பாவற்குளம் வான்கதவு திறப்பு நேரியகுளம் ஊடாக செட்டிக்குளத்துக்கான போக்குவரத்து பாதிப்பு 

61
151 Views
வவுனியா பாவற்குளம் நீர்த்தேக்கத்திற்கு மழை நீர் வரத்து அதிகரித்தமையினால் குளத்தின் நீர்மட்டம் மேலும் அரை அடி உயர்ந்துள்ளதையடுத்து, மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக (மத்திய) நீர்ப்பாசனத் தியைக்களத்தின் பொறியியலாளர் கு.இமாசலன் தெரிவித்தார்.

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிகின்றன. பாவற்குளத்தின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

இதனால் பாவற்குளத்தின் வான் கதவுகள் ஏற்கனவே ஒரு அடி திறக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து மழை பெய்கின்றது. குளத்திற்கு நீர் வருவது அதிகரித்திருப்பதனால் புதன்கிழமை மேலும் அரையடிக்கு வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக பொறியியலாளர் இமாசலன் கூறினார்.

வான்கதவுகள் ஒன்றரையடி திறக்கப்பட்டுள்ளதையடுத்து குளத்தில் இருந்து பெருமளவு நீர் வெளியேறுவதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையடுத்து வவுனியாவில் இருந்து நெளுக்குளம், நேரியகுளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வீதி நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் வீதிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பொறியியலாளர் இமாசலன் வவுனியாவில் இருந்து செட்டிகுளம் செல்பவர்கள் மாற்று வழியாக பூவரசங்குளம் ஊடான வீதியைப் பயன்படுத்துமாறு அறிவித்துள்ளார்.

அதேவேளை, பாவற்குளத்திலிருந்து வெளியேறும் நீர் பாய்கின்ற தாழ்நிலைப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருப்பதுடன் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here