மேல் மாகாணத்திலிருந்து வருவோருக்கு வடக்கில் சுய தனிமைப்படுத்தல் நிறுத்தம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை வடக்கில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப் பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாள்களுக்கு சுயதனிமைப் படுத்தி பி.சி.ஆர். பரிசோத னைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அந்த நடவடிக்கையை இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால், சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு நேற்று பணிக்கப்பட்டது. இது தொடர்பில் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“கொரோனா வைரஸ் பரவல் அதிக அபாயம் உள்ளது எனத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வருவோரை 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை அவசியமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளரால் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அவசர அவசியம் ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து அவரது அனுமதியுட னேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வரும் நபர் களைச் சுயதனிமைப்படுத்த முடியும்.”