நேரு என்கிற மாவீரனின் மரணம்.

466
1,273 Views

ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், தேசியத் தலைவரின் வழிகாட்டலில் கடற் புலிகளுக்கு முன்னதான கடல் வழங்கலில் ஈடுபட்டவரும், ‘வெளிச்சவீடு’ இணையத்தள ஆசிரியருமான வாசுதேவர் என்றழைக்கப்படும் நேரு அண்ணா இன்று எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

அவருடன் பயணித்த உறவுகளின் அனுபவப் பகிர்வுகள் இங்கே:

பரணி கிருஸ்ணரஜனி
ஒருங்கிணைப்பாளர் – நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளி.

ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும்/ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் கடற் புலிகளுக்கு முன்னதான அனைத்துலகக் கடல் வழங்கலில் ஈடுபட்டவரும்/ ‘வெளிச்சவீடு’ இணையத்தள ஆசிரியருமான வாசுதேவர் நேரு அண்ணா கொரோனா தாக்கத்திற்குள்ளாகி எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை இன்னும் எம்மால் நம்ப முடியாதுள்ளது.

ஈழப் போராட்டத்தின் ஒரு காலகட்டச் சாட்சியம் இவர்.

இந்த இழப்பை எப்படிக் கடந்து செல்லப் போகிறோம் என்று தெரியவில்லை.

நிலைகுலைந்து போய் நிற்கிறோம்.

நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளியின் தாங்கு தூண்களில் ஒருவராக இருந்து எம்மை வழி நடத்திய பேராளுமைகளில் ஒருவர் இவர்.

தலைவர் தமிழீழ நடைமுறை அரசை கட்டியெழுப்பியது நம் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் நாம் அதை அவரது படைத்துறை சாதனைகளிலிருந்தே புரிந்து வைத்திருக்கிறோம்.

அதற்கும் அப்பால் தலைவரின் உழைப்பும் /சிந்தனையும்/ தூர நோக்கும் இருந்தது என்பதற்கு நேரு அண்ணா ஒரு வாழும் சாட்சியமாக இருந்தார்.

ஆரம்ப காலத்தில் புலிகள் உட்பட அனைத்துப் போராட்ட இயக்கங்களும் தமிழகத்தைத் தமது பின் தளமாகக் கொண்டு இயங்கியதால் இரு தமிழ் நிலங்களுக்கும் இடையில் போராளிகள் மற்றும் ஆயுத/ தளபாட வழங்கலை சீராகச் செய்ய உள்ளூரில் கடல் பயணங்களில் நிபுணத்துவம் பெற்ற “ஓட்டி” களையே நம்பி இருந்தனர். கடற்புலிகள் ஒரு அமைப்பாக வலுப்பெறாத காலம் அது.

இந்த ஓட்டிகள் எனப்படும் கடலோடிகளை போராளிகளுக்குள்ளிருந்து முதன் முதலாகத் பயிற்றுவித்து களத்தில் இறக்கியது புலிகள்தான். ஏனைய இயக்கங்களுக்கு அது சாத்தியப்படவில்லை.

சம காலத்தில் தலைவர் தூர நோக்குடன் இந்தியா ஒரு நம்பகமான சக்தி இல்லை என்பதை முன்னுணர்ந்து தமிழகத்திற்கும் தமிழீழத்திற்குமான வழங்கல் எந்நேரமும் தடைப்படலாம் என்பதைக் கணித்தது மட்டுமல்ல தமிழீழம் பொருண்மியத்தில் தன்னிறைவு அடைவதென்றால் உள்ளூர் உற்பத்திகளை மட்டும் நம்பியிருக்க முடியாது என்பதை உணர்ந்து அனைத்துலக ரீதியில் ஒரு வர்த்தக வலயத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்துத் தொடங்கியதுதான் கடல் வணிகம்.

அதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவர்தான் நேரு அண்ணா.

இதன் பின்னணியில் ஏராளமானவர்களின் உழைப்பு இருந்தது. அவர்களில் யாராவது இந்த வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும்.

சரியான வரலாற்றை நாம் பதிவு செய்யாவிட்டால் எதிரிகள் உருவாக்குவதே வரலாறாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது.

கிட்டத்தட்ட தமிழீழ வரலாறு அந்தக் கட்டத்திற்குள்தான் சிக்குண்டுள்ளது.

நேரு அண்ணா போன்ற எண்ணற்ற தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி என்பது சரியான வரலாற்றைப் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு தெளிவான பாதையை அடையாளம் காட்டுவதேயாகும்.

**

இதயச்சந்திரன் ( அரசியல் ஆய்வாளர்)

நேரு என்கிற மாவீரனின் மரணம்

அன்பானவனே…
இரண்டு வாரமாக உன் குரலைக் காணவில்லை.
நலமாய் இருப்பாயென்று நினைத்தேன்.
நீ…கொரோனாவால் மரணித்தாய் என்கிற துயரச்செய்தியை ‘பரணி’ சொன்னபோது, நிலைகுலைந்து போனேன்.

விடுதலையை உயிராய் நேசித்த வல்வை மைந்தனே, உன் குரலை மறுபடியும் கேட்பேனா?.

தமிழினத்தின் வீரவரலாற்றுச் சுவடிகளில், நீ எழுதிச் சென்ற பக்கங்களும் நிச்சயம் இடம் பெறும்.
நீங்களே வரலாற்றின் நாயகர்கள்.
சென்று வா தோழா

******

தேவர் அண்ணா அவர்களின் பகிர்வு :

நேரு உங்களை மறக்க முடியுமா?
மிகவும் இக்கட்டான அந்தக் காலப்
பகுதியில்(1978)தேசியத்தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய நீங்கள் அவருக்கு உறுதுணையாகவும்
இருந்தீர்கள்.1980இன் முற்பகுதியில்
அயர்லாந்து சென்று உயர்கல்வி கற்றுக்
கொண்டிருந்த வேளை எங்கள் ஊரவரான முட்டாசி அண்ணா மற்றும்
சிலருடன் இணைந்து தமிழ்த்தேசிய
செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கு
வலு சேர்க்கும் நடவடிக்கைகளில்
ஈடுபட்டிருந்தீர்கள்.
1984ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழீழ
விடுதலைப் புலிகளின் முதலாவது
கப்பலான சோழன் கப்பலுக்கு பணிக்காக நம்பிக்கை உடையவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட போது தேசியத்
தலைவரின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக நீங்களும் ரேடியோ ஆபிசராகபணிக்கு அமர்த்தப்பட்டீர்கள்.
நீண்டகாலம் புலிகளுக்கு உறுதுணையாக செயற்பட்டீர்கள்.
2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்
பட்டதற்குப் பிறகு ‘வெளிச்சவீடு’
என்கின்ற இணையதளத்தை
உருவாக்கி அதன் மூலம் தமிழ்த்
தேசியத்திற்கு பெரும் தொண்டாற்றி
னீர்கள்.அதேவேளை தமிழீழத்
தாயகத்தில் ‘நிழல்கள்’ என்ற
தொண்டு நிறுவனத்தை உருவாக்கி
மாணவர்கள் மற்றும் பொது
மக்களுக்கு மிகப்பெரும் சேவைகளை
தொடர்ச்சியாக செய்து வந்தீர்கள்.
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்
தமிழ்த்தேசிய இன விடுதலைப்
போராட்டத்திற்கு மிகவும்
நம்பிக்கையாகவும் உறுதுணையா
கவும் இருந்தமை நம்மால் என்றுமே
மறக்க முடியாது.
பாழாய்ப்போன கொரோனா எனும்
கொடிய அரக்கன் எம்மிடமிருந்து உங்களைப் பறித்தெடுத்துவிட்டான்.
அந்தக் கொடியவனால் உங்களின் உடலினை மட்டுமே எம்மிடமிருந்து
பிரித்தெடுக்க முடியும்.உங்களின் ஆத்மா
தமிழீழ இலட்சியத்தோடு தமிழீழ
தேசத்திலே தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
என்றும் உங்களை மறவா நெஞ்சங்களில்
ஒருவனாக.
தேவர் அண்ணா.


*******

தமிழ்நெற் நிறுவக இயக்குநர் ஜெயா அவர்களின் பகிர்வு

இப்படியான ஒரு மனிதரை நேரடியாக அறிந்துகொள்ளவில்லையே என்று கவலை கொள்கிறேன்.. அவர் போன்ற ஒரு ஒருவர் கட்டிய ‘வெளிச்சவீட்டை’ பாதுகாக்க வேண்டும், மேலும் வளர்க்கவேண்டும், இதற்கு தமிழ்நெற் ஊடகம்  இயன்ற உதவியைச் செய்யும். அதுவே நாம் அவருக்குச் செய்யக்கூடிய அர்த்தமுள்ள அஞ்சலி, வீரவணக்கம்!

*****

திருமதி பவானி தர்மகுலசிங்கம் அவர்களின் பகிர்வு :

ஏழ்கடலும் தாங்கிடுமே ஏற்று! (நேரிசை வெண்பா)

வல்வைமகள் ஈன்றெடுத்த வண்டமிழ் வல்லுனனே
அல்லலிலே வீழ்ந்தோம் அறிவீரோ? – எல்லார்
கரிகாலன் தோள்சார் கடற்படையின் மூத்த
வரிப்புலியாய் ஓங்கினீர் வாழ்ந்து!

முகநூலில் சேதியிதை முன்னிறுத்தி நின்றார்,
அகத்தினிலே கேள்வியெழ, ஆங்கே – மகத்துவம்
மிக்கநல் வார்த்தைகள் மேலோங்கக் கண்டிங்கு
நெக்குருகி நிற்கின்றேன் நேர்!

வெளிச்சவீடு ஊடகத்தின் வேதியனாய் நின்று
ஒளியேற்றி வைத்தீரே, உள்ளத் – தெளிவில்லா
மானிடரும் போரியலின் மாண்பறியும் வண்ணமாய்த்
தேனினிய செய்திதந்தீர் சீர்!

தாயிழந்த கன்றாகத் தாங்குதுயர் மீட்பின்றி
மாயிரு ஞாலத்து மாந்தரெலாம் – நோயினில்
வீழ்ந்தாரே நுண்மைமிகு விற்பன்னன் நும்பிரிவால்,
ஏழ்கடலும் தாங்கிடுமே ஏற்று!

நன்றெனவே கூறி நயத்தகு ஆக்கமென
இன்புறவே என்படைப்பை ஏற்றுமே – கன்னித்
தமிழேட்டில் வாசகமாய்த் தாங்கிவர வைத்தீர்!
அமிழ்தினிய உள்ளமே  ஆன்று!

அன்றெந்தன் நூல்விழாவில் ஆன்றோனாய் வந்துமே
மன்றத்தில் வீற்றிருந்தீர் மக்களுடன்! – இன்முகத்தில்
நின்றிருந்தீர்! மண்ணில், நெடுந்தூரம் தாண்டிவந்தீர்!
நன்றிபல நானுரைத்தேன் நன்று!

முன்னென்றும் கண்டிலேன், முற்புலியாய்ப் பார்த்தறியேன்,
இன்றுதான் இன்தோற்றம் ஈடில்லாச் – சின்னம்கொள்
வண்ணத்தில் காண்கின்றேன்! வானுயர்வ றிந்தேனே!
எண்ணிறைந்த துன்பமே ஈங்கு!

ஆற்றொணாத் துன்பத்தில் ஆழ்ந்தநும் இல்லகத்தி,
ஏற்றமிகு பண்புசால் இன்மக்கள் – ஊற்றெடுக்கும்
கண்ணீர் துடைத்திடக் கண்ணுதலான் தன்வரவை
எண்ணியே நிற்கின்றேன் ஏற்பு!

(திருமதி பவானி தர்மகுலசிங்கம் -கனடா)

*****

Oru Paper” நிறுவகத்தின் பகிர்வு

நேரு அண்ணாவிற்கு இறுதி வணக்கம்!

‘ஒரு பேப்பர்’ ஊடகப்பிரிவில் ஒரு தொண்டராக பல ஆண்டுகளாக எம்மோடு சேர்ந்தியங்கிய நேரு அண்ணா அவர்கள் இன்று சாவடைந்துள்ளார் என்பதனை மிகுந்த வேதனையுடன் அறியத் தருகிறோம்.

வாசுதேவர் நேரு என்ற இயற்பெயர் கொண்ட நேரு அண்ணா வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழ்த் தேசியத்தில் மிகுந்த பற்ருறுதிகொண்ட அவர் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் கப்பற் போக்குவரத்துப் பிரிவில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர் லண்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த அவர், தேசம் நோக்கிய பல்வேறு பணிகளில் தன்னை இணைத்துத் தொடர்ந்து செயற்பட்டு வந்தார்.

ஒரு பேப்பரில் இணைந்து பணியாற்றிய காலத்தில், ஒப்பு நோக்குனராகவும், கருத்தோவியங்களை வரைபவராகவும் எங்களுக்கு உதவி வந்தார்.

ஒவியம் வரைவதில் மிகுந்த ஆர்வமுடைய அவர் தனது ஒய்வு நேரத்தில் நூற்றுகணக்கான ஒவியங்களை வரைந்துள்ளார். அவற்றை கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தவேண்டும் என்ற அவரது முயற்சி நிறைவேற முன்னரே அவர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.

நேரு அண்ணாவின் பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர், நண்பர்களுக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு பேப்பர்

****

தேவன் ( Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல்)  பகிர்வு

எனது எழுத்தோடு பரிச்சயம் கொண்டு, என்னில் அன்பு காட்டியவர் நேரு அண்ணை. கடந்த 31.12.2020 அன்று இறுதியாகக் கதைத்தபோதும் உறுதி தளராது  கதைத்த  பிறவி…

ஈழப் போராட்ட முன்னோடிகளில் மிகவும் அதியுச்ச அனுபவங்களைக் கொண்டிருந்த ஆளுமை. அவரது அனுபவங்களின்  நிகர்த்திறனுக்கு இங்கே யாருமே இல்லையென்றிருந்தபோதும், அமைதியான பேராறுபோல ஓடிக்கொண்டிருந்தவர்.  தமிழீழப் போராட்டத்திற்கான எழுத்துக்களின் வன்மைக்குத் தாராள இடம்கொடுத்த அற்புத மனிதர். சிறிது காலமே பழகியிருப்பினும்,  அவர் மறைவு எம் ஆற்றலில்  பாதியைப் பறித்ததுபோலிருக்கிறது.
-தேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here