ஓவியர் புகழேந்தியின்; ‘நான் கண்ட போராளிகள் : களமும் வாழ்வும்’நூல் வெளியீடு

தமிழகத்தில் வசிக்கும் ஓவியர் புகழேந்தி அவர்கள் தனது புதிய நூலாக, தான் ஈழத்தில் தன்னுடன் பழகிய போராளிகளின் நினைவுகளை தாங்கிய ‘நான் கண்ட போராளிகள்:களமும் வாழ்வும்’ என்னும் நூலை வெளியீடு செய்துள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக அவர் 36 ஆண்டுகளாக, தமிழீழம் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்ட 102 ஓவியங்களின் தொகுப்பான ‘போர் முகங்கள்: ஈழப்போர் ஓவியங்கள்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். தமிழீழத்தின் அடுத்த தலைமுறைகளிடம் இந்த ஆக்கங்களை கையளிக்கும் வகையில் அவரது இல்லத்தில் 27.12.2020 அன்று வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

Untitled 1 2 ஓவியர் புகழேந்தியின்; ‘நான் கண்ட போராளிகள் : களமும் வாழ்வும்’நூல் வெளியீடு

தனது ஓவியத்தின் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தை உலகறியச் செய்தவர்களில் ஓவியர் புகழேந்தி அவர்கள் முக்கியம் பெறுகின்றார். ஈழப்போராட்டம் தொடர்பாக தான் வரைந்த ஓவியங்களை ஈழத்திலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் காட்சிப்படுத்தி, மக்களின் மனதில் ஈழப் போராட்டம் பற்றிய தெளிவை ஏற்படுத்தி யவர்.

ஈழத்திற்கு வருகை தந்திருந்த சமயம், தேசியத் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போராளிகளுக்கு ஓவியப் பட்டறை நடத்தி, அவர்களுக்கு ஓவியம் வரைவதற்கு கற்றுக் கொடுத்திருந்தார்.

‘நான் கண்ட போராளிகள்: களமும் வாழ்வும்’ என்ற நூலில் தான் சந்தித்த 33 போராளிகள் குறித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். மிகவும் உணர்வுபூர்வமாக இந்த ஆக்கத்தை எழுதியிருக்கின்றார்.

 சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், பல இளைய சமுதாயத்தினர் கலந்து கொண்டதுடன், அவரின் நூலை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் தமிழர் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் கலந்து கொண்டார்.

அத்துடன் தூத்துக்குடியில் 10.01.2021 அன்று ‘நான் கண்ட போராளிகள்: களமும் வாழ்வும்’ நூல் வெளியீடு நடைபெற்றது. அணுஉலை எதிர்ப்பு இயக்க போராளி சு.ப. உதயகுமார் அவர்கள் நூலை வெளியிட இளைஞர்கள் பலர் நூலை பெற்றுக் கொண்டார்கள்.