இலங்கை மீதான அழுத்தங்கள் ஜெனீவாவில் அதிகரிக்கும் – அரசை எச்சரிக்கின்றார் ரணில்

28
36 Views

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீது நெருக்குவாரங்கள் அதிகரிக்கக்கூடும் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலைமை ஏற்படுவதற்கு ராஜபக்ஷ அரசே முழுப்பொறுப்பு எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாட்டைப் பாதுகாக்கும் வகையில் நல்லாட்சி அரசு வகுத்திருந்த கொள்கைகளை மீண்டும் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ அரசு உதாசீனம் செய்திருந்தது எனவும் அவர் சாடினார்.

அதனாலேயே இலங்கை இன்று சர்வதேச அரங்கில் தலைகுனிய வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலமும், சர்வதேசத்தைப் பகைப்பதன் ஊடாகவும் பெரும்பான்மையின மக்களான சிங்களவர்களின் மனதை வெல்ல முடியும் என்று ராஜபக்ஷ அரசு தப்புக்கணக்குப் போட்டுள்ளது. இந்தத் தப்புக்கணக்கு நாட்டைப் படுகுழியில்தான் தள்ளும் என்பதை அரச தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.

சிங்கள மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தோம் என்று மார்தட்டிய இந்த அரசு, மிகச் சொற்ப காலத்திலேயே அம்மக்களின் நம்பிக்கை இழந்து தவிக்கின்றது. சிறுபான்மையின மக்களைப் பழிவாங்கும் இந்த அரசு, தற்போது தம்மை விமர்சிக்கும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நீதி, நேர்மை, நியாயம் இல்லாத சர்வாதிகார ஆட்சியே இலங்கையில் தற்போது இடம்பெறுகின்றது. இதற்கெல்லாம் நாம் விரைவில் முடிவுகட்டியே தீருவோம். ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் கைப்பற்றும். அதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளோம்” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here