்வாகக் கொள்கைகளை பைடன் (Biden) மாற்றியமைத்திருக்கிறார்.

தனது அங்குரார்ப்பண உரையில் ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு போன்ற விடயங்களை பைடன் வலியுறுத்திய போதிலும், பைடன் முதன் முதலாக முன்னெடுத்த செயற்பாடுகள் முன்னைய அதிபரான ட்ரம்ப்பின் கோவிட் நோய்த்தொற்றைக் கையாளும் அணுகுமுறையைத் தள்ளி வைத்து, காலநிலை மாற்றம் தொடர்பாக அவருக்கிருந்த அணுகுமுறையை முற்றிலும் மாற்றி, குடிவரவுக்கு எதிரான அவரது கொள்கைகளைத் தூக்கியெறிந்து, தளம்பல் நிலையிலிருந்த பொருண்மியத்தை வலுவாக்கி, பல்லினத் தன்மையை ஊக்குவிக்கும் அரசின் செயற்பாடுகளுக்கு மீண்டும் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்.

அவர் முன்னெடுத்த செயற்பாடுகளின் நோக்கங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

கோவிட்-19 நோய்ப் பரம்பல் தொடர்பாக

ஜெவ்றி டி ஸியென்ஸ் (Jeffrey D Zients) என்பவரை கோவிட்-19 நோயைக் கையாள்வதற்கான இணைப்பாளராக நியமிக்கின்ற நிறைவேற்றுக் கட்டளையில் பைடன் ஒப்பமிட்டிருக்கிறார். இந்நோய்த் தொற்றுத் தொடர்பாக மிகவும் காத்திரமான செயற்பாடுகளை நாடு தழுவிய வகையில் முடுக்கிவிடும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிபருக்குப் பொறுப்புக்கூறும் பணி இவருடையதாகும். முன்னர் அதிபராக இருந்த ட்ரம்ப் கலைத்த நாடளாவிய பாதுகாப்பு சபையில் ஒரு அங்கமாக இருந்த பூகோள சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உயிரியல் ஆபத்துக்களுக்கான பாதுகாப்பு என்பவற்றுக்குரிய தலைமைப் பணிமனையை பைடன் மீண்டும் நிறுவியுள்ளார்.

முகக்கவசம் கட்டாயம் அணிவது தொடர்பாக ஒரு நாடளாவிய சட்டத்தை அமுலாக்குவதைத் தவிர்த்து அனைத்து அரச பணிமனைகளிலும் அனைத்து அரச பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்பதைக் பைடன் கட்டாயமாக்கியிருக்கிறார். அனைத்து அமெரிக்கர்களையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தி, ‘நூறு நாட்கள் முகக்கவசம் அணியும் திட்டத்தைத்” தொடக்கி வைத்ததுடன் கோவிட்-19 மேலும் பரவாமல் இருக்கப், பொது மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் படி எல்லா அரச மற்றும் உள்ளுர் அதிகாரிகளையும் பைடன் பணித்திருக்கிறார்.

உலக சுகாதாரத் தாபனத்திலிருந்து தமது உறுப்புரிமையை நீக்கியது மட்டுமன்றி அதற்கான நிதியுதவியையும் முன்னைய அதிபரின் நிர்வாகம் நிறுத்தியிருந்த நிலையில், அந்த அமைப்புடனான உறவுகளை மீண்டும் பைடன் ஏற்படுத்தியிருக்கிறார். மேற்படி அமைப்புக்கான அமெரிக்காவின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவுக்கு அந்தனி பவுச்சி (Dr.Anthony S. Fauci) தலைமை தாங்குகிறார். இந்த வாரமே அவர் இந்தப் பணியை ஆரம்பிக்கும் பொருட்டு குறிப்பிட்ட அமைப்புடன் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

குடிவரவு மற்றும் பயண அனுமதி வழங்குவது தொடர்பாக

வழமையாக ‘கனவு காண்பவர்கள்” (dreamers) என அழைக்கப்படும் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்படுகின்ற சிறுவர்களை நாடுகடத்துகின்ற செயற்பாட்டை தடுக்கின்ற ‘சிறுவர் வருகைத் திட்டத்தை’ பைடன் ஒரு நிறைவேற்றுக் கட்டளையை வழங்கி மீண்டும் செயற்படுத்தியிருக்கின்றார். ட்ரம்ப் இத்திட்டத்தை இல்லாமல் செய்திருந்தார் என்பது நினைவிற் கொள்ளப்படவேண்டும். ‘DACA” என்று அழைக்கப்படும் சிறுவருக்குச் சாதகமான ஒரு திட்டத்தை முற்றிலும் நிறுத்துவதற்கு ட்ரம்ப் முன்னர் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருந்தார். இப்படியான சிறுவருக்கு நிரந்தர வதிவிட உரிமையை வழங்கிக், காலப்போக்கில் அவர்களுக்குக் குடியுரிமையை வழங்க இந்த நிறைவேற்றுக் கட்டளை வழிவகுக்கிறது.

சனத்தொகைக் கணக்கெடுப்பில் குடியுரிமையற்றவர்களை விலக்கி வைக்கும் கட்டளையை ட்ரம்ப் பிறப்பித்திருந்தார். இதனையும் தனது நிறைவேற்றுக் கட்டளையால் பைடன் மாற்றியமைத்திருக்கிறார். சட்டபூர்வமற்ற முறையில் நாட்டில் தங்கியிருக்கின்ற குடியேறிகளைப் பிடித்து நாடுகடத்துகின்ற செயற்பாட்டுக்கும் தடை போடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் லைபீரிய நாட்டவர்களை நாடுகடத்துகின்ற செயற்பாடும் இக்கட்டளையால் தடுக்கப்பட்டிருக்கின்றது.

குடிவரவை மட்டுப்படுத்தும் நோக்குடன் முன்னாள் அதிபர் மேற்கொண்டிருந்த ஒரு முயற்சிக்குப் பாரிய அடி விழுந்திருக்கிறது. முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பல நாடுகளிலிருந்தும் சில ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் புதிய குடியேறிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் பைடன் தற்போது நீக்கியிருக்கின்றார். பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட விசா விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் படியும் முன்னர் அமுலில் இருந்த இத்தடையின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் இராஜாங்க அமைச்சை பைடன் பணித்திருக்கிறார்.

மெக்ஸிகோ எல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற எல்லைச் சுவரின் கட்டுமானங்களையும் பைடன் தற்போது நிறுத்தி வைத்திருக்கிறார். மேற்படி எல்லைச் சுவரின் கட்டுமானப் பணிக்கெனப் பல பில்லியன் டொலர்களைத் திருப்பி விடுவதற்கு வழிசமைத்த ‘நாடளாவிய அவசரகாலப் பிரகடனத்தையும்” பைடன் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார். எல்லைச் சுவரைக் கட்டுவதற்கு அரச நிதியைப் பயன்படுத்திய செயலின் சட்டபூர்வத் தன்மை பற்றியும் ஆழமாக ஆய்வு செய்யப்படும் எனவும் அக்கட்டளை தெரிவிக்கிறது.

காலநிலை மாற்றம் தொடர்பாக

காலநிலை மாற்றத்தைக் கையாளும் விடயம் தொடர்பாக பைடன் மேற்கொண்ட நிறைவேற்றுக் கட்டளைகளில் முக்கியமானது, பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தங்களில் மீள இணைவதற்கான ஒரு கடிதத்தில் பைடன் ஒப்பமிட்டதாகும். இக்கடிதத்தின் படி ஒப்பமிட்ட 30 நாட்களில் அமெரிக்கா இந்த ஒப்பந்தங்களில் மீளவும் இணைந்து கொள்ளும். பூகோளம் வெப்பமாதல்,  மற்றும் புதைபடிவங்களிலிருந்து பெறப்படும் நிலக்கரி, எண்ணெய், இயற்கை வாயு போன்றவற்றை எடுக்கின்ற செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன், 200 நாடுகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்த கூட்டமைப்பிலிருந்தும் வெளியேறுவதாக 2019ஆம் ஆண்டு ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இன்னும் சில நிறைவேற்றுக் கட்டளைகள் மூலம் சுற்றுச் சூழல் தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் கொண்டிருந்த கொள்கைகள் தலைகீழாக மாற்றப்பட்டிருக்கின்றன. கனடாவின் அல்பேட்டாக் கழிமுகத்திலிருந்து அமெரிக்காவின் இலைநொய் (Illinois), ரெக்சாஸ் (Texas) போன்ற மாநிலங்களுக்கு எண்ணெய் பரிமாற்றத்துக்கென வடிவமைக்கப்படும் Keystone XL pipeline என்னும் குழாய்த்தொகுதிக்குரிய உரிமமும் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. வாகனங்களிலிருந்து வெளியிடப்படும் புகை தொடர்பாக தளர்த்தப்பட்டிருந்த விதிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. பல தேசிய நினைவுச்சின்னங்களின் அளவைக் குறைக்கின்ற முடிவு மாற்றப்பட்டிருக்கின்றது. ஆட்டிக் தேசிய வனவிலங்குச் சரணாலயத்தில் வழங்கப்பட்டிருந்த  எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் குத்தகைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் பசுமை இல்ல வாயுக்களின் செலவு தொடர்பாக ஆராயும் குழுவின் செயற்பாடும் மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் ‘1776 ஆணையத்தின்” செயற்பாட்டையும் பைடன் முடிவுக்குக் கொண்டுவருகிறார். மேற்படி ஆணையம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில் அமெரிக்காவின் வரலாறு தொடர்பான பல விடயங்களின் நடுவில் ‘அடிமைமுறை வகித்த பங்கு’ திரிபுபடுத்தப்பட்டிருக்கின்றது என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். பல்லினத்தன்மையை ஊக்குவிக்கவும் எல்லாவிதமான மக்களை உள்வாங்கவும் பயிற்சிகளை நடத்துவதற்கு அரச நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள், ஏனைய நிறுவனங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்டிருந்த நிறைவேற்றுக் கட்டளையும் மீறப்பெறப்பட்டிருக்கின்றது.

அனைத்து அரச நிறுவனங்களும் கட்டமைப்பு ரீதியிலான இனவாதத்தை வேரோடு அகற்றுவதற்காக நிறுவப்பட்டிருக்கும் உள்நாட்டுக் கொள்கைச் சபை (Domestic Policy Council) என்னும் அமைப்புக்கு தலைவியாக, நிறுவனங்களுக்கிடையிலான மிகக் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இலக்குடன் சூசான் றைஸ் (Susan E.Rice) என்பவரை பைடன் நியமித்திருக்கிறார். தமது நிறுவனங்களில் காணப்படும் சமத்துவத் தன்மை தொடர்பாகவும் கொள்கைகளிலும் திட்டங்களிலும் வாய்ப்புகளை வழங்குவதில் உள்ள தடைகளையும் ஆய்ந்து 200 நாட்களுக்குள் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி அனைத்து நிறுவனங்களையும் அவரது கட்டளை பணித்திருக்கிறது. எல்லாப் பின்னணிகளையும் சேர்ந்த அமெரிக்கர்கள் அரச நிறுவனங்களின் வளங்கள், நன்கொடைகள், சேவைகள் என்பவற்றை சமத்துவமான முறையில் பெறுவதற்கான உத்தரவாதத்தை இக்கட்டளை வழங்குகிறது. அரச நிறுவனங்களில் சமத்துவத்தையும் பல்லித்தன்மையையும் வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக மதிப்பீடுகளை மேற்கொள்ளத் தேவையான புதிய வழிவகைகளையும் ஒரு தரவு சேகரிக்கும் குழுவையும் இந்தக் கட்டளை ஆரம்பிக்கிறது.

இனம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பாக

பாலின ஈடுபாடு தொடர்பாகவோ, பாலின அடையாளம் தொடர்பாகவோ அரச நிறுவனம் எப்படிப்பட்ட வேற்றுமையும் காட்டக்கூடாது என்று வலியுறுத்தும் 1964ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட குடிமக்கள் உரிமைச் சட்டத்தின் 7ஆவது விடயத்தை இன்னொரு நிறைவேற்றுக் கட்டளை மீள அமுல்படுத்தியிருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைளை இச்செயற்பாடு முற்றிலும் மாற்றியமைக்கிறது.

பொருண்மியம் தொடர்பாக

வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்றும் செயற்பாடுகளை நாடளாவிய வகையில் நிறுத்தி வைக்கும் முடிவை நோக்கி பைடன் நகர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. கோவிட்-19 நோய்ப் பரம்பலின் காரணமாக, அடமானக் கடன்களை அறவிடும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தச் செயற்பாட்டை தொடர்ந்தும் நீடிக்கும்படி விவசாயம், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் சார்ந்த விடயங்கள், வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி போன்றவற்றைக் கையாளும் அரச நிறுவனங்களை பைடன் பணித்திருக்கிறார். இந்த நீடிப்பு மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வரையாவது தொடருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட கடன்களுக்கான வட்டியையும் முக்கிய கட்டணங்களையும் அறவிடுகின்ற செயற்பாடு தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவும் செப்டெம்பர் வரை தொடர வேண்டும் என்பது பைடனின் விருப்பம். ஆனால் அதே நேரம் சில முற்போக்குக் குழுக்களும் அமெரிக்க காங்கிரசில் உள்ள சில சனநாயகக் கட்சி உறுப்பினர்களும் பைடன் இன்னும் அதிகப்படி சென்று ஒவ்வொரு மாணவருக்கும் 50,000 டொலர் வரை கடனை இல்லாமற் செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.

அரச பொறுப்புக்கூறல் தொடர்பாக

அரசில் தனக்கு முதல் அதிபர்களாக பணியாற்றிய ஒரு சிலரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி பைடனும் மக்கள் மீண்டும் அரசில் நம்பிக்கை கொள்ளக்கூடிய விதத்தில் தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரு அறநெறிக் கோவையை உருவாக்கியிருக்கிறார். தனது நிறைவேற்றுப் பகுதியில் பணிபுரிய நியமிக்கப்பட்டவர்கள் ஒப்பமிடுவதற்கென ஒரு அறநெறி வாக்குறுதியை பைடன் யாத்திருக்கிறார்.

முன்னைய அதிபரினால் அமுலாக்கப்பட்ட அனைத்து ஒழுங்குமுறைகளையும் ஆய்வு செய்து பொருத்தமானவற்றை தேர்ந்தெடுப்பதற்கான காலத்தை வழங்கும் நோக்குடன் பைடன் தற்காலிகமாக அவற்றை நிறுத்தி வைத்திருக்கிறார். தேர்தல் நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் தராத வகையில் ஒரு முற்றிலும் செயற்றிறன் அற்ற அதிபரினால் உருவாக்கப்ட்ட ‘நள்ளிரவு விதிமுறைகள், கொள்கைகள்” என்று அழைக்கப்பட்டவற்றை தவிர்க்கும் நோக்குடன் இந்த மகஜர் (Memorandum) இயற்றப்பட்டிருக்கின்றது. பொதுமக்களோ அல்லது தொழில்துறைகளோ கொள்கைகளை மீளாய்வு செய்வதற்கான வாய்ப்பை விரைந்து செயற்படும் இந்த நடைமுறை இல்லாதொழிக்கிறது.

நன்றி: நியூ யோர்க் ரைம்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here