யாழ். முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை (ஒளிப்படங்களுடன்)

129
184 Views

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டதானது, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இலங்கை அரசின் இந்த தமிழின விரோத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வைகோ தலைமையில் சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பாக வைகோ தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, விசிகவின் வன்னி அரசு உள்ளிடட பல்வேறு கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது, எங்கள் நாடு தமிழ்நாடு! சிங்களனே வெளியேறு! என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இலங்கை தூதரகம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here