கட்சிகளில் சேர்க்கப்பட்ட மாடுகள்? காப்பாற்றுவது யார்- மட்டக்களப்பு அரசியல் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?

60
123 Views

மூன்று தசாப்தங்களாக மாடுகளை மேய்த்து எமக்காக பால்,தயிர், நெய் என வாய்க்கு ருசியாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தரும் மட்டக்களப்பின் பாரம்பரிய தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் பாராமுகமாக இருப்பது ஏன்?

இவர்களின் வாக்குகளைப் பெற்று வங்குரோத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் எங்கே?

நீறு பூத்த நெருப்பாக உருவாக்கப்படும் இனவாத வன்முறைகளுக்காக காத்திருக்கிறார்களா இந்த அரசியல்வாதிகள்?

கண்டபடி தமிழ் பண்ணையாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள், கடத்திச் சென்று சித்திரவதை செய்கிறார்கள். ஆனால் கண்டும் காணாமலும் செல்கிறார்கள் எமது அரசியல் வாதிகள்.

இனவாதத்திற்கு தூபம் காட்டும் அரசியல் தலைவர்களே தமிழ் பண்ணையாளர்களின் உயிர்கள் பறிக்கப்படும்வரை வேடிக்கை பார்ப்பதுதான் உங்கள் அரசியல் நாகரிகமா?

இன்னும் எத்தனை காலத்திற்கு போராடுவது அந்த பண்ணையாளர்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்ட போது எல்லோரும் தமிழர்களாய் துள்ளி எழுந்தோம் வெற்றியும் கண்டோம்.

கிழக்கில் தமிழர்களை கடத்துகிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள், தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள். அதற்கு எதிராகவும் நாம் அணிதிரளவேண்டும்.

இந்த பண்ணையாளர்களுக்காக மட்டக்களப்பில் உள்ள ஒரு சிலரைத் தவிர ஏனைய தமிழர்கள் ஏன் குரல் கொடுக்க வில்லை. இவர்களின் பிரச்சினை அப்படி என்ன தீர்க்க முடியாத பிரச்சினைகளா?

பாவம் எங்கள் மாடுகள், அதுகளுக்கு வாக்குகள் இல்லை.  அதுகளை பராமரிக்கும் பண்ணையாளர்களிடமும் பெரும் தொகை வாக்குகள் இல்லை. அதனால் தான் அவர்கள் நாதியற்றவர்களாக அடிவாங்குகின்றனர்.

பாவம் மட்டக்களப்பு சமூகம், அவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல் வாதிகள் மாடுகளையும் கட்சிகளில் சேர்த்து விட்டனர். அதனால் தான் மாடுகள் கறக்கும் பாலில் கூட கட்சிபேதம் பார்க்கின்றனர். சில அரசியல் தலைவர்கள் அது சாணக்கியனின் மாடுகள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து விட்டதாக கூறி ஒதுங்கி கொண்டார்களாம்.

இதுதான் தொடர்ந்து பண்ணையாளர்கள் தாக்கப்படுகிறார்களாம் .

மாடுகளுக்குள் மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகள் மக்கள் பிரச்சினைகள் அனைத்திலும் அரசியல் பாகுபாடு பார்க்கின்றனர்.

மிக கேவலம் நிறைந்த அரசியல் கலாசாரம் கட்டி எழுப்பப்படுகிறது. இதனால் மட்டக்களப்பு சமூகம் இன்னும் இன்னும் பின்நோக்கியே செல்லப்போகிறது.

கடத்தப்பட்டு பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக கூறி நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஆறு பண்ணையாளர்களும் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்கள் குறித்து தமிழர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது இவர்களை பலி கொடுக்க தயாராகி வருகிறார்களா மட்டக்களப்பு அரசியல் வாதிகள்? ஏன் இந்த பண்ணையாளர்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகளால் செயற்பட முடியவில்லை?

அனைத்து தமிழர்களும் இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் இவர்களுக்காக போராட வேண்டும் தீர்வு வரும் வரை போராட வேண்டும் ஆயிரம் பேர் இறங்கினால்தான் அரசியல் வாதிகள் நான் முந்தி நீ முந்தி என்று வருவார்கள். அந்த சூழ்நிலை உருவாகும் வரை பண்ணையாளர்களுக்காக தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here