ஸ்கொட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழன் – டாக்டர் வரதராஜா

ஸ்கொட்லாந்தின் தேசியக் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதநேய விருதுக்கு ஈழத்து டாக்டர் வரதராஜா துரைராஜா உட்பட மூன்று பேர் 2021ஆம் ஆண்டிற்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது மூன்றரை இலட்சம் மக்கள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்ட போது, எந்தவித உதவிகளும் இல்லாத போது டாக்டர் வரதராஜா பணியாற்றி பலரின் உயிரைக் காப்பாற்றினார். அந்தத் தாக்குதல் பற்றி இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும், கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கிக் கூறி, எத்தகைய அவலம் அங்கு நடைபெற்றது என்பதை உலகத்திற்கு அவர் எடுத்துரைத்தார்.

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பலகாமம் என்ற சிறிய கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட புகழ்பெற்ற மருத்துவ கலாநிதி, வரதராஜா துரைராஜா அவர்களும் இந்த விருதிற்கு தெரிவாகி இருப்பது என்பது தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும் மேலும் மனிதாபிமானத்தைப் போற்றும், அநீதிக்கு எதிராக போராடும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.

யுத்த வலயத்தில் பொது மக்களுடன் இரவும், பகலும் தங்கியிருந்து உழைத்து, அவசரகால முதலுதவி மற்றும் உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட சில மருத்துவர்களில் இவரும் ஒருவர். மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் குறைந்த மருத்துவப் பொருட்கள் மூலம் மருத்துவ கலாநிதி வரதராஜா மற்றும் அவரது ஊழியர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினர். யுத்தம் தீவிரமடைந்த போது, ஆரம்பத்தில் தனி ஒரு வைத்தியராக வாகரையில் மிகுந்த உயிர் அச்சுறுத்தலிலும் இரவும், பகலும் கடமையாற்றிய அவர், வாகரைப் பகுதியை இலங்கை அரச படைகள் கைப்பற்றிய பின்பு வன்னிக்குச் சென்று மீண்டும் சேவை புரிந்தார். இடம்பெயர்ந்த மக்களோடு மக்களாக சென்ற அவர், தொடர்ந்து தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்தி தன்னுயிரையும் துச்சமென எண்ணி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தன்னிகரற்ற சேவை புரிந்தார். யுத்தம் முடியும் வரை அவர் பொது மக்களுடன் இருந்தார். இறுதியில் அவரே காயமடைந்து அரசாங்கப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். உயிராபத்தை ஏற்படுத்திய காயங்களுடன் பல நாட்கள் சிகிச்சை அளிக்கப்படாது, விசாரணை என்ற பெயரில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார். சர்வதேச அழுத்தம் காரணமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், இலங்கை அரசின் தொடர்ச்சியான உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தார்.

அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்காய் குரல் கொடுத்து வருகின்றார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கொரி ஜெனீவா, கனடா, ஜேர்மனி, லண்டன், தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் சென்று குரல் கொடுத்து வருகின்றார்.

2017ஆம் ஆண்டில் ஒட்டவாவில் மருத்துவ கலாநிதி திரு வரதராஜா துரைராஜா சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து மறைந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் கண்காணிப்பளருமான பால் தேவர் அவர்கள் டாக்டர் வரதனை “ஒரு செல்வாக்கு மிக்க மனித உரிமைப் பாதுகாவலராக, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழும் போது பல உயிர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தனக்கு உயிராபத்து ஏற்பட்ட பொழுதும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மருத்துவத்தைக் கடைப்பிடித்தார்” என்று பாராட்டினார்.

‘பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு குறிப்பு’ (‘Note From The No Fire Zone’) என்ற தலைப்பில் அவரது நினைவுக் குறிப்புகள் 2019 மே மாதம் வெளியிடப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்கால் அவலங்களை பிரதிபலிக்கும் வகையில் ‘பொய்யா விளக்கு’ என்ற ஆவணப்படமும் அவரது நடிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் தனது மருத்துவ பயிற்சியைத் தொடர முயற்சித்துக் கொண்டிருக்கும் அவர், மோதல் பகுதிகளில் பொது மக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உள்நாட்டுப் போரில் பாதிக்கப்ட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு வருவதற்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றார்.

இவ்விருது குறித்து மருத்துவ கலாநிதி திரு வரதராஜா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அற்புதமான விருதுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எனது மருத்துவ அனுபவங்களால் நான் ஒரு மனித உரிமை ஆர்வலர் ஆனேன். நான் ஒரு மருத்துவரான போது அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த யுத்த வலயப் பகுதிகளில் பணியாற்ற விரும்பினேன். சமூகத்திற்கு நான் செய்த சேவைகளை அங்கீகரித்து எனக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் மது அடிமைகளை மீட்கும் நாடகக் குழுவை நடத்தி வரும் மார்க் வில்லியம்ஸன், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் புற்றுநோய் சிகிச்சை அளிப்பதோடு நிக்கரகுவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் உள்ள டாக்டர் அலெக்ஸான்டர் பற்றர்சன் ஆகியோரும் இந்த விருதிற்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் உள்ளனர். இம்மாதக் கடைசியில் விருது அறிவிக்கப்பட உள்ளது.