காலதாமதமில்லாத அனைத்துலக விசாரணை உடன்தேவை

லங்கைத் தீவில் உண்மையும், நீதியும், இழப்பீடுகளும் முன்னெடுக்கப்பட்டு, இனிமேல் முன்னைய நிகழ்வுகள் இடம்பெறாமை உறுதிசெய்யப்படல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையகத்தின் நிலைமாற்று நீதி முறைமையாக தீர்மானம் 30/1 மூலம் பரிந்துரைக்கப்பட்டது.

ஆயினும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரியில் சிறீலங்கா இந்தப் பரிந்துரைகளுக்கான வழிகாட்டல் தீர்மானத்தில் இருந்து விலகிக்கொண்டது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு முழுவதும் சிறீலங்கா சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்காத வகையில் நடந்து கொண்டுள்ளதை அனைத்துலக மன்னிப்புச் சபை பின்வருமாறு  பட்டியலிட்டு உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

  1. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தால், மனிதஉரிமை மீறல்களைச் செய்த படையினர் என விசாரிக்கப்பட வேண்டும் என்று யார் பட்டியலிடப்பட்டார்களோ அவர்களுக்குச் சிறீலங்கா அரசாங்கம் மதிப்பளித்து, தனது படைகளின் தலைமைப் பொறுப்புக்களில் அமர்த்திக் கொண்டது.
  2. கடந்த ஆண்டு மார்ச் 2020 இல் மிருசுவிலில் 5, 13, 15 வயதுச் சிறுவர்கள் உட்பட எட்டுத் தமிழரைச் சித்திரவதை செய்து கொன்றழித்த சுனில் இரத்நாயக்கா என்ற இராணுவப் பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தண்டனையில் இருந்து அவனை சிறீலங்கா ஜனாதிபதி விடுதலை செய்தார்.
  3. முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு நினைவு நாளான மே 19 ஐ சிறீலங்கா தனது தேசிய வீரர்கள் தினமாக அறிவித்து, கடந்த 2020ஆம் ஆண்டு அன்றைய தினம் ஐக்கிய அரசின் சிறீலங்காத் தூதரக அதிகாரியாக இருந்து எந்த இராணுவத்தினன், இலண்டனில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரித்தானியத் தமிழருக்குப் பகிரங்கமாகக் கொலை அச்சுறுத்தல் விடுத்துக் குற்றவாளியாகக் காணப்பட்டானோ, அவனுக்கு உயர்வளித்துப் போற்றவும் செய்தது.
  4. 1995ஆம் ஆண்டில் நவாலிக் கத்தோலிக்க தேவாலயத்தில் நடாத்தப்பட்ட இனஅழிப்பு நோக்கிலான விமானக்குண்டு வீச்சு நினைவினை நினைவு கூர்ந்தவர்களைச் சிறீலங்காப் படையினர் 09.07. 2020 இல் தள்ளிக் குழப்பியுள்ளனர்.
  5. செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தன்று மட்டக்களப்பில், நடத்த முற்பட்ட அமைதிப் போராட்டத்தில் பாதிப்புற்றவர்கள் ஒன்று கூடுவதைச் சிறீலங்கா கோவிட் 19 ஐச் சாட்டாக வைத்து நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்று தடுத்தது.
  6. சிறீலங்கா அரசியலமைப்பின் 19ஆவது பிரிவு வழங்கிய நீதித்துறை மற்றும் நிறுவனங்களின் சுதந்திரமான செயற்பாட்டு உரிமையை இன்றைய சிறீலங்கா அரசாங்கம் கடந்த ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றிய அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் வழி நீக்கி, அரச அதிபர் இடத்தில் அதிகாரக் குவிப்பு ஏற்படச் செய்தது.
  7. இந்த ஆண்டு 2021 சனவரியில் சிறீலங்கா அரசாங்கம், பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கைத் தொடர அனுமதி மறுத்து, குற்றம் சாட்டப்பட்டிருந்த அரச ஆதரவுக் கட்சியில் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற சிவநேசன் சந்திரகாந்தனுக்கு உதவியது.
  8. இந்த ஆண்டு சனவரி 8ஆம் நாள் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுச் சின்னத்தை கோவிட் 19 தனிமைப்படுத்தல் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி தகர்த்தது.

இவ்வாறு சிறீலங்காவில் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலையை வெளிப்படுத்தியுள்ள அனைத்துலக மன்னிப்புச் சபை, சிறீலங்கா அரச அதிபர் புதிதாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்க முற்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கூறிய “கடந்த காலங்களில் உள்ளூர் செயற்பாடுகள் பொறுப்புக் கூறலில் தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்துள்ள நிலையில், புதிய ஆணைக்குழுவொன்று எந்த முன்னேற்றத்தையும் தராது, இதன் விளைவாகத் தொடர்ந்தும் பாதிப்புற்றோர்க்கு நீதி மறுக்கப்படும். கடந்த காலங்களில் நிகழ்ந்தது போன்ற மனித உரிமை மீறல் வன்முறைகள் இனியும் நிகழாது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை” என்ற கூற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் மூலம் அனைத்துலக விசாரணையின் தேவையை அனைத்துலக மன்னிப்புச் சபை உலகின் முன் முன்னிறுத்தியுள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறீலங்கா குறித்த இந்த அறிக்கை தரும் செய்தியான அனைத்துலக விசாரணையை காலம் தாழ்த்தாது உடன் நடாத்தப்படல் வேண்டும் என ஒன்றிணைந்து, தாங்கள் வாழும் நாடுகளின் அரசுக்களிடம் வலியுறுத்தி பாதிப்புற்ற மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்தல் வேண்டும்.