மனித உரிமை நிலை மிக மோசமடைந்துள்ளது – இலங்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மிக மோசமடைந்துள்ளன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்ட 2021 ஆண்டுக்கான சர்வதேச அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் ஆர்வலர்கள், கடந்த காலத்தில் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்கள் மீதான கண்காணிப்புக்களை அரச படைகள் அதிகரித்துள்ளன.

சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள், பாகுபாடுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர். நீதித்துறையின் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் விதமாகவும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற மேற்பார்வை செய்யும் கட்டமைப்புக்களை பலவீனப்படுத்துவதாகவும் ஒரு அரசமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் செய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரியில், உள்நாட்டுப் போர் தொடர்பில் உண்மையைத் தேடல், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அளித்த வாக்குறுதியை இலங்கை திரும்பப் பெற்றுள்ளது. “ராஜபக்ஷவின் நிர்வாகம், முன்னைய அரசாங்கத்தின் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயங்கள் சம்பந்தப்பட்டவற்றை வெகுவிரைவாக மாற்றியமைத்து, சிறுபான்மையினரை பாதுகாப்பற்றவர்களாகவும் அச்சநிலைக்குள்ளும் தள்ளியுள்ளனர். விமர்சனங்களை வெளிப்படையாக சொல்லவே அஞ்சும் நிலைக்கு அவர்கள் தள்ளியுள்ளனர்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவுக்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.

போருக்குப் பின்னான நல்லிணக்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றம்கூட இராணுவத்தின் மிகப்பெரிய பங்களிப்பால் தடைப்பட்டுள்ளது. உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச கடமைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

761 பக்கங்கள் கொண்ட 2021ஆண்டுக்கான சர்வதேச அறிக்கை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 31ஆவது பதிப்பாகும். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உரிமைகளின் நடைமுறை தொடர்பில் மதிப்பீடு செய்வதாக அந்த அறிக்கை உள்ளது. 2009இல் முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போது தன்னைப் போலவே போர் குற்றங்களில் சிக்கியவர்களை உயர் – மூத்த பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலர் கமால் குணரட்ண, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் போர் விதிகளை மீறிக் கொலைகளில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுவதால் அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தகுதியற்றவர்கள் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.

மனித உரிமைகள் பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்களை அரசாங்கத்தை விமர்சிப்பதாகக் கருதி அவர்கள் மீது அச்சுறுத்தல்களை ராஜபக்ஷ அரசாங்கம் அதிகரித்துள்ளது. அவர்களை தீவிர கண்காணிப்புக்கும் உட்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் கவுன்ஸிலில் பங்கேற்ற ஆர்வலர்களும் அடங்குவர். கொவிட் 19 பரவலின் பின்னர், “முஸ்லிம்கள் வேண்டுமென்றே வைரஸைப் பரப்புகிறார்கள் என்றுகூறி அவர்களின் வணிகங்களை புறக்கணிக்க வேண்டும்”, என்று சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.

கொவிட் 19 தொற்றால் இறந்தோரின் சடலங்களை மார்ச் மாதத்தில் அரசாங்கம் தகனம் செய்யத் தொடங்கியது. இஸ்லாமிய பாரம்பரியத்தை புறக்கணித்துள்ளது என்று ஐ.நா. மனி உரிமை வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட் கொவிட் 19 மூலம் இலங்கை அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் என்று கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகள் முக்கிய சிவில் பதவிகளில் நியமிக்கப்படுவது குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் வரும் பெப்ரவரி – மார்ச் அமர்வில் இலங்கை தொடர்பில் சாத்தியமான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும். இதில் கடந்தகால மீறல்கள், குற்றங்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச பொறுப்புக்கூறல் பொறி முறையின் அழைப்புகளும் அடங்கும். “பரவலான மனித உரிமைகள் மீறல் மூலம் மீண்டும் பழைய நாட்களுக்கே இலங்கை திரும்புவதை தடுக்க சம்பந்தப்பட்ட அரசாங்கம் அனைத்தையும் செய்ய வேண்டும். அரசாங்கம் பொறுப்புக்கூறல், மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல் ஆகியவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கங்குலி தெரிவித்துள்ளார்.