கிழக்கில் புதிய வடிவம் பெறும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை கிழக்கு மாகாணத்தில் புதிய வடிவம் பெற்றிருக்கின்றது. கால்நடை வளர்ப்போரே இந்த ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். கால்நடைகளின் வாழ்வாதாரமாகிய மேய்ச்சல் தரையை சிங்களவர்கள் ஆக்கிரமித்திருப்பதே இதற்குக் காரணம்.

இந்த நிலங்கள் பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாகப் பயன்பட்டு வந்தன. கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் பயிர் செய்யும் நிலமாக மாற்றியிருக்கின்றார்கள். இது கால்நடைகளை மேய்ச்சலுக்கு வழியில்லாத அவல நிலைமைக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகளில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவை மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகளில் இருக்கின்றன. இந்தக் கால்நடைகளில் இருந்து நாளாந்தம் ஆறாயிரம் லீற்றர் பால் உற்பத்தியாகின்றது. இதுவே அந்தக் கால்நடை வளர்ப்புக் குடும்பங்களின் பாரம்பரிய வாழ்வாதாரம். இந்தப் பால் உற்பத்தி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மேய்ச்சல் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதனால், 2  ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இது வாழ்வதற்கு வழியின்றி கால்நடைப் பண்ணையாளர்களை அந்த மாவட்டத்தில் இருந்து துரத்தியடிப்பதற்கான திட்டமிட்ட இன ஒடுக்குமுறையாகும் என கால்நடை பண்ணையாளர் சங்கத்தினர் கூறுகின்றனர்.

பல மாதங்களாகத் தொடர்கின்ற இப்பிரச்சினை முதலில் அரசியல்வாதிகளின் தீவிர கவனத்தைப் பெற்றிருந்த போதிலும், இப்போது கவனிப்பாரற்ற விடயமாக மாறியிருக்கின்றது என கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை அடைந்துள்ளார்கள். மேய்ச்சல் தரையின்றி கால்நடைகள் பாதிக்கப்பட்டிருப்பதனால், மேய்ச்சலுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கால்நடை வளர்ப்பாளர்கள் தடுமாறுகின்றார்கள்.

விவசாயமும், கால்நடை வளர்ப்பும் கிழக்கு மாகாண மக்களின் பிரதான தொழில்களாகும். மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தினால் கால்நடை பண்ணைத் தொழில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது.

பழக்கதோசத்தில் மேய்ச்சல் தரைகளாகிய ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பயிர்ச் செய்கை நிலங்களுக்குச் செல்லும் கால்நடைகள் தினமும் கொல்லப்பட்டு தடம் தெரியாமல் புதைக்கப்படுகின்றன. கன்றுகள் கடத்தப்படுகின்றன. இதுகுறித்து காவல் துறையில் முறையிட்டாலும், அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. பயிர்ச்செய்கை நிலங்களுக்கு கால்நடைகளைச் செல்லவிடக் கூடாது என அவர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள். ஆனால் கால்நடைகள் கொல்லப்படுவதையும், கடத்தப்படுவதையும் கவனிப்பார் எவருமில்லை என்று பண்ணையாளர்கள் கவலைப்படுகின்றார்கள்.

மேய்ச்சல் தரையில்லாத நிலையில், போதிய மேய்ச்சலின்றி பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலுற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கின்றது. பாலுற்பத்தியிலும், அதனைச் சார்ந்த தொழில் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள பெண்களைக் குடும்பத் தலைமையாகக் கொண்டுள்ள பல குடும்பங்கள் இதனால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.

தொலைவிடங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ள கால்நடை பண்ணையாளர்கள்  இதற்காக கூடிய நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. மாற்று வழியாகப் பலர் தமது கால்நடைகளை விற்க வேண்டிய நிலைமைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். இது அவர்களது இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட கால்நடைகளைத் தேடிச் சென்ற தமிழ் கால்நடைப் பண்ணையாளர்கள் சிலர் சிங்களவர்களினால் கடத்தப்பட்டு மோசமாகத் தாக்கப்பட்டதோடு அவர்களை  காவல்துறையினரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைக்கு ஆளாக்கியுள்ளார்கள்.   இந்த சம்பவம் மேய்ச்சல் தரைப் பிரச்சினையை மோசமாக்கியுள்ளது.

இந்தமேய்ச்சல் தரைப் பிரச்சினையில் கிழக்கு மாகாண ஆளுநரே பின்னணியில் உள்ளார் என்பது கால்நடைப் பண்ணையாளர்களின் சந்தேகம். தங்களது மேய்ச்சல் தரைகளில் சிங்களவர்கள் பயிர் செய்வதற்கு அனுமதியளித்து, தமிழர்களாகிய தங்களது பண்ணைத்தொழிலை இல்லாமல் செய்வதற்குத் திட்டமிட்ட வகையில் அவர் செயற்படுவதாகவே அவர்கள் நம்புகின்றார்கள்.