‘சூரியன் எமக்குச் செய்த நன்மை அனைத்துக்கும் நன்றி கூறுவோமாக’ -க.வி.விக்னேஸ்வரன்

66
173 Views

கொரோனாவின் நிழலில் இம்முறை பொங்கல் பண்டிகை வருகின்றது. வீட்டில் இருந்து கொண்டே சூரியனை நோக்கி இதுவரை சூரியன் எமக்குச் செய்த நன்மை அனைத்துக்கும் நன்றி கூறுவோமாக என  நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பொங்கல்  வாழ்த்து செய்தியில்,

“விவசாயிகளின் வாழ்க்கையில் வரும் முக்கிய பண்டிகை தைப்பொங்கல்.
தமிழர் பிரதேசங்களில் தை மாதமே அறுவடை செய்யும் மாதம். நெல் வயலில் பட்டபாட்டுக்கு விவசாயிகள் பயன்பெறும் காலம் இது.

தமிழர்களும் இதுவரை காலம் பட்ட பாட்டிற்கு இம்முறைப் பங்குனி மாதப் பௌர்ணமியானவர் (Ides of March) நற்பயனை எய்தி அருளுவாராக! எமது கட்சிக்கும் பொங்கலுக்கும் ஒரு தொடர்புண்டு.

தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை. வருங்காலத்தில் எமது கட்சியின் பொங்கல் பானை அமுதசுரபி போல் தமிழ் மக்கள் அனைவருக்கும் மனதாலும் திறனாலும் அன்பாலும் பண்பாலும் பணத்தாலும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருப்பதாக! எம்மால் முடிந்ததைக் கொடுப்பதே ஒரு கட்சியின் கடமை. எடுப்பதல்ல.

கொரோனாவால் பீடிக்கப்பட்ட எமது தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் பொங்கல் உண்டு பொறுமையுடன் காத்திருப்பார்களாக! போரில் காணாமல் ஆக்கப்பட்ட உற்றார் உறவினரை நினைத்து வருந்தும் உறவுகள் இன்று பொங்கல் உண்டு நற்காலம் வரும் என்று எதிர்பார்த்து இருப்பார்களாக!

போரினாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு ஊரார், உறவினர் யாவரும் திரண்டு சென்று உலர் உணவுகளுடன் பொங்கலும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவார்களாக!

நம்பிக்கையிலேயே உலகம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த வருடம் தமிழர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து சூரியனுக்கு பொங்கல் இட்டு அவன் அருளை நாடி நிற்போம் நம்பிக்கையுடன்!
பொங்கலோ பொங்கல்!” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here