மட்டு. மேய்ச்சல் தரைப் பிரச்சினை: சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய இறுதித் தருணம் – மட்டு.நகரான்

கால்நடையை நம்பித்தான் எங்கள் குடும்பம் இருக்கின்றது. இதுதான் எங்கள் தொழில், எங்கள் வாழ்க்கை, எங்கள் உலகம். இதனை இல்லாமல் செய்வதன் மூலம் எங்களை அழித்து விடலாம் என சிங்களவர்கள் நினைக்கின்றார்களா? என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக பேசப்பட்டு வரும் விடயமே மேய்ச்சல்தரைப் பிரச்சினையாகும். இந்த மேய்ச்சல் தரை பிரச்சினையானது, சர்வதேசம் வரையில் பேசுபொருளாக இருந்தது. அரசியல் கட்சிகளின் அரசியல் பொருளாகவும் இருந்தது. ஆனால் இன்று அவையெல்லாம் மறந்து செல்லும் நிலைக்கு வந்துள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பல தசாப்தங்களாக கால்நடை வளர்ப்பினை தொழிலாகக் கொண்ட தமிழர்கள், தமது பாரம்பரிய தொழிலை இழக்கச் செய்யும் நிலையினை சிங்கள தேசம் இன்று மேற்கொண்டுள்ளது. வலுக்கட்டாயமாக தமது தொழிலை இழக்கச் செய்யும் வகையிலான நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக கால்நடை வளர்ப்பில் கடந்த 20வருடமாக ஈடுபட்டு வரும் சித்தான்டியை சேர்ந்த ம.இராஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

IMG 0104 மட்டு. மேய்ச்சல் தரைப் பிரச்சினை: சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய இறுதித் தருணம் - மட்டு.நகரான்

“எனக்கு கால்நடை வளர்ப்பினையும் விவசாயத்தினையும் தவிர வேறு தொழில் தெரியாது. விவசாயம் காலத்திற்கு காலம் நட்டத்தினை எங்களுக்கு தருகின்றது. விவசாயத்தில் ஏற்படும் நஸ்டங்களை இந்த கால்நடை வளர்ப்பின் மூலம் பெறப்படும் இலாபத்திலேயே ஈடுசெய்கின்றோம்.

காலங்காலமாக நாங்கள் கால்நடைகளை வளர்த்த இடங்கள் இன்று அபகரிக்கப்பட்டு விட்டன. எங்களால் அவர்களுக்கு எதிராக போராட முடியவில்லை. நாங்கள் போராட தொடங்கினால், நாங்கள் அதனால் பாரிய இழப்புகளை சந்திக்கலாம். அதன் காரணமாகவே நாங்கள் மௌனமாக தாங்கி நிற்கின்றோம்” என தெரிவிக்கின்றார்.

“மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு மூன்று மாதங்களில் தீர்வு வழங்குவோம் என்று கூறியிருக்கின்றார்கள். எங்களைப் பொறுத்தவரையில், அது மேய்ச்சல் தரை பிரச்சினையை தீர்ப்பதற்கான காலக்கெடு இல்லை. எங்களது கால்நடைகளை அழிப்பதற்கான காலக்கெடுவாகவே நாங்கள் பார்க்கின்றோம்” எனவும் அவர் கவலையுடன் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. அவற்றில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ளன. இவற்றின் மூலம் பால்  உற்பத்தி நிலையத்திற்கு, ஓரு நாளைக்கு குறைந்தது ஆறாயிரம் லீற்றர் பால் வழங்கப்படுகின்றது. இதன்மூலம் பல குடும்பங்கள் வாழுகின்றது என்பதுடன், இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்கின்றது. அவ்வாறு என்றால் ஏன் எங்கள் மேய்ச்சல் நிலங்கள் அபகரிக்கப்பட்டு எங்களை துரத்த நினைக்கின்றார்கள் என கிரான், ஏறாவூர்பற்று கமநல கால்நடை பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் இ.நிமலன் கேள்வியெழுப்பினார்.

IMG 8747 மட்டு. மேய்ச்சல் தரைப் பிரச்சினை: சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய இறுதித் தருணம் - மட்டு.நகரான்

‘இன்று கால்நடை வளர்போர் தங்களது கால்நடைகளை எப்படி வளர்ப்பது, தமது பொருளாதாரத்தினை எவ்வாறு முன்னேற்றுவது என்பதற்கான வழிதெரியாத நிலையிலேயே இருக்கின்றனர்.

கால்நடை வளர்ப்புக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு பயிர்செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களினால் இவ்வாறு அபகரிக்கப்பட்டு பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாங்கள் அனைத்துத் தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம், அனைத்து அரசியல்வாதிகளையும் அழைத்து காட்டியிருந்தோம். சிலர் எங்களது பண்ணையாளர்களை வைத்து குளிர்காயும் நிலையே இருக்கின்றதே தவிர, எங்களுக்கான எந்தவிதமான தீர்வும் இதுவரையில் கிடைக்கவில்லை.

கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை இன்று காடுகளில்தான் மேய்த்து வருகின்றனர். கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்பட்டு விட்டன. இனிவரும் காலங்கங்கில் மாடுகளை வளர்க்க முடியாமல் அதனை விற்றுவிட்டு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இன்று தினமும் கால்நடைகள் கொல்லப்படுகின்றன. கால்நடைகள் களவாடப்படுகின்றன. மேய்ச்சல் தரைக்காணியை அபகரித்து விவசாயம் செய்யும்போது அந்த மேய்ச்சல் தரையினை நோக்கி மாடுகள் செல்லும் நிலையேற்படுகின்றது. அவ்வாறு செல்லும் மாடுகள் திரும்பி வருவதில்லை. இது தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டாலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. தினமும் மாடுகளை இழக்கும் நிலையே இருந்து வருகின்றது.

காலங்காலமாக தமது வாழ்வாதாரத்தினை கால்நடை மூலம் வளப்படுத்திவந்த ஒரு பரம்பரையே அழியும் நிலையுருவாகியுள்ளது. எங்களாலும் ஓரளவுதான் போராட முடியும். நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. அதன்மூலமாவது எங்களுக்கு ஒரு நல்ல தீர்வு வரும் என்று நம்புவோம்’ என்றார்.

IMG 8865 மட்டு. மேய்ச்சல் தரைப் பிரச்சினை: சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய இறுதித் தருணம் - மட்டு.நகரான்

‘நாங்கள் எங்கள் மாவட்டத்தில் எங்கள் மண்ணில் தொழில் செய்கின்றோம். ஆனால் பொலநறுவையில் இருக்கின்ற வனஇலகாவினர் வந்து எங்களை கைது செய்து செல்கின்றனர். நாங்கள் காலங்காலமாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தும் எங்கள் நிலத்துக்குள் நாங்கள் இருக்கும்போது காடுகளை சேதப்படுத்துவதாக எங்களை வந்து கைதுசெய்து செல்கின்றனர். அவர்கள் பொலநறுவையில் உள்ள நீதிமன்றங்களிலும் அம்பாறையில் உள்ள நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்கின்றனர். ஒரு தடைவ நீதிமன்றம் சென்று வருவதற்கு 20ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவாகின்றது. இவ்வாறான துன்ப நிலையிலேயே நாங்கள் இருந்து வருகின்றோம். இது தொடர்பில் அதிகாரிகள் தொடக்கம் அரசியல்வாதிகள் வரையில் தெரிவித்திருக்கின்றோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லையென’ இங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சா.தம்பிப்பிள்ளை என்னும் கால்நடை வளர்ப்பாளர் கவலையுடன் தெரிவிக்கின்றார்.

‘எங்களின் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தினை தாங்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகளை காணமுடியவில்லை. வாக்குகளை வாங்கி வெற்றிபெற்ற பின்னர் அவர்களை சந்திக்க முடியவில்லை. மூன்று தடைவ இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம் சென்று இங்குள்ள பிரச்சினை தொடர்பில் கதைத்துள்ளோம். ஆனால் பாராளுமன்றத்தில் ஒரு தடைவகூட இந்த மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக கதைக்கவில்லை. தங்களது பதவி பறிபோய்விடும் என்றுதான் இவர்கள் வாய்மூடி மௌனிகளாக உள்ளனர். தமிழர்களுக்காக என்றைக்கும் போராடுவேன் என்று என்னிடம் சொன்னார். ஆனால் இன்று அதனை மறந்துவிட்டார். எங்களிடம் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேற்றுமையில்லை. எங்களை வாழவிடுங்கள் என்றுதான் கேட்கின்றோம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து வாழ்வோம். நாங்கள் போராட முடியாது. ஆனால் எங்களுக்கான நீதிவேண்டும்.” என இங்கு நீண்டகாலமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் இ.சாமித்தம்பி என்னும் கால்நடை வளர்ப்பாளர் கவலை தெரிவிக்கின்றார்.

IMG 8676 மட்டு. மேய்ச்சல் தரைப் பிரச்சினை: சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய இறுதித் தருணம் - மட்டு.நகரான்
நாங்கள் இப்பகுதியில் கால்நடை வளர்ப்பதனால் இங்குள்ள பல குடும்பங்கள் வாழுகின்றன. எங்களது கால்நடை பண்ணையாளர்களிடம் சுமார் 2500இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் செய்கின்றனர். இங்கு பெறப்படும் பால் மூன்று பகுதிகளுக்கு செல்கின்றது. ஒரு பகுதி மில்கோ நிறுவனத்திற்கு செல்கின்றது. மறுபகுதி தனியார் துறையினருக்கு வழங்கப்படுகின்றது. இன்னுமொரு பகுதி தயிர் உற்பத்தியாளர்கள், நெய் உற்பத்தியாளர்களுக்கு செல்கின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தினை தலைமை தாங்கும் பெண்கள் உள்ளனர். இன்று மேய்ச்சல் தரையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் இவர்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று கால்நடை பண்ணையாளர்கள் பாலை பெறமுடியாத நிலையே இருக்கின்றது. கால்நடைக்கான மேய்ச்சல் தரைகள் முற்றாக அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கால்நடைகளை காடுகளில் வளர்க்கும் நிலையே இருக்கின்றது. கால்நடைகள் தினமும் கொல்லப்படுகின்றன. கொல்லப்படும் கால்நடைகளை தடம் தெரியாமல் புதைக்கின்றனர். சிறிய மாடு கன்றுகளை கடத்திச் செல்கின்றனர். நாங்கள் பொலிஸ் நிலையங்களில் முறையிட்டும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாடுகள் பயிர்நிலங்களுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கும் பொலிஸார் எமது கால்நடைகள் கொல்லப்படுவது, கடத்தப்படுவது குறித்து பாராமுகமாக இருப்பதாக கால்நடை பண்ணையாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் பொன்னுத்துரை என்பவர் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை பிரச்சினையென்பது யாரும் சிறிய பிரச்சினையைபோல் பார்க்கும் நிலை மாற்றப்பட வேண்டும். இன்று ஓரு சமூகத்தின் ஜனாசா எரிப்புக்கு அனைவரும் இணைந்து குரல் கொடுக்கும்போது ஒரு இனத்தின் முதுகெலும்பாக இருக்கின்ற கால்நடை வளர்ப்பாளர்கள் குறித்து கரிசனம் காட்டாமல் இருப்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

இந்த கால்நடை வளர்ப்பாளர்களின் மேய்ச்சல் காணிகள் இன்று திட்டமிட்ட வகையில் இன்னுமொரு இனக்குழுமத்தினால் அபகரிக்கப்பட்டு அந்த இனத்திற்கு எதிராக கடுமையான சித்திரவதைகள் நிகழும்போது அதனை உலகம் வேடிக்கை பார்ப்பது என்பது மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புகள் குறித்து சந்தேகம் கொள்ள வைக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கால்நடை வளர்ப்பாளர்களை பாதிக்கச்செய்து ஒரு இனத்தினை வாழவைக்கும் வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடுகள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அந்த மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வரவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.