நினைவுச் சின்னங்கள் அரசுக்கு அச்சத்தைக் கொடுப்பது ஏன்? – அகிலன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடைபெறும் நிகழ்வுகள் மூன்று செய்திகளை எமக்குத் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றன.

ஒன்று – தமிழ் மக்களிடம் காணப்படும் கடந்தகால நினைவுகளை – குறிப்பாக போருடன் சம்பந்தப்பட்ட நினைவுகளை – முழுமையாக அழித்துவிட வேண்டும் என்பதில் கோட்டாபய ராஜபக்‌ச அரசாங்கம் தீவிர முனைப்பாக இருக்கின்றது என்பது.

இரண்டு – இவற்றைத் தாமாகச் செல்வதைவிட, தமக்குச் சேவகம் செய்யக் கூடிய அதிகாரிகள் மூலமாகச் செய்துவிடுவது இலகுவானது – சர்வதேச அரங்கில் தமக்குப் பிரச்சினையைக் கொடுக்காது – என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருப்பதுடன், அதனை நிறைவேற்றுவதற்கான பொறிமுறைகளையும் வைத்திருக்கின்றார்கள் என்பது.

மூன்று – மக்கள் மத்தியில் உருவாகக்கூடிய எதிர்ப்புக்களை இராணுவம், அதிரடிப்படையைக் கொண்டு அடைக்கிவிட முடியும். அதிலும் தற்போதைய கொரோனா கால தனிமைப்படுத்தல் சட்டங்களை இதற்குப் பயன்படுத்த முடியும் என்பதையும் அரசாங்கம் புரிந்துகொண்டிருக்கின்றது என்பது.

தமது இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்க இயந்திரம் செம்மையாகத் திட்டமிட்ட முறையில் செயற்படுகின்றது என்பதற்கு, யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் வெள்ளிக்கிழமை இரவோடிரவாக நிர்மூலமாக்கப்பட்டமையும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் சம்பவங்களும் உள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம், இராணுவம், பொலிஸ் என்பவற்றின் துணையுடன்தான் இதனைச் செய்திருக்கின்றது.

நினைவுச் சின்னமும், அரச அழுத்தங்களும்

நினைவுச் சின்னங்கள் அரசுக்கு அச்சத்தைக் கொடுப்பது ஏன்? - அகிலன்

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி. யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் அவர்களின் உறவுகளுக்காக 2018 மே மாதம் அமைக்கப்பட்டது. ஆனால், முழுமையாக்கப்படவில்லை. அது கட்டப்பட்ட போதே பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி மாணவர் தரப்பினால் அது நிர்மாணிக்கப்பட்டதால், அதை நிறுத்தும்படி அப்போதைய துணைவேந்தர் விக்னேஸ்வரனுக்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர் அதனை மாணவர்களுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, அது அமைக்கும் வேலை 2019 பெப்ரவரியில் நிறுத்தப்பட்டது. எனினும் 2019 ஏப்ரலில் அதன் பல பகுதிகளை வெளியே தயாரித்து எடுத்து வந்து உள்ளே பொருத்தி, நிர்மாணம் பூர்த்தி செய்யப்பட்டது. அங்கேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் நினைவு நிகழ்வுகளும் இடம்பெற்று வந்தன. அந்த நினைவுத் தூபியை அகற்றும்படி போட்ட மேலிட உத்தரவை நிறைவேற்றத் தவறியமையினாலேயே முன்னாள் துணைவேந்தர் விக்கினேஸ்வரன் கொழும்பு ஆட்சிப் பீடத்தினால் இடைவழியில் பதவி பறிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்.

இப்போதைய புதிய துணைவேந்தர் பதவியேற்று சில மாதங்களுக்குள்ளேயே அந்த வேலை மிக இரகசியமாகத் திட்டமிட்டு, கனகச்சிதமாக கொழும்பின் உத்தரவை அவர் செய்து முடித்திருக்கின்றார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும், இராணுவத் தளபதியும் நினைவுச் சின்னம் அகற்றப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பு இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். இது துணைவேந்தரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதுதான் அவர்களுடைய கருத்து.

நினைவுச் சின்னங்கள் அகற்றப்படக்கூடாது என்பதும், நினைவேந்தல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஜெனீவாவிலும் அது அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. தற்போது ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், அதனைக் கேள்விக்குள்ளாக்க அரசாங்கம் விரும்பவில்லை. அதனால், இந்த விவகாரத்தில் தான் நேரடியாகச் சம்பந்தப்படாமல், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் மூலமாகவே தனது காரியத்தை அரசாங்கம் சாதித்துக் கொண்டது. பதவி நீடிப்பையும், சலுகைகளையும் எதிர்பார்க்கும் துணை வேந்தர் அதற்கு துணைபோயிருக்கின்றார்.

போரின் பின்னரும் தொடரும் அழிப்பு

2009 மே மாதம் போர் முடிவடைந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும், தமிழருக்கு எதிரான இன அழிப்பு அதற்குப் பின்னர் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டது. காணி அபகரிப்பு, இராணுவமயமாக்கல், தொல்பொருட் திணைக்களத்தைப் பயன்படுத்தி சிங்களமயமாக்கல் என்பன களத்தில் இடம்பெற்ற அதேவேளையில், அரசியலில் தமிழ்த் தேசிய நீக்கம், நினைவுகளை அழித்தல் என்பனவும் இனவாத நிகழ்ச்சி நிரலில் முக்கிய அம்சங்களாக இருந்தன. சலுகை அரசியல் மூலம், அரசியலில் தமிழ்த் தேசிய நீக்கம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளையில் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கக்கூடிய நினைவுகளை அழித்தல் – அதற்காக நினைவுச் சின்னங்களை அழித்தல் என்பன போர் முடிவடைந்த உடனடியாகவே ஆரம்பமாகி விட்டது. முதலாவதாக மாவீரர் துயிலும் இல்லங்கள் புல்டோசர்களால் அழிக்கப்படடது. துயிலும் இல்லங்கள் மக்கள் மத்தியில் தமது தேசிய உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடியவை என அரசாங்கம் கருதுவது இதற்குக் காரணம். மாவீரர்களை நினைவுகூருவதையும் அரசாங்கம் தடுத்தது.

அதேபோல, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற கொடூரமான இனப்படுகொலை நினைவுகூரப்படுவதையும் அரசாங்கம் விரும்பவில்லை. கொத்துக்கொத்தாக ஆயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலைக்குள்ளானமையை அரசாங்கம் தொடர்ந்தும் மறைத்தே வருகின்றது. சர்வதேச சமூகத்தின் முன்பாக அது அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் படுகொலைகளை நினைவுகூரக் கூடிய சின்னம் ஒன்று பல்கலைக்கழகம் ஒன்றில் இருப்பது அதற்கான வரலாற்று ஆவணமாக இருக்கும் என்பதுதான் அரசின் அச்சம். அதனைத் தானே அகற்றாமல், பல்கலைக்கழக துணைவேந்தரைக் கொண்டு அதனை அகற்றியிருப்பது அரசின் உபாயத்துக்குக் கிடைத்த ஒரு வெற்றி.

உலகில் எங்கும் இல்லாத காட்டுமிராண்டித் தனம்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்தது கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கான நினைவுத் தூபிதான். போரில் கொல்லப்பட்ட எதிரியின் நினைவுக் கல்லைக்கூட பாதுகாப்பதுதான் போரியல் நாகரீகம். சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையும் அதுதான். கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் நினைவுத் தூபியை இரவோடிரவாக இராணுவப் பாதுகாப்புடன் புல்டோசர்களைக் கொண்டு நிர்மூலமாக்குவது என்பது உலகின் எந்த நாட்டிலும் இல்லாத காட்டுமிராண்டித்தனமான ஒரு நடைமுறை. படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவேந்த விடாமல் தடுப்பதும் இனப்படுகொலையின் ஒரு அம்சம்தான்.

“எந்தத் தலைவர்களின் உத்தரவு காரணமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்களோ அவர்களின் நினைவுத்தூபியை சிதைப்பதற்கு இரவின் இருளில் இயந்திரங்களை அந்தத் தலைவர்களே அனுப்புவது இழிவானது – இனவெறி -கொடுரமானது” என கிரவுண்ட் வியுஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் அமாலினி டி சய்ரா ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். சிங்கள புத்தஜீவிகள் மத்தியில் கூட இந்தச் சம்பவம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அவரது கருத்தின் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகள் இதனை கடுமையாகக் கண்டிக்கின்றார்கள். குறிப்பாக, ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சின்னங்கள் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் தற்போதும் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் என யாரும் குரல் கொடுக்கவில்லை. தமிழர்கள் தம்மீதான படுகொலைகளை நினைவுகூருவதும், அதற்கான சின்னங்களை வைத்திருப்பதும்தான் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதற்குக் காரணம்; இனப்படுகொலையின் சாட்சியங்களாக அவை இருப்பதும். அடுத்த தலைமுறைக்கு அந்தத் தகவலைக் கொண்டுசெல்வதும்தான்.