மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? – ராச்குமார்

103
145 Views

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராச்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் இரண்டாவது பகுதி.

கேள்வி –புலம் பெயர்ந்த பல நாடுகளில், பல வருடங்களாக, பல அமைப்புகள் இயங்கி வருகின்றன. தற்போது நடைபெறவுள்ள ஐ.நா. அமர்விற்காக இந்த அமைப்புகள் கணிசமாக தங்கள் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். இவை எந்தளவில் தாக்கத்தை – மாற்றத்தைக் – ஏற்படுத்தும். இவர்களுடன் நீங்கள் கடந்த காலங்களில் வேலை செய்துள்ளீர்கள். தற்போதும் பங்களிப்பை வழங்குகின்றீர்கள். அவர்கள் ஐ.நா. மன்றத்தின் முன் நின்று சமூகவலைத்தளங் களின் ஊடாக தங்கள் பங்களிப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் – தாயகத்தில் மாத்திரமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஒற்றுமையின்மை என்பது இருக்கின்றது. அத்துடன் சரியான இராஜதந்திர, மூலோபாயத்தை நகரத்தும் இடத்தில் புலம்பெயர்ந்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களிடையேயும் உள்ள அரசியல் முரண்பாடுகள் இருக்கின்றன. தாயகத்தில் இது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. ஏனெனில், தேர்தல் அசியல் என்று வரும் போது, கட்சிகள் வெல்ல வேண்டும் என்பதிலே இந்த முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் புலம்பெயர் நாடுகளில் அப்படியான ஒரு அரசியல் இல்லை. இருக்க வேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில், தேர்தல் அரசியல் இங்கு இல்லை.

அடிப்படையாக சில தெளிவான விடயங்களை முன்வைக்க வேண்டிய இடத்தில் புலம்பெயர் மக்கள் இருக்கின்றனர். இன்னுமொரு விடயம். தாயகத்திலே இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இன அழிப்பு நடவடிக்கையிலிருந்து  அவர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு தரப்பு அங்கு இல்லை. 1983இல் இனக்கலவரம் நடந்த போது, தமிழ் மக்களை கப்பல்களில் ஏற்றி யாழ். குடாநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது யாழ்.குடாநாடு ஓரளவு பாதுகாப்பாக இருந்தது. அதற்குப் பின்னர் நடைபெற்ற இன அழிப்பின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் பாதுகாப்பு அரணாக நின்று செயற்பட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. 1983இல் நடைபெற்றது போன்ற இனக்கலவரம் ஏற்படாது இருப்பதற்கு காரணமாக விடுதலைப் புலிகள் ஓர் ஆயுத அமைப்பாக இருந்தது. 2009இற்குப் பின்னர் அந்தப் பலம் இல்லாது போய்விட்டது. இப்போது இப்படியான இன அழிப்பு வருவதற்கான எல்லா அறிகுறிகளும் இருக்கின்றது.

ஐ.நா.வில் அல்லது ஒரு சர்வதேச ஆய்வுகளில் ஒரு இன அழிப்பை முன்கூட்டியே அறியக்கூடிய காரணிகள் தொடர்பாக ஆய்வறிக்கைகளில் கூறப்படும் விடயங்கள் அனைத்தும் இலங்கையில் தென்படுகின்றது. இந்தத் தருணத்தில் இந்த மக்களை பாதுகாப்பதற்கான ஒரேயொரு தரப்பாக – அரணாக – புலம்பெயர் மக்களே செயற்படுகின்றார்கள். செயற்படப் போகின்றார்கள். முதலாவது உலகெங்கும் தாயகத்தில் உள்ள மக்களுக்காக ஒலிக்கப்படும் ஒரேயொரு குரலாக இருக்கக் கூடியவர்களும், பொருளாதார ரீதியாக அறிவுசார் உதவிகளை உடனடியாக வழங்கக்கூடிய நிலையிலும் புலம்பெயர் தமிழர்களே இருக்கின்றார்கள்.

இந்த இணைப்பை உடைப்பதற்காக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக சில செயற்பாடுகளை செய்துகொண்டு வருகின்றது. இன்னொரு தடவை இதைப் பற்றிப் பேசலாம். தமிழர் தரப்பிலும்கூட இது தொடர்பாக மக்கள், தலைவர்கள் காணொளிகளைப் பார்த்தேன். புலம்பெயர் மக்கள் எங்கள் அரசியலில் தலையிடத் தேவையில்லை என்று காணொளியில் கூறிவருகின்றனர். இந்தக் கருத்தை ஆழமாகப் பார்த்தால் அறிவீனமானது. ஏனெனில், 2009இன் பின்னர் 11 வருடங்களில் அந்த மக்களை பொருளாதார நிலையில், புவிசார் அரசியல் நிலையில் இந்த நிலைக்கு எடுத்து வந்தததற்கு கணிசமான பங்கை புலம்பெயர் தமிழர்கள் வகித்திருக்கிறார்கள்.

தற்போதும் தேசியக் கட்சிகளுக்கு இந்த அரசியலை நகர்த்துவதற்கான உதவிகள் புலம்பெயர் மக்களிடம் இருந்து தான் வந்து கொண்டிருக்கின்றது. எப்படியாக அவர்கள் இணைந்து ஒரே தரப்பாக ஒரே குரலை கொடுக்கப் போகின்றார்கள் என்பதற்காக புலம்பெயர் அமைப்புகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் சுமந்திரன் போன்றவர்கள், அல்லது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கிற தமிழ் அரசியல் தலைவர்கள் வைக்கும் வாதம் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தால், இலங்கை மனித உரிமைக் கழகத்திலிருந்து வெளியேறிவிடும். அப்படி வெளியேறும் பட்சத்தில் எங்களுக்கு எந்தவிதமான ஒரு நீதியையும் பெறமுடியாது போய்விடும் என்ற வாதத்தை அவர்கள் வைக்கின்றார்கள். இலங்கைக்கான அழுத்தத்தை மனித உரிமைக்கழகத்தால் கொடுக்கின்ற இந்த நாடுகள் புவிசார் அரசியலை மையமாக வைத்துக் கொடுக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இதை சுமந்திரன் போன்றவர்களும் ஒத்துக் கொள்வார்கள். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை.

இன அழிப்பிற்கான பாதுகாப்பு, இனிமேல் இப்படியான இன அழிப்பு வரக்கூடாது, இன அழிப்பிற்கான நேர்மையான சர்வதேச விசாரணை என்பது உண்மையிலேயே மனித உரிமைக் கழகத்திற்குள் நடக்கப் போவதில்லை. அது பாதுகாப்புச் சபை அல்லது அனைத்துலக நீதி விசாரணை ஒன்றிற்கு ஊடாக, குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஊடாகத் தான் நடைபெற முடியும். இதுவே எங்கள் ஒட்டுமொத்தத் தரப்பின் வேண்டுகோளாகவும், நிலைப்பாடாகவும் இருந்தால்,  மனித உரிமைக் கழகத்திலிருந்து இலங்கை விலகிச் சென்றால்கூட அது எங்களைப் பாதிக்கப் போவதில்லை. ஏனெனில், இலங்கைக்கான அழுத்தம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு இந்த புவிசார் அரசியல் நிச்சயமாக பாதுகாப்புச் சபை, அல்லது வேறு ஒரு விடயங்களுக்கு ஊடாக இதை நகர்த்தப் போகின்றது.

கேள்வி- அடுத்த கட்ட அழுத்தத்தைக் கொடுப்பதற்கு என்ன செய்யலாம்? இவ்வளவு ஆதாரங்களை வைத்துக் கொண்டே மனித உரிமைக் கழகத்தில் ஒன்றும் செய்ய முடியாத நிலை, அத்துடன் எங்கள் தமிழர் தரப்பும் அவர்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் எப்படி நாங்கள் அடுத்த கட்டத்திற்கான அழுத்தத்தைக் கொடுக்கப் போகின்றோம்?

பதில் – இலங்கை அரசாங்கம் தான் எந்த இன அழிப்பையும் செய்யவில்லை. எந்தக் குற்றமும் புரியவில்லை  என்று மறுத்து வருகின்றது. ஆனால் இதை நிரூபனப்படுத்தும் தொடர்ச்சியான வேலைத் திட்டத்தை எங்கள் தரப்பில் சரியாக செய்யப்படவில்லை என்பது தான் எனது வாதமாக உள்ளது. இன்று றோகிங்கியா மக்களுக்கான இன அழிப்பு என்ற விடயத்தை இணையத்தில் தேடல் செய்தால், குறைந்தது 30இற்கு மேற்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை தொடர்பான ஆவணப்படுத்தல் நூல்களைப் பார்த்தால் ஒன்றிரண்டு நூல்களைத் தவிர வேறு இல்லை. இது முக்கியம்.

பதினொரு வருடமாக இப்படியொரு இன அழிப்பு நடந்திருக்கின்றது. உலக அளவில் மனித உரிமை செயற்பாடுகளில் நூறு, இருநூறு பேர் ஈடுபடுகின்றனர். ஐம்பதிலிருந்து அறுபது வரையானோர் ஜெனீவாவிற்கு பயணமாகின்றார்கள். ஆனால் எங்களால் இந்த வளங்களை ஒருமுகப்படுத்தி எங்கள் இன அழிப்புத் தொடர்பாக இது சார்ந்த ஆய்வு அறிக்கைகளாக, கட்டுரைகளாக, நூல்களாக அழுத்தம் திருத்தமாக எங்களால் இன்னும் பதிவு செய்ய முடியவில்லை. இப்படியான விடயங்கள் தான் சர்வதேச அரங்கிலே ஒரு நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக, கல்விமான்களாக இந்த விடயங்களை நோக்கி நகர்பவர்களுக்கு ஆதாரமாகவும், சர்வதேச அரசியல் அடித்தள அழுத்தமாகவும் இருக்கப் போகின்றது. இந்த விடயத்தை நாங்கள் செய்யவில்லை. செய்யத் தவறிக் கொண்டிருக்கின்றோம்.

அடுத்ததாக சர்வதேச அரசியலில், சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கக்கூடிய உள்ளக அரசியல் அதாவது கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கின்ற தமிழ் மக்களின் அழுத்தம் என்பது  தேர்தல் அரசியல் சார்ந்தும் இருக்கின்றன. இந்த அழுத்தத்திற்கு ஊடாக ஒட்டுமொத்தமாக எங்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதை எல்லாத் தளத்திலும் சொல்வதற்கு பின்நிற்கின்றோம். இதற்குக் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இது தமிழ் அரசியல் தளத்திலே ஒரு பின்னடைவாக, தோல்வியாகவே இருக்கின்றது.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here